“எதிர்த்த வீட்டு காலிஃப்ளவருக்கு” ரூட்டு விடும் காளி வெங்கட்!

காதல் மயக்கம் வந்துவிட்டால், உடனே தான் காதலிக்கும் பெண்ணை “பூவே”, “இதழே”, “இலையே”, “வேரே” என்றெல்லாம் மனம் போல் உற்சாகமாய் வர்ணிப்பது ஆண்கள் இயல்பு. இங்கே ஓர் இளைஞர் தன் கனவுக்கன்னியை “காலிஃப்ளவராக” பார்க்கிறார். இதனால் அவர் ஏதோ கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்பவராக இருப்பார் என்று நினைக்க வேண்டாம். அவர் நடிகர் காளி வெங்கட்.

காளி வெங்கட் தனது கனவு தேவதையை நினைத்து, உற்சாகமாகி, “எதிர்த்த வீட்டு காலிஃப்ளவரே…” என பாடும் பாடல், அவர் நடிக்கும் ‘ராஜா மந்திரி’ படத்தில் இடம்பெற்றுள்ளது. ஜஸ்டின் பிரபாகர் இசையில் ஏ.சி.எஸ்.ரவிசந்திரன் இப்பாடலைப் பாடியிருக்கிறார்.

இளமைத் ததும்பும் இப்பாடலின் டீசரை ‘ராஜா மந்திரி’ படக்குழுவினர் முதன்முதலாக அறிமுகப்படுத்துகிறார்கள்.

“ராஜா மந்திரி’ படத்தின் டைட்டிலே, அதன் கதையின் களத்தை குறிப்பிடுவதாக அமைந்திருக்கிறது. அண்ணன் – தம்பி உறவும், அவர்களுக்கு உண்டாகும் காதல் மற்றும் மனதைத் தொடும் சென்டிமெண்ட் அனுபவங்களுமே கதை. படம் பார்க்கும் அனைத்துத் தரப்பினரையும் மகிழ்விக்கக்கூடிய ஒரு முழு பொழுதுபோக்கு அம்சமுள்ள படமாக இது அமைந்திருப்பதை, இதன் விளம்பரக் காட்சிகளைப் பார்த்தாலே புரியும்.  காதலும்,  அதன் கலாட்டாகளும் கலந்து இருந்தாலும், அண்ணன் – தம்பி உறவுக்குள் இருக்கும் அற்புதமான உணர்வுகளுக்கும், சென்டிமெண்ட்களுக்கும் இதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது” என்கிறது படக்குழு.

இயக்குநர் சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவமுள்ள உஷா கிருஷ்ணன், ‘ராஜா மந்திரி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தில் கலையரசன், காளி வெங்கட், ஷாலின் ஸோயா, வைஷாலி, பாலசரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

’எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட்’ என்ற பேனரில் வி.மதியழகன், ஆர்.ரம்யா ஆகிய இருவரும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இவர்களோடு பிரபல ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா தனது பிஜி மீடியா வொர்க்ஸ் நிறுவனம் மூலம் இணைத் தயாரிப்பாளராக களமிறங்கி இருக்கிறார்.

‘ராஜா மந்திரி’ படத்தை, அவ்ரா சினிமாஸ் வருகிற ஏப்ரல் மாதத்தில் உலகெங்கும் திரையிடுகிறது.