பொது சமூகத்தின் கள்ள மவுனத்தை உடைக்கும் முதல் சினிமா ‘மாவீரன் கிட்டு’!

ஒரு படைப்பு சமரசம் இன்றி துணிச்சலுடன் உண்மையை பேசினால், அதுதான் நீதியின் கலை ஆன்மா என்பேன். அந்த ஆன்மாவுக்கு சொந்தக்காரன் சுசீந்திரன். ‘மாவீரன் கிட்டு’ தமிழ் சமூகத்தின் சாதி கோர முகத்தை கூறு போட்டு வைத்து உள்ளது.

பொது பாதையில் தலித்துகளின் பிணத்தை எடுத்துச் செல்ல ஆதிக்க சாதியினர் எதிர்ப்பு என்கிற காட்சியுடன் படம் தொடங்குகிறது. அது முதல் ஆதிக்க சாதியினரும், அரசும், தலித் மக்கள் மீது நடத்துகிற வன்மத்தை வாழ்வியலோடும் போராட்ட உணர்வோடும் தியாகத்தோடும் நகர்கிறான் ‘மாவீரன் கிட்டு’.

ஒரு சமூகத்தின்  வலியைக் கொண்டு, பொது சமூகத்தின் கள்ள மவுனத்தை உடைக்கும் முதல் சினிமா ‘மாவீரன் கிட்டு’.

ஆணவக் கொலை, தீண்டாமை, வன்கொடுமை, காவல் சித்ரவதை, உரிமைகள் பறிப்பு என்று தலித்துகள் எதிர்கொள்ளும் அணைத்து சாதியக் கொடுமைகளும் படத்தில் இடம் பெற்று உள்ளன.

“அநீதியை எதிர்த்தால் ‘திமிரு’ என்கிறான். திருப்பி அடிக்கணும்” என்கிற  அரசியல் வசனம் இருந்தாலும், உறுதியான போராட்டம் மற்றும் தியாகத்தால் வெல்லுகின்றனர் மக்கள்.

ஒரே ஒரு  பிழை. மனித உரிமை பாதுகாப்பு சட்டம் 1993ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டு, அதன் பிறகுதான் மனித உரிமை ஆணையங்கள் நிறுவப்பட்டன. ஆனால் கதையில் 1987 -1989 கால கட்டத்தில் மனித உரிமை ஆணையங்கள் இருப்பது போன்ற வசனம் வருகிறது.அதை தவிர்த்து இருக்கலாம்.

பரவாயில்லை. உங்களை அணைத்துப் பாராட்டு தெரிவிக்கிறேன் சுசீந்திரன். ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும், வாழ்வியலையும் முழுமையாகக் காட்டிய முதல் தமிழ் சினிமா.

விரைவில் மதுரைக்கு அழைக்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக அழைக்கிறேன்.

எவிடன்ஸ் கதிர்

 

 

Read previous post:
0a1a
மாவீரன் கிட்டு – விமர்சனம்

ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுக் கிடக்கும் தலித் மக்கள் மீதான சுரண்டலும், அடக்குமுறையும் ‘நவநாகரிக சமூக அமைப்பு’ என பீற்றப்படும் ‘இந்துத்துவ கார்ப்பரேட் முதலாளிய இந்தியா’வில் தொடருவது மட்டுமல்ல,

Close