ரஜினி, கமல் துவக்கி வைத்த எம்.ஜி.ஆரின் கனவு திரைப்படம்!

எம்ஜிஆர் தயாரித்து, இயக்கி, நடித்த மிக பிரமாண்டமான படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. 1972-லேயே ஹாங்காங், ஜப்பான் உட்பட பல நாடுகளில் எடுக்கப்பட்ட இந்த பிரமாண்டமான படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகமாக ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ என்ற படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தார் எம்ஜிஆர். ஆனால் அதற்குள் அரசியலில் பிஸியாகி முதலமைச்சராகி விட்டதால் அந்த படத்தை எடுக்க முடியாமலேயே போனது.

நூற்றாண்டு விழா கண்ட எம்ஜிஆரின் கனவுப் படமான ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ படம் தற்போது அனிமேஷனில் உருவாகிறது. எம்ஜிஆருடன் பல படங்களில் நடித்த அவரின் நண்பர் மறைந்த ஐசரி வேலனின் மகன் ஐசரி கணேஷ், வேல்ஸ் பிலிம் இண்டர்னேஷனல் சார்பில் தயாரிக்கிறார். பிரபுதேவா ஸ்டுடியோஸ் சார்பில் பிரபுதேவாவும் இணைந்து தயாரிக்கிறார்.

அனிமேஷனில் உருவாகும் இந்த படத்தை அருள் மூர்த்தி இயக்குகிறார். வைரமுத்து பாடல்கள் எழுத, டி இமான் இசையமைக்கிறார். ஆண்டனி எடிட்டிங்கில், ராஜு சுந்தரம் நடனம் அமைக்க, ராக்கி ராஜேஷ் சண்டைப் பயிற்சியாளராக பணி புரிகிறார். இந்த படம் அடுத்த ஆண்டில் எம்ஜிஆர் பிறந்த நாளான ஜனவரி 17ஆம் தேதி வெளியாகிறது.

இந்த படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா அவரது பிறந்த நாளான நேற்று சென்னை சத்யா ஸ்டுடியோவில் நடைபெற்றது.  விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் கலந்து கொண்டு படத்தை துவக்கி வைத்தனர். ரஜினிகாந்த் கிளாப் அடித்து படத்தை துவக்கி வைக்க, கமல்ஹாசன் கேமராவை ஆன் செய்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

முன்னதாக, விழாவில் எம்ஜிஆருடன் நடித்த நடிகைகள் பலரும் கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர். உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் முக்கிய காட்சிகள் அடங்கிய தொகுப்பையும், ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ படத்தின் ஒரு முன்னோட்டத்தையும் பட்டனை அழுத்தி துவக்கி வைத்தார் கமல்ஹாசன்.

விழாவில் விஐடி பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி விஸ்வநாதன், எம்ஜிஆர் நிகர்நிலை பல்கலைகழக வேந்தர் ஏசி சண்முகம், சத்யபாமா பல்கலைக்கழக இயக்குனர் மரியாஜீனா ஜான்சன், ஜேப்பியார் கல்லூரி இயக்குனர் ரெஜினா ஜேப்பியார், தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் பாஸ்கர், முன்னாள் அமைச்சர்கள் சாமிநாதன், ராதா, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி, நடிகர்கள் பாஸ்கரன், ராஜேஷ், கே ராஜன், எம்ஜிஆரின் செயலர் பிச்சாண்டி, சசி புரடக்‌ஷன்ஸ் சக்கரவர்த்தி, தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரி, நடிகைகள் லதா, சச்சு, ஷீலா ஆகியோரும் கலந்து கொண்டனர். அவர்களை வரவேற்று சால்வை அணிவித்து நினைவு பரிசினை வழங்கி கவுரவித்தார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.

விழாவில் எம்ஜிஆர் பாடல், நடனம் என கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.