சவுந்தர்யா ரஜினிகாந்த் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு!

நடிகர் ரஜினிகாந்த் – லதா ரஜினிகாந்த் தம்பதியரின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த். இவர் வெங்கட் பிரபு இயக்கிய ‘கோவா’ படத்தை தயாரித்தவர். ரஜினி நடித்த ‘கோச்சடையான்’ படத்தை இயக்கியவர். தற்போது தனுஷ் – அமலா பால் நடிக்கும் ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தை இயக்கி வருபவர்.

இவருக்கும் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாருக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களாக சவுந்தர்யாவிற்கும், அவரது கணவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்வதாக தகவல்கள் வெளியாகின. இத்தகவல்கள் உண்மை தான் என்று சவுந்தர்யாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில், சவுந்தர்யாவும், அவரது கணவர் அஸ்வினும் சென்னை மாவட்ட முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, பரஸ்பரம் சம்மதத்துடன் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவில், ‘‘ இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பல மாதங்களாக பிரிந்து வாழ்கிறோம். பெரியவர்கள் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியும் எங்களுக்குள் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்துப் பெற்று பிரிந்து வாழ விரும்புகிறோம். இதற்காக சொத்து மற்றும் குழந்தை தொடர்பான பிரச்சினைகளிலும் பரஸ்பரமாக பேசி தீர்த்துவிட்டோம். எனவே எங்களுக்கு விவாகரத்து வழங்க வேண்டும்’’என்று கோரப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.