‘சர்கார்’ மறுதணிக்கை: இலவச பொருட்களை தீயில் போடும் தீய காட்சி நீக்கம்!
விஜய் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், கடந்த தீபாவளியன்று வெளியான படம் ‘சர்கார்’. இப்படத்தில், தமிழக அரசு வழங்கிய இலவச பொருட்களான மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் போன்றவற்றை தீயில் தூக்கிப் போடுவதாக ஒரு காட்சி உள்ளது. இந்த காட்சியில் இயக்குனர் முருகதாஸே ஒரு மிக்ஸியைத் தூக்கி வந்து தீயில் போடுவார்.
இதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அரசு இலவசமாக வழங்கும் சமூக நலத் திட்டங்கள் பற்றி எந்த புரிதலும் இல்லாமல், அவற்றுக்கு எதிராக இயக்குனர் முருகதாஸ், எழுத்தாளர் ஜெயமோகன், நடிகர் விஜய் ஆகியோர் அரைவேக்காட்டுத்தனமாக இக்காட்சியை வைத்திருப்பதாக விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில், இப்படத்தில் வில்லியாக நடிக்கும் வரலட்சுமி சரத்குமாருக்கு, ஜெயலலிதாவின் இயற்பெயரான ‘கோமளவல்லி’ பெயர் சூட்டப்பட்டிருக்கிறது என தமிழக அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் ஆட்சேபித்தனர். இதை நீக்கக் கோரி ‘சர்கார்’ திரையிடப்படும் பல திரையரங்குகள் முன் அதிமுகவினர் போராட்டம் நடத்தினார்கள். திரையரங்குகள் தாக்கப்பட்டன. விஜய் பேனர்கள் கிழித்தெறியப்பட்டன. காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
இதனால் திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் இப்படத்தின் வினியோகஸ்தரான தேனாண்டாள் பிலிம்ஸாரிடமும், இப்படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து ஆட்சேபத்திற்கு உரிய சில காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்க படக்குழுவினர் ஒப்புக் கொண்டனர்.
அதன்படி சில காட்சிகள் மற்றும் வசனங்கள் நீக்கப்பட்டு, மறுதணிக்கை செய்யப்பட்டு, படக்குழுவினருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.
படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் குறித்த தகவல் தணிக்கைச் சான்றிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், இலவசங்களை தீயிட்டு எரிக்கும் காட்சி நீக்கப்பட்டுள்ளது என்றும், ‘கோமளவல்லி’ என்று அழைக்கும் வசனங்கள் மியூட் செய்யப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
இது தவிர, படத்தில் டெங்கு கொசு பற்றி விஜய் பேசும் ‘பொதுப்பணித்துறை’ என்ற வார்த்தையும், ‘56 வருஷம்’ என்ற வசனமும் மியூட் செய்யப்பட்டுள்ளன.
இச்சான்றிதழில் மத்திய தணிக்கைத்துறை அலுவலர் லீலா மீனாட்சி கையொப்பமிட்டுள்ளார்.