நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் கொடிப்பாடல் அறிமுகம்!

கடந்த 32 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவை தனது பக்கம் கட்டிப் போட்டு படிப்படியாக உயர்ந்து தனக்கென தனி இடத்தை பிடித்து முத்திரை பதித்த நடிகர் விஜய், தனது அடுத்த நகர்வாக கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியைத் துவங்கினார்.

அடுத்த கட்ட நடவடிக்கையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் கட்சியின் கொடி அறிமுகம் மற்றும் கொடிப்பாடல்  அறிமுக விழா, அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் இன்று (22-08-2024) காலை நடைபெற்றது.

விழாவுக்கு விஜய் வந்தவுடன் பொதுச் செயலாளர் வரவேற்புரையாற்றினார். பின்னர் விஜய்யுடன் சேர்ந்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து கட்சிக் கொடியை அறிமுகம் செய்துவிட்டு, தலைமை நிலையச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள கம்பத்தில் கொடியை விஜய் ஏற்றி வைத்தார்.

பின்னர் கட்சிக் கொடிப் பாடல் அதிகாரப்பூர்வமாக ஒளிபரப்பப்பட்டது. அதனைத்தொடர்ந்து விஜய்  தலைமையுரையாற்றி, இவ்விழாவிற்கு வந்து வாழ்த்திய தனது தாய், தந்தைக்கும் மற்றும் விழாவிற்கு வந்து சிறப்பித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் தாஹிரா நன்றியுரை ஆற்றினார்.