ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்து, அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில், இந்தச் சட்டத்தை இயற்ற தமிழ்நாடு அரசுக்கு அதிகாரமில்லை; திறமைக்கான விளையாட்டான ரம்மியை, அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டாக கருத முடியாது என வாதங்கள் முன் வைக்கப்பட்டிருந்தன.

தமிழ்நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அதிகாரத்துக்கு உட்பட்டு இயற்றப்பட்டுள்ள இந்தச் சட்டம் செல்லுபடியாக்க் கூடியது. பொது அமைதி, சுகாதாரம் மற்றும் சூதாட்டம் தொடர்பாக மட்டுமே இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. ஆன்லைன் விளையாட்டுகள் காரணமாக வேலையில்லாத இளைஞர்கள், தினக்கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், போலீஸ் என 32 பேர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் இந்த சட்டம் அவசியமாகிறது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது.

தீர்ப்பு: 

இந்த வழக்கில் தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த தீர்ப்பில், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள சட்டம் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய முடியாது என்றும், திறமைக்கான விளையாட்டுகளான ஆன்லைன் ரம்மி, போக்கரை அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டுகள் எனக் கூறி தடை விதித்த அரசின் சட்டப்பிரிவுகளை ரத்து செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதேநேரம், அதிர்ஷ்டத்துக்கான ஆன்லைன் விளையாட்டுகளை மட்டும் தடை செய்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த சட்டம் செல்லும். ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற திறமை சார்ந்த கேம்களை விளையாடுவதற்கான நேரம், வயது தொடர்பாக விதிகளை உருவாக்கிக் கொள்ள அரசுக்கு அனுமதியளித்து உத்தரவிட்ட நீதிபதிகள், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.