எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் – விமர்சனம்

நடிப்பு: ஜே.டி.சக்கரவர்த்தி, லால், ராதிகா சரத்குமார், சரண் சக்தி, பாலசரவணன், ஸ்மேகா மணிமேகலை, காளி வெங்கட், ஜாபர் சாதிக், மைம் கோபி, சமய முரளி மற்றும் சிலர்

எழுத்து & இயக்கம்: டி.சமய முரளி

ஒளிப்பதிவு: கவின் பாஸ்கர்

படத்தொகுப்பு: ஸ்ரீ வாட்சன்

பாடலிசை: சாம் டேனியல்

நடனம்: தினேஷ்

ஸ்டண்ட்: தவசி ராஜ்

கலை இயக்கம்: சிட்டிபாபு

பின்னணி இசை: டி.சமய முரளி

தயாரிப்பு: எஸ்.ஆர் ட்ரீம் ஸ்டூடியோஸ்

பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்

துபாயில் பெரிய கடத்தல் கும்பலின் தலைவராக இருக்கிறார் ’கடத்தல் மன்னன்’ மேத்யூ பாய் (லால்). அவர் அனுப்பும் போதைப் பொருட்கள், தங்கக் கட்டிகள் போன்ற கடத்தல் சரக்குகளை சென்னை எண்ணூர் துறைமுகத்திலிருந்து சுங்கத்துறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் கண்டெய்னர் மூலம் கடத்தி இந்தியா முழுவதும் சப்ளை செய்கிறார் ‘கடத்தல் ஏஜெண்ட்’ லிங்கம் (ஜே.டி.சக்கரவர்த்தி).

சென்னை சேரிப் பகுதியைச் சேர்ந்த தீனா (பாலசரவணன்), அமர் (சரண் சக்தி) ஆகிய இருவரும் நண்பர்கள். இவர்களில், சுங்கத்துறை அலுவலகத்தில் வேலை பார்க்கும் தீனா, ‘கடத்தல் ஏஜெண்ட்’ லிங்கத்துக்கு உதவியாக இருக்கிறார். தீனாவின் நண்பரான அமரும் ‘கடத்தல் ஏஜெண்ட்’ லிங்கத்திடம் வேலைக்கு சேருகிறார்.

சிறிய அளவிலான கடத்தல் சரக்குகளை தானே தனியாகக் கையாள்வதாகச் சொல்லி ‘கடத்தல் ஏஜெண்ட்’ லிங்கத்தின் நம்பிக்கைக்குரியவராக மாறுகிறார் அமர். நண்பர் அமருக்கு உதவியாக இருக்கிறார் தீனா.

இந்நிலையில், துபாயிலிருந்து ரூ.25ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப் பொருளை குஜராத் மாநிலத்திலுள்ள முந்த்ரா துறைமுகத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு, தகவலை ‘கடத்தல் ஏஜெண்ட்’ லிங்கத்துக்குச் சொல்கிறார் ‘கடத்தல் மன்னன்’ மேத்யூ பாய்.

கடத்தல் தொழிலின் செயல்பாடுகளையும் உள் ரகசியங்களையும் தெரிந்துகொண்ட அமரும், தீனாவும், விரைவாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையால் உந்தப்பட்டு, ‘கடத்தல் ஏஜெண்ட்’ லிங்கத்தை விஞ்சும் விதமாக, பெரிய அளவிலான இந்த 25ஆயிரம் கோடி ரூபாய் சரக்கை தாங்களே இறக்கிக் கடத்துவதாகச் சொல்லி, குஜராத்துக்குக் கிளம்பிப் போகிறார்கள். ஆனால், வஞ்சகமும், துரோகமும் நிறைந்த ஓர் ஆபத்தான வலையில் சிக்கிக் கொள்கிறார்கள்.

அதன்பின் என்ன நடந்தது? கடத்தல் கும்பல்களுக்கு இடையிலான மோதலின் விளைவு என்ன? கடத்தல் கும்பல்களை ஒழிக்க நினைக்கும் சுங்கத் துறை உயர் அதிகாரி முரளி கிருஷ்ணா (சமய முரளி) எடுக்கும் நடவடிக்கைகள் என்ன? அமர், பாலசரவணன் கதி என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கு திருப்பங்களுடன் விடை அளிக்கிறது க்ரைம் ஆக்ஷன் த்ரில்லரான ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

அமர் என்ற மைய கதாபாத்திரத்தில் சரண் சக்தி நடித்திருக்கிறார். வாழ்நிலை மற்றும் சூழ்நிலையால் தவறான பாதையில் செல்லும் ஓர் இளைஞனின் சிந்தனைகளையும், செயல்பாடுகளையும் தனது நடிப்பு மூலம் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

அமரின் நண்பர் தீனாவாக பாலசரவணன் நடித்திருக்கிறார். வழக்கமான வசன காமெடிக்கு அப்பால், கதையோட்டத்திற்கு வலு சேர்க்கும் முக்கியமான கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருக்கிறார்.

அமர் கதாபாத்திரத்தின் லவ் ஜோடியாக பவித்ரா என்ற கதாபாத்திரத்தில் வரும் ஸ்மேகா மணிமேகலை, கொடுத்த வேலையை குறைவின்றி செய்திருக்கிறார்.

அமரின் அம்மா சாரதாவாக வரும் ராதிகா சரத்குமார், பவித்ராவின் அண்ணனாக, சுங்கத் துறை அலுவலக பியூன் செல்வமாக வரும் காளி வெங்கட், துபாய் ‘கடத்தல் மன்னன்’ மேத்யூ பாயாக வரும் லால், சென்னை ’கடத்தல் ஏஜெண்ட்’ லிங்கமாக வரும் ஜே.டி.சக்கரவர்த்தி ஆகிய அனுபவம் வாய்ந்த நடிப்புக் கலைஞர்களின் பங்களிப்பு படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

ஜாபராக வரும் ஜாபர் சாதிக், ராஜனாக வரும் மைம் கோபி உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

குஜராத் முந்த்ரா துறைமுகத்தின் நேர்மையான சுங்கத்துறை உயர் அதிகாரி முரளி கிருஷ்ணாவாக வரும் சமய முரளி, பாராட்டும்படி மிரட்டலாக நடித்திருக்கிறார். நிஜ வாழ்க்கையில் முன்னாள் இந்திய வருவாய் பணி (IRS) அதிகாரியாக இருந்த இவரே, தனது அனுபவங்களைக் கொண்டு, கற்பனையும் கலந்து, இப்படத்தை நேர்த்தியாக எழுதி, சிறப்பாக இயக்கியிருக்கிறார். சர்வதேச கடத்தல் கும்பலின் வலிமையான நெட்வொர்க், துறைமுகங்களில் அவர்கள் நடத்தும் தர்பார், இவர்களுக்கு சில சுங்கத்துறை அதிகாரிகளே உதவியாக இருப்பது போன்ற அனைத்து விவரங்களையும் துல்லியமாக எடுத்துரைத்து, யதார்த்தத்துக்கு நெருக்கமாக இதை படைத்துள்ளார். அதனால் இது பெரிய அளவில் சினிமாத்தனம் இல்லாமல் இருப்பது சுவாரஸ்யத்தையும், விறுவிறுப்பையும் கூட்டியுள்ளது. பாராட்டுகள் இயக்குநர் சமய முரளி!

பாடலிசை, பின்னணி இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, ஸ்டண்ட், கலை இயக்கம் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் இயக்குநரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளன.

‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ – க்ரைம் ஆக்ஷன் திரில்லர் விரும்பிகளுக்கு செம விருந்து!

ரேட்டிங்: 3.75/5