யாழ்ப்பாணம் செல்லும் திட்டத்தை கைவிட்ட ரஜினிக்கு தலைவர்கள் பாராட்டு!

யாழ்ப்பாணம் செல்லும் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு வைகோ, தொல்.திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘2.0’ படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன், இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்ற சர்ச்சை நிலவி வருகிறது.

சர்ச்சைக்குரிய சுபாஷ்கரன் தனது ஞானம் அறக்கட்டளை சார்பில் வவுனியாவில் கட்டியுள்ள 150 புதிய வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வீடுகளை வழங்க ரஜினிகாந்த் சம்மதம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ரஜினிகாந்த் யாழ்ப்பாணம் செல்லக் கூடாது என்று வைகோ, தொல்.திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இந்த வேண்டுகோளை ஏற்று ரஜினிகாந்த், தனது யாழ்ப்பாணம் பயணத்தை ரத்து செய்வதாக இன்று அறிவித்தார்.

இது குறித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில், “ரஜினியிடம் தொலைபேசியில் கூறியதை நான் விளம்பரம் செய்யவில்லை. விளம்பரத்துக்காக ரஜினிகாந்தின் பயணத்தை அரசியலாக்கவில்லை. ரஜினி தவறான தகவல்கள் அடிப்படையில் இலங்கை செல்லவிருந்தார். அதை ரத்து செய்திருப்பதை வரவேற்கிறேன். ரஜினி ஒரு மாபெரும் மனிதர்” என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறுகையில், “இலங்கை பயணத்தை ரஜினிகாந்த் ரத்து செய்தது மகிழ்ச்சி தருகிறது. விளம்பரம் தேடுவதற்காக நாங்கள் யாரும் தலையிடவில்லை. ரஜினிகாந்த் வந்தால் பாதகமாக அமையும் என இலங்கைத் தமிழர்கள் கூறினர். ரஜினி மீது எங்களுக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை”என்றார்.

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கூறுகையில், “இலங்கை பயணத்தை ரத்து செய்ததற்கு ரஜினிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முள்ளிவாய்க்கால் துன்பங்களை ரஜினிகாந்த் நேரில் கேட்டறிய வேண்டும்” என்றார்.

அ.தி.மு.க சசிகலா அணியின் செய்தித் தொடர்பாளர் வைகை செல்வன் கூறுகையில், “தமிழர்களின் உணர்வை புரிந்து பயணத்தை ரஜினி ரத்து செய்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

 

Read previous post:
0
தமிழக தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று யாழ்ப்பாணம் பயணம் ரத்து: ரஜினி அறிவிப்பு!

“நண்பர் தொல். திருமாவளவன் ஊடகங்களின் மூலமாகவும், வைகோ தொலைபேசி மூலமாகவும், வேல்முருகன் நண்பர் மூலமாகவும் பல அரசியல் காரணங்களை முன்வைத்து இந்த (யாழ்ப்பாணம்) நிகழ்ச்சியில் நான் கலந்துக்கொள்ளக்

Close