ஹைக்கூ – விமர்சனம்
நடிப்பு: ஏகன், ஸ்ரீதேவி அப்பல்லா, ஃபெமினா ஜார்ஜ், அதிர்ச்சி அருண், சுப்பிரமணிய சேது, அதியமான், மைம் கோபி, இந்துமதி மணிகண்டன் மற்றும் சிலர்
எழுத்து & இயக்கம்: யுவராஜ் சின்னசாமி
கூடுதல் திரைக்கதை: ஹரிஹரன் ராம்
ஒளிப்பதிவு: பிரியேஷ் குருசாமி
படத்தொகுப்பு: சக்தி பிரனேஷ் பி
இசை: சித்து குமார்
நடனம்: அனுஷா விஸ்வநாதன்
கலை இயக்கம்: பிரேம் கருத்தமலை
தயாரிப்பு: ‘விஷன் சினிமா ஹவுஸ்’ டாக்டர் டி.அருளானந்து, மேத்யூ அருளானந்து
பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா (டி’ஒன்), அப்துல் நாசர்
‘ஹைக்கூ’ என்பது ஜப்பான் நாட்டில் தோன்றி, உலகெங்கும் பரவிய மிகக் குறுகிய புதுக்கவிதை வடிவம் ஆகும். இது பெரும்பாலும் மூன்றே வரிகளில் எளிய சொற்களையும், ஆழமான கருத்தையும் கொண்டு எழுதப்படும். “ஒரு துளிப் பனியில் ஓர் உலகத்தைப் பார்ப்பதே ‘ஹைக்கூ” என்பார்கள். அதுபோல, 2 மணி 23 நிமிடம் என்ற குறைந்த நேரத் திரைப்படத்தில், உலகம் முழுமைக்கும் பொருந்தக் கூடிய ஆழமான காதல் தத்துவத்தைச் சொல்லியிருப்பதாலோ என்னவோ, இயக்குநர் யுவராஜ் சின்னசாமி தன் திரைப்படத்துக்கு ‘ஹைக்கூ’ என்று பொருத்தமாக பெயர் வைத்திருக்கிறார்.
தன் வாழ்க்கையில் இரண்டு மாறுபட்ட காதல் அத்தியாயங்களைக் கடந்து செல்லும் ஓர் இளைஞனின் சுவாரஸ்யமான கதை தான் ‘ஹைக்கூ’ திரைப்படம்.

நாயகன் மனோ என்ற மனோகரன் (ஏகன்) கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். இவரது அப்பா (மைம் கோபி) சலூன் கடை வைத்திருக்கும் முடிதிருத்துநர். எந்த தொழிலாக இருந்தாலும், அது விருப்பத் தேர்வை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டுமேயொழிய, பிறப்பின் அடிப்படையில் திணிக்கப்பட்ட தொழிலாக இருக்கக் கூடாது என்பது மனோவின் எண்ணம் என்பதால், அவருக்கு தன் அப்பா செய்யும் தொழில் பிடிக்கவில்லை.
மனோ, ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் ‘கோ-எட்’ பொறியியல் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். அவருக்கும் அவரது நண்பர்கள் சிலருக்கும் பெண்களுக்கான டாய்லெட் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள ஆசை. இதனால், கல்லூரியிலுள்ள பெண்களுக்கான டாய்லெட்டுக்குள் மனோ போய் பார்த்து வர, அவரது நண்பர் அதை வீடியோ எடுத்து வாட்ஸ்ஆப் குரூப்பில் போட்டுவிட, அது பெரும் பிரச்சனை ஆகி, மனோ கல்லூரியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்படுகிறார்.
இன்னும் ஒரு வருடம் படித்தால், மனோவின் படிப்பு முடிந்துவிடும் என்ற நிலையில், அவரை சேர்த்துவிட வேறு கல்லூரிகளில் இடம் தேடி அலைகிறார்கள் நண்பர்கள். இறுதியில் ஒரு கல்லூரியில் அவருக்கு இடம் கிடைக்கிறது. அது இதுவரை பெண்கள் கல்லூரியாக இருந்து, நடப்பு கல்வி ஆண்டில் தான் ‘கோ-எட்’ கல்லூரியாக மாறியிருக்கிறது என்பதால் அக்கல்லூரியில் மனோ ஒருவர் மட்டும் தான் மாணவர்; ஏனையோர் அனைவரும் மாணவிகள். இந்த விசித்திரச் சூழல், நிறைய நகைச்சுவை சம்பவங்களுக்கு இடமளிக்கிறது.
இந்நிலையில், மனோவுக்கும், அவருடன் படிக்கும் சக மாணவியான கொடி என்ற பவளக்கொடிக்கும் (ஸ்ரீதேவி அப்பல்லா) இடையில் நட்பு வளர்ந்து, அது காதலாக பரிணமிக்கிறது. கொடியின் அப்பா ஒரு சாதிவெறியர் என்பதோடு, ஆதிக்க இடைநிலைச் சாதி சங்கத்தின் தலைவர் என்பதாலும், மனோவின் அப்பா முடிதிருத்துநர் என்பதாலும், இந்த சாதிப்பாகுபாடு மனோ – கொடி காதலுக்கு பிரச்சனையாக முளைக்கக் கூடும் என்ற எண்ணம் நமக்கு (பார்வையாளர்களுக்கு) ஏற்படுகிறது.
கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகு, சென்னைக்குச் சென்று, வேலை தேடி அலைகிறார் மனோ. அவருக்கு கொடி அடிக்கடி போன் செய்து, ‘வேலை கிடைச்சிருச்சா?” என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார். வேலை கிடைக்காத விரக்தியில் இருக்கும் மனோ, கொடியின் நச்சரிப்புத் தாங்காமல் கோபமாகப் பேசி விடுகிறார். ஆகவே, மனோ – கொடி காதலுக்கு இடையூறாக வேலை இல்லாத் திண்டாட்டம் வரக் கூடும் என்ற எண்ணம் பார்வையாளர்களாகிய நமக்கு ஏற்படுகிறது.
ஆனால், சாதிப்பாகுபாடு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய இரண்டும் அல்லாத மூன்றாவது விவகாரம் தான் அவர்களது காதலுக்கு வேட்டு வைக்கிறது. அது மனோவின் ‘Possessiveness’ எனப்படும் அதீத உடைமை உணர்வு!
கொடிக்கு ஒரு அக்கா. அவரது கணவனுக்கு தன் கொழுந்தியாளான கொடி மீது ஒரு கண். அடிக்கடி காமப்பார்வை வீசுகிறான். அவனது தவறான நோக்கம் கொடிக்குப் புரிகிறது. என்றாலும், தன்னால் கறைபடாமல் அவனை சமாளிக்க முடியும் என்கிற நம்பிக்கையுடன் கொடி இருந்து வருகிறார். ஒருநாள் காதலர் என்ற உரிமையுடன் இந்த விவகாரம் குறித்து மனோவிடம் சொல்லுகிறார் கொடி. அப்போதிருந்து அது பிரச்சனை ஆகிறது. அக்கா, அக்காவின் கணவன், அவர்களது குழந்தை ஆகியோரோடு கொடி எங்கும் போகக் கூடாது என்று மனோ தடை போடுகிறார். தவிர்க்க முடியாமல் கொடி போக நேர்ந்தால், “என்ன, உன் அக்கா புருசனுக்கு ஓ.கே சொல்லிவிட்டாயா?” என்கிற ரீதியில் மனோ பேச ஆரம்பிக்க, அவர்களது காதல் நச்சுக் காதலாக – ‘டாக்ஸிக்’ ரிலேஷன்ஷிப்பாக – மாறிவிடுகிறது. இனியும் பொறுக்க முடியாது என்கிற கட்டத்தில் கொடி காதலை முறித்துக்கொண்டு, பெற்றோர் பார்த்த ஒருவனை திருமணம் செய்துகொண்டு போய் விடுகிறார்.
முதல் காதல் கொடுத்த நினைவுகளையும், வலிகளையும் சுமந்தபடியே வாழ்க்கையைத் தொடரும் மனோ, சென்னையில் ஐ.டி கம்பெனி ஒன்றில் வேலை கிடைத்து ‘டீம் லீடர்’ ஆகிறார். அவரும், அவரிடம் ’பயிற்சிப் பணி’யாளராக வந்து சேரும் நிவி என்ற நிவேதாவும் (ஃபெமினா ஜார்ஜ்) – கொடியுடனான காதலையும், பிரேக்கப்பையும் மனோ மனம்விட்டுச் சொல்லுமளவுக்கு – நல்ல நண்பர்கள் ஆகிறார்கள்.
நிவி வெளியூர் பெண். வேலை தேடி முன் பின் தெரியாத சென்னைக்குத் தனியாக வந்த அவருக்கு சில உதவிகள் செய்த அருண் என்ற இளைஞர், அவரைக் காதலிப்பதாகச் சொல்ல, நிவியும் தட்ட முடியாமல் ஏற்றுக்கொள்கிறார். இந்நிலையில், அவரும், மனோவும் நட்புடன் பழகுவதை சந்தேகத்துடன் பார்க்கிறார் அருண். காதல் என்ற பெயரில் அதீத உடைமை உணர்வுடன் நிவிக்கு நிறைய தடைகள் விதிக்கிறார். நிறைய இம்சிக்கிறார். நடுரோட்டிலேயே கோபமாய் கன்னத்தில் அறைகிறார். இப்படி கொடுமையான காதலில் சிக்கித் தவிக்கும் நிவிக்கு உதவுவதற்காக அருணுடன் மனோ பேச, அதை ஏற்காமல் அருண் விலகிச் சென்றுவிட, பின்னொரு நாளில் மனோவுக்கும், நிவிக்கும் காதல் மலர்கிறது.
மனோவின் இந்த இரண்டாவது காதல் ஒரு வித்தியாசமான சவாலை எதிர்கொள்கிறது. முதல் காதல் தந்த படிப்பினை காரணமாக, மனோ தன் பழைய காதலிக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ அவற்றையெல்லாம் தனக்குச் செய்வதும், பழைய காதலிக்கு என்னவெல்லாம் பிடிக்காதோ அவற்றையெல்லாம் தனக்குச் செய்யாமலிருப்பதும் நிவிக்குத் தெரிய வருகிறது. பழைய காதலியின் ஜெராக்ஸாக – டூப்ளிக்கேட்டாக – தன்னை மனோ பாவிப்பதையும், பழைய காதலியின் நினைவாக அவரது புகைப்படம் உள்ளிட்ட சில பொருட்களை மனோ பொக்கிஷம் போல் இன்னும் பாதுகாத்து வருவதையும் அறிந்து நிவி மனமுடைந்து போகிறார். இதனால் இந்த இரண்டாவது காதலிலும் பிரச்சனை வெடிக்கிறது.
அதன்பின் என்ன நடந்தது? புதிய பிரச்சனையை மனோ எப்படிக் கையாளுகிறார்? இறுதியில் மனோ – நிவி காதல் என்ன ஆனது? இருவரும் வாழ்க்கையில் இணைந்தார்களா, இல்லையா? என்பன போன்ற கேள்விகளுக்கு புத்தம் புது கண்ணோட்டத்தில் பக்குவமாக, முதிர்ச்சியாக விடை அளிக்கிறது ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இக்கதையின் நாயகன் மனோ என்ற மனோகரனாக ஏகன் நடித்திருக்கிறார். ‘கனா காணும் காலங்கள்’ என்ற டிவி சீரியலிலும், ‘ஜோ’ என்ற திரைப்படத்திலும் ஏற்கெனவே நடித்து கவனம் பெற்ற இவர், 2024ஆம் ஆண்டு சீனு ராமசாமி இயக்கிய ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானார். அவர் நாயகனாக நடித்திருக்கும் இரண்டாவது படம் இந்த ‘ஹைக்கூ’. இதில், ஆரம்பத்தில் விடலைத்தனமான கல்லூரி மாணவராகவும், பின்னர் பொறுப்புள்ள ஐ.டி கம்பெனி ஊழியராகவும் நடிக்கும் வேடம் இவருக்கு. ’பக்கத்து வீட்டுப் பையன்’ என்று சொல்லத் தக்க தோற்றத்தில் இருக்கும் இவர், இருவேறு காலகட்டங்களில் இரண்டு விதமாக நடிக்கும் வாய்ப்புள்ள இந்த கதாபாத்திரத்தை ஏற்று, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். எதிர்காலத்தில் பலப்பல நாயக பாத்திரங்களை ஏற்று அவற்றுக்குப் பொருத்தமான நடிப்பை அட்டகாசமாக வெளிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை அவர் இந்த படத்தின் மூலம் ஏற்படுத்தியிருக்கிறார். வாழ்த்துகள் ஏகன்!
நாயகி கொடி என்ற பவளக்கொடியாக ஸ்ரீதேவி அப்பல்லா நடித்திருக்கிறார். பார்ப்பதற்கு அழகாக இருக்கும் இவர், நாயகனின் கல்லூரிக்கால காதல் இதமாகவும் இனிமையாகவும் இருப்பதற்குத் தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறார். தன் காதலர் அதீத உடைமை உணர்வுடன் வதைக்கும்போது தைரியமாக பிரேக்கப் சொல்வது, வேறொருவரை மணந்து, குழந்தை பெற்று, இல்லறத்தை நல்லறமாக நடத்திச் செல்வது என்ற யதார்த்தமான கதாபாத்திரத்தில் மிகவும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இனி நிறைய தமிழ்ப்பட வாய்ப்புகள் அவரைத் தேடி வரும் என்று உறுதியாக நம்பலாம்.
இரண்டாவது நாயகி நிவி என்ற நிவேதாவாக ஃபெமினா ஜார்ஜ் நடித்திருக்கிறார். ஐ.டி கம்பெனியில் நாயகனின் தலைமையில் கீழ் பயிற்சி பெறும் பணியாளராக வரும் இவர், ‘இரண்டாவது காதலில் ஈடுபடும் இருவர் தங்களுக்குள் ஆரோக்கியமான உறவை வளர்த்துக் கொள்ள முடியுமா’ என்ற கேள்விக்கு விடை சொல்லும் மிகவும் சிக்கலான, கனமான கதாபாத்திரத்தில் அருமையாக நடித்து, கவனம் ஈர்த்திருக்கிறார்.
நாயகனின் அப்பாவாக வரும் மைம் கோபி, அம்மாவாக வரும் இந்துமதி மணிகண்டன், நண்பராக வரும் அதிர்ச்சி அருண், மற்றும் சுப்பிரமணிய சேது, அதியமான் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
‘ஜோ’ என்ற வெற்றிப்படத்தின் இயக்குநரான ஹரிஹரன் ராமோடு சேர்ந்து இப்படத்தின் திரைக்கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர் யுவராஜ் சின்னசாமி. காதல் கதை தமிழ்ச்சினிமாவுக்கு புதியது இல்லை என்றாலும், கதாபாத்திர வடிவமைப்பு, காட்சியமைப்பு, வித்தியாசமான திருப்புமுனைகள் போன்ற திரைக்கதை அம்சங்கள் இந்த காதல்கதைக்கு மெருகூட்டியுள்ளன.
இப்படத்தை இயக்கியிருக்கிறார் யுவராஜ் சின்னசாமி. காதலில் அதீத உடைமை உணர்வும், காதலியை பழைய காதலியின் ஜெராக்ஸாகப் பார்க்கும் பார்வையும் எத்தகைய தீய விளைவுகளை ஏற்படுத்தும் என்ற மிகவும் முக்கியமான கருத்தை இந்த படத்தில் அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குநர். எல்லா காதல் உறவுகளும் திருமணத்தில் முடிவதில்லை என்றாலும், ஒரு பிரேக்கப், காதலின் முடிவாக இல்லாமல், அடுத்த காதலுக்கான முதிர்ச்சியான முதல் படியாகவே அமைகிறது என்ற பாசிட்டிவ் சிந்தனையையும் இயக்குநர் வலியுறுத்தியிருக்கிறார். இக்கருத்துகளை வலிந்து திணிக்காமல், நேரம் போவதே தெரியாத அளவுக்கு சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் படத்தை நகர்த்தி, அதனுள் சொல்லியிருக்கும் இயக்குநர் யுவராஜ் சின்னசாமிக்கு பாராட்டுகள்!
சித்துகுமாரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அருமை. பிரியேஷ் குருசாமியின் ஒளிப்பதிவு, சக்தி பிரனேஷின் படத்தொகுப்பு, பிரேம் கருத்தமலையின் கலை இயக்கம் உள்ளிட்ட நேர்த்தியான தொழில்நுட்பங்கள் இப்படத்துக்கு பெரிய பலம்.
‘ஹைக்கூ’ – காதலிப்பவர்கள், காதலித்தவர்கள், காதலிக்க இருப்பவர்கள் ஆகிய அனைத்துத் தரப்பினரும் கண்டு களிக்கத் தக்க நல்ல பொழுதுபோக்கு திரைப்படம்!
ரேட்டிங்: 4/5
