ராம்குமாரை காப்பாற்ற முயற்சி நடப்பதாக ராமதாஸ் குற்றச்சாட்டு!
சுவாதி படுகொலை வழக்கில் கொலையாளி என்று கூறி கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை காப்பாற்ற முயற்சி நடப்பதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
‘சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற பெண் பொறியாளர் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக பொதுவெளியிலும், சமூக ஊடகங்களிலும் தினமும் புதிது புதிதாக சர்ச்சைக்குரிய சேதிகள் வெளியிடப்படுகின்றன. இவை இக்கொலை வழக்கின் விசாரணையை திசை திருப்புவதற்காக திட்டமிட்டு பரப்பப்படுகின்றனவோ என்ற ஐயம் எழுந்துள்ளது.
ரயில் நிலையத்தில் சுவாதி வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தொடக்கத்தில் எந்த துப்பும் கிடைக்கவில்லை. ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா எதுவும் பொருத்தப்படாததால் கொலைகாரன் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. கொலை நடந்ததாக கூறப்படும் அதே நேரத்தில் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் ஒரு இளைஞர் பதற்றத்துடன் ஓட்டமும், நடையுமாக செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. முதலில் தெளிவில்லாமலும், பின்னர் ஓரளவு தெளிவுடனும் கிடைத்த இந்த காட்சிகளைக் கொண்டு தான் இந்த வழக்கில் காவல்துறையினர் துப்பு துலக்கியிருக்கின்றனர்.
சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த இளைஞர் உருவத்தைக் கொண்டு சூளைமேடு பகுதியில் வீடுவீடாக சென்று விசாரித்தபோது தான், அவர் சூளைமேட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த ராம்குமார் என்ற இளைஞர் என்பது தெரியவந்தது. சுவாதி படுகொலை செய்யப்பட்ட நேரத்தில் சென்னையிலிருந்த அவர், அன்று மாலை சொந்த ஊரான செங்கோட்டை மீனாட்சிபுரத்திற்கு சென்றுள்ளார்.
சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த இளைஞர் அணிந்திருந்த சட்டை ரத்தக்கறை படிந்திருந்த நிலையில் ராம்குமார் அறையில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. ராம்குமார் தான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும் என்று நம்புவதற்கு இந்த சாட்சியங்கள் போதுமானவையாக இருந்ததால் காவலர்கள் ராம்குமாரின் ஊருக்குச் சென்று அவரை கைது செய்தனர். கைது செய்தபோது ராம்குமார் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றது அவர் தான் குற்றவாளி என்பதை உறுதி செய்கிறது. பின்னர் அளித்த வாக்குமூலத்தில் இதை ராம்குமார் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.
ஆனால், பொதுவெளியிலும், ஊடகங்களிலும் புதிதுபுதிதாக உருவெடுத்துள்ள துப்பறியும் சிங்கங்கள், சுவாதி கொலையை ராம்குமார் செய்திருக்க வாய்ப்பில்லை; வேறு யாரோ செய்துவிட்டு ராம்குமார் மீது பழியை போட்டிருக்கலாம் என்ற ‘மிகப்பெரிய உண்மையை’ துப்பறிந்து தெரிவித்திருக்கிறார்கள். இன்னும் சிலர் ராம்குமாரை காப்பாற்றுவதற்காக சுவாதியின் நடத்தையை பலி கொடுக்கத் துணிந்து விட்டனர்.
”சுவாதிக்கு நிறைய ஆண் நண்பர்கள் உண்டு. சுவாதி முக்கோணக் காதலில் சிக்கியிருந்தார். எனவே, அந்த கோணத்திலும் விசாரிக்க வசதியாக இவ்வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று சில அரசியல் கட்சித் தலைவர்கள் கூறியிருக்கின்றனர்.
கொலையாளி என்று கூறி கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை கதாநாயகனாக சித்தரிக்கும் முயற்சிகளும் நடக்கின்றன. ராம்குமார் மீது எந்த தவறும் இல்லை; அவரது காதலை சுவாதி ஏற்காததால் உணர்ச்சி வசப்பட்டு ஏதோ செய்து விட்டார் என்று கூறுவதன் மூலம் அவரை பாதிக்கப்பட்டவராக காட்டவும் முயற்சி நடக்கிறது.
சுவாதி கொலை நடந்த நேரத்தில் ஒரு நடிகர் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வழக்கு விசாரணையை திசை திருப்பும் வகையிலும், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் கருத்து தெரிவித்ததற்காக அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்தன. அப்போது அந்த நடிகர் கூறிய கருத்துக்களுக்கும், இப்போது சமூக ஆர்வலர்கள் என்று கூறிக்கொள்பவர்களும், ஊடகங்களும் தெரிவிக்கும் கருத்துக்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
அதேநேரத்தில் இவை இயல்பாக வெளிப்பட்ட கருத்தாக தோன்றவில்லை. யாரையோ காப்பாற்றுவதற்காக இப்படி செய்யப்படுவதாகவே தெரிகிறது. கொடூர கொலை செய்ததாக கைதான ஒருவருக்காக இவ்வளவு கருத்துக்கள் இதுவரை திணிக்கப்பட்டதில்லை. இது நல்லதல்ல.
சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரைக் காவலில் எடுத்து விசாரிக்கும்போது இன்னும் பல உண்மைகள் வெளிவரலாம். அதற்குள் விருப்பம் போல கருத்துக்களை திணிப்பது விசாரணையை கடுமையாக பாதிக்கும். அது மட்டுமின்றி, இந்த வழக்கில் சாட்சிகளாக அடையாளம் காணப்பட்டிருப்பவர்கள் மிகவும் எளிமையானவர்கள். இந்த வழக்கில் உண்மையின் பக்கம் யாருமில்லை… கொலையாளிக்கு தான் அதிக பலம் இருக்கிறது என்ற எண்ணம் உருவானால், சாட்சிகள் அச்சமடைந்து விலக வாய்ப்பிருக்கிறது. அது நீதிப் படுகொலைக்கே வழி வகுக்கும். எனவே, இவ்வழக்கின் விசாரணையை பாதிக்கும் வகையில் கருத்து கூறுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும்.
காவல்துறையும் இவ்வழக்கில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த எல்லா உண்மைகளையும் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து, அதன் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும். இவ்வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்படும் அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கவும், இவ்வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றத்தை அமைத்து அடுத்த 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கவும் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.