மதம் மாறி திருமணம் செய்ய முயன்றதால் சுவாதி கொலை: திருமாவளவன் சந்தேகம்!

மதம் மாறி திருமணம் செய்ய முயன்றதால் தான் சுவாதி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு தொடர்பாக பண்ருட்டி நீதிமன்றத்தில் தொல்.திருமாவளவன் இன்று (திங்கட்கிழமை) ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுவாதி கொலை வழக்கில் ஏராளமான சந்தேகம் எழுந்துள்ளதாகவும், ஒவ்வொரு நாளும் கசிந்து வரும் தகவல்களை புறந்தள்ள முடியாது என்றும் குறிப்பிட்டார்.

சுவாதி கொலை ஒருதலை காதல் கொலை அல்ல என்றும், அது சாதி ஆணவக் கொலை என்றும் பேச்சுகள் எழுவதாக குறிப்பிட்ட திருமாவளவன், மதம்விட்டு மதம் திருமணம் செய்வதற்கான முயற்சி நடந்தபோது இந்த கொலை நடந்ததாகவும் சந்தேகம் தெரிவித்தார். சுவாதி முகநூல் விபரங்கள் இன்னும் அதிர்ச்சி அளிக்கும் பல தகவல்களை தருகின்றன என்றும் அவர் கூறினார். வழக்கில் உள்ள சந்தேகங்களை களைய சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் அப்போது திருமாவளவன் குறிப்பிட்டார்.