“சுவாதியின் பேஸ்புக் பக்கத்தை அவரது உறவினர்களே முடக்கினர்”: போலீஸ் திடுக் தகவல்!

“ராம்குமாரும் சுவாதியும் பேஸ்புக் நண்பர்கள் அல்ல. சுவாதி கொலை செய்யப்பட்ட பிறகு, மற்றவர்கள் சுவாதியை பேஸ்புக்கில் தேடியது போல் ராம்குமாரும் தனது பேஸ்புக் பக்கத்தில் தேடியுள்ளார். இதைத் தவிர வேறு எந்த ஆதாரமும் ராம்குமாரின் பேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்ததில் கிடைக்கவில்லை” என்று ராம்குமாரின் வழக்கறிஞர் ராம்ராஜ் கூறியுள்ளார்.

“சுவாதியின் பேஸ்புக் பக்கத்தை போலீஸ் முடக்கவில்லை. சுவாதியின் உறவினர்கள் தான் முடக்கினர்” என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

.இது குறித்து tamil.thehindu.com வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 24-ம் தேதி காலை ஐடி ஊழியர் சுவாதி கொல்லப்பட்ட வழக்கில் ராம்குமாரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் புழல் சிறையில் உள்ள ராம்குமாரின் பேஸ்புக் பக்கத்தில் அவருடைய பெயரிலேயே “ஸ்வாதிய அறஞ்சவன் எவன்டா” என்ற தலைப்பில் பல்வேறு கேள்விகளுடன் ஒரு வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த பதிவில் வழக்கறிஞர் ராம்ராஜ் மூலமாக புழல் சிறையில் ராம்குமாரிடமிருந்து அவருடைய பேஸ்புக் பாஸ்வேர்ட் வாங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவை 450க்கும் மேற்பட்டோர் பகிர்ந்துள்ளனர்.

இது தொடர்பாக வழக்கறிஞர் ராம்ராஜிடம் கேட்டபோது, “ராம்குமாருக்கு நான் மட்டும் வழக்கறிஞர் அல்ல. 17 பேர் கொண்ட வழக்கறிஞர்கள் குழு உள்ளது. ஆதாரங்களை திரட்டுவதற்காக சிறையில் ராம்குமாரை சந்தித்தபோது அவருடைய பேஸ்புக் பாஸ்வேர்டை வாங்கினேன். அந்த பாஸ்வேர்ட், குழுவினரிடம் கொடுக்கப்பட்டது. ராம்குமாரின் பேஸ்புக் பக்கத்தில் நான் எந்த பதிவையும் போடவில்லை. ராம்குமாரும் சுவாதியும் பேஸ்புக் நண்பர்கள் அல்ல. சுவாதி கொலை செய்யப் பட்ட பிறகு, மற்றவர்கள் சுவாதியை பேஸ்புக்கில் தேடியது போல் ராம்குமாரும் தனது பேஸ்புக் பக்கத்தில் தேடியுள்ளார். இதைத் தவிர வேறு எந்த ஆதாரமும் ராம்குமாரின் பேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்ததில் கிடைக்கவில்லை” என்றார்.

இது பற்றி போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “சுவாதியின் பேஸ்புக் பக்கத்தை போலீஸ் முடக்கவில்லை. சுவாதியின் உறவினர்கள் தான் முடக்கினர். ராம்குமாரின் பேஸ்புக் பக்கத்தையும் போலீஸ் முடக்காது. ராம்குமாரை சேர்ந்தவர்கள் தான் முடக்க வேண்டும்” என்றார்.

இவ்வாறு tamil.thehindu.com செய்தி வெளியிட்டுள்ளது.

சுவாதி கொலையுண்ட நிகழ்வு ஏற்படுத்தியிருந்த அத்தனை பதைபதைப்புகளுக்கு இடையிலும், அத்தனை துயரத்துக்கு மத்தியிலும், அவரது குடும்பத்தினர் அல்லது உறவினர்கள், சுவாதியின் பேஸ்புக் பக்கத்தை யாரும் பார்த்துவிடக் கூடாது என்று அவசர அவசரமாக உடனே முடக்கியது ஏன் என்று தெரியவில்லை.