“குழந்தைக்கு ‘தைமூர்’ என்று பெயர் வைத்தால் இங்கு யார் குடி மூழ்கிவிட போகிறது?”

இரண்டாவது உலக யுத்தத்தின்போது, பெலோருஷ்யாவில் மறுபடியும் அந்த கொடூரமான காண்டவ பர்வம் நிகழ்ந்தது. ஒட்டுமொத்த ஊர் மக்களையும் ஒரு கட்டிடத்திற்குள் தள்ளி அவர்களை ஜெர்மானிய இராணுவம் தீக்கு இரையாக்கியது.

இதை தூரத்திலிருந்து பார்த்த சிறுவன், தப்பி ஓடி, ருஷ்ய இராணுவத்துடன் சேர்ந்து, துப்பாகி ஏந்தி போரில் ஈடுபடுகிறான். இறுதியில், ஜெர்மானிய இராணுவம் முறியடிக்கப்படுகிறது. இதுவே எலம் கிளிமோவின் – கம் அண்ட் ஸீ (1985) – என்ற அழுத்தமான படத்தின் காட்சிகளிலும் கதையமைப்பிலும் வரும் ஒரு முக்கியமான சரடு.

படத்தின் இறுதியில் வரும் படுவேகமான மாண்டாஜில், அந்த சிறுவனின் கண்களுக்கு எதிரே தோன்றும் ஹிட்லரின் பிம்பங்களை ஒவ்வொன்றாக சுட்டு நொறுக்கிக்கொண்டே போவான். இறுதியில் ஹிட்லர் குழந்தையாக இருந்தபோது எடுத்த பிரேம் போட்ட புகைப்படம் தோன்றும். சட்டென்று சுடுவதை நிறுத்திவிட்டு துப்பாக்கியை முடக்குவான். அத்துடன் அந்த திரைப்படம் முற்றுப்பெறும்.

மகாபாரதத்தில் காண்டவ பர்வத்தில் ஒரு மாபெரும் வனத்தையும், அதில் உயிர்வாழும் மக்களையும், விலங்குகளையும் மற்ற உயிரினங்களையும் கிருஷ்ணனும், அர்ஜுனனும் அக்னிக்கு இரையாக்குவார்கள்.

ஆம், உலகில் எல்லா இடங்களிலும் பிரம்மாண்டமான ராஜ்யங்கள் பேரழிவின் வழியாகவே உருவாகின.

குழந்தைக்கு கிருஷ்ணா, அர்ஜுனா, விஜய் என்று பெயர் வைக்கும்போது, அதற்கு தைமூர் என்று பெயர் வைத்தால் இங்கு யார் குடி மூழ்கிவிடப் போகிறது?

VENKATESH CHAKRAVARTHY