”காதல் காட்சியில் கூச்சப்படாமல் நடிக்க வேண்டும்”: ‘டிம் டிப்’ நாயகனுக்கு பாக்யராஜ் அட்வைஸ்!

எல்.சி.நீரஜா ஃபிலிம்ஸ் வழங்க, டாக்டர் தணிகாசலம் தயாரிப்பில், அருணாச்சலம் ஆனந்த் எழுதி, ஒளிப்பதிவு செய்து, இயக்கி இருக்கும் படம் ‘டிம் டிப்’ இப்படத்தில் புதுமுக நாயகன் மோனிஷ் குமார், சஞ்சனா சிங், பவர்ஸ்டார், கே.ஆர். விஜயா, பெரேரா உள்ளிட்டோர்  நடித்துள்ளனர். இப்படத்துக்கு இசை- ஆதிப், ஹமரா, சி.வி ,கு.கார்த்திக்: எடிட்டிங் – பாஸ்கோ: நடனம் – சாய் பாரதி.

‘டிம் டிப்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை  பிரசாத் லேப் பிரிவியூ தியேட்டரில்  நடைபெற்றது. பாடல்களை இயக்குநர் கே.பாக்யராஜ் வெளியிட, படக்குழுவினர் பெற்றுக்கொண்டார்கள்.

d7

இந்நிகழ்ச்சியில் பேசியோர் பேச்சு விவரம் வருமாறு:

இயக்குநர் கே.பாக்யராஜ்:

இங்கே இசையமைப்பாளர்கள், கதாநாயகன் எல்லோருடைய பெற்றோர்களையும் அழைத்து அவர்களுக்கு மரியாதை செய்து சந்தோஷப்படுத்தினார்கள். இது எல்லோருக்குமே அமைவதில்லை. இது ஒரு நல்ல விஷயம். எல்லாரும் பேசும்போது தயாரிப்பாளர் எவ்வளவு ஒத்துழைப்பு கொடுத்தார், இயக்குநர் எவ்வளவு ஒத்துழைப்பு கொடுத்தார் என்று பேசினார்கள். இங்கே திரையிடப்பட்ட இரண்டு பாடல்களில் ஒரு பாடல் காட்சியில் கதாநாயகனும் நாயகியும் நெருக்கமாக இருக்க வேண்டிய காட்சி ஆனால் சற்று இடைவெளி இருந்தது போல் தெரிந்தது. அவர்களுக்குள் ஹெமிஸ்ட்ரி இல்லையோ என்று தோன்றியது. அப்படிப்பட்ட காட்சிகளில் இருவரும் சங்கோஜப்பட்டு நடித்திருந்தார்கள். இருவரும் ஒரு போர்வைக்குள் போர்த்திக் கொள்வது போல் முடிகிற அந்தக் காட்சிக்கு முன்பு இருந்த இடைவெளியில் அவர்கள் ஏதாவது செய்திருக்க வேண்டும். இருவரும் சங்கோஜப்பட்டுக் கொண்டிருந்தார்கள் .

நான் கூட ‘மௌனகீதங்கள்’ படத்தில் நடிக்கும்போது சரிதாவை வாங்க போங்க என்று தான் அழைப்பேன். அவருக்கு அது ஒரு மாதிரியாக இருந்தது .பெயர் சொல்லி அழையுங்கள் என்பார். நடிக்கும்போதெல்லாம் நன்றாக நடித்து விடுவோம் . பேசும்போது பெயர் சொல்லிக் கூப்பிட எனக்கு வாய் வார்த்தை வரவில்லை. காரணம் அவர் ‘தப்புத்தாளங்கள்’  போன்ற படங்களில்  நடித்து  மூத்தவர் என்கிற உணர்வு மனதில் இருந்ததால் கடைசி வரை பெயர் சொல்ல வாய் வார்த்தை வரவே இல்லை.

நமக்கு நெருக்கமான நண்பன், வாடா போடா என்று கூப்பிட்ட அந்த  நண்பனுக்குத் திருமணம் ஆகி விட்டால் அவனது மனைவியை வாங்க போங்க என்றுதான் அழைப்போம் .அப்போது அவன்  நீ அவளைப்  பெயர் சொல்லிக் கூப்பிடலாம் என்பான். ஆனால் நமக்கு வாய்வராது .அதுதான் நமது பண்பாடு .ஏனென்றால் நண்பன்  நமக்குத் தெரிந்தவன். அந்தப் பெண் யார் வீட்டுப் பெண்ணோ ? எனவே நமக்கு அப்படிச் சொல்லத் தோன்றாது. பெயர் சொல்லி அழைக்க நமக்குள் இடர்பாடு இருக்கும்.அந்த இடர்ப்பாடு  மரியாதைக்குரிய இடர்ப்பாடுதான். ஏனென்றால் அதுதான்  நமது பண்பாடு.

சஞ்சனாசிங் பேசும்போது என்னைப் பற்றிப் பேசும்போது “நிறைய சொல்லிக் கொடுத்தார்” என்று சொன்னார் .பா.விஜய் படத்தில் நடித்தபோது அவரைத் தெரியும். இப்படி எப்போதாவது  தீபாவளிக்குத் தீபாவளி சந்திப்பதோடு சரி. ஆனால் அவர் சொல்வதைப் பார்த்தால் ஏதோ இவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்கிறார்களோ என்று மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.பேசும்போது முழுமையாகப் பேச வேண்டும். மொட்டையாகப் பேசக் கூடாது. அதை தெளிவாக சொல்லியிருக்க வேண்டும். இந்த படத்தில் பவர்ஸ்டார் ஜோடியாகத்தான் அவர் நடித்திருக்கிறார். பாக்யராஜ் சார் ஜோடியாக என்று என் பெயரை சேர்த்து விட்டார். இதையெல்லாம் பார்ப்பவர்களுக்கு  அடிக்கடி சந்தித்துக் கொள்வது போல் நினைத்துக்கொள்வார்கள். எனவே தெளிவாகப் பேச வேண்டும்.

தயாரிப்பாளர் பேசும்போது அவரது உற்சாகத்தை பார்த்து எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. கர்நாடகாவில் இருந்து வந்துள்ள ஒருவர் நம்பிக்கையோடு உற்சாகமாகப் பேசியது எனக்கு பிடித்திருந்தது.கர்நாடகா என்றதும் கன்னடர் அனைவரும் பிரச்சினை செய்பவர்கள்  என்று நாம் நினைக்கிறோம். ஆனால் இவரைப் பார்க்கும்போது அங்கும் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்று எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது .’ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி ‘ படப்பிடிப்பு மைசூரில் நடந்துகொண்டிருந்தபோது எங்கள் பிள்ளைகளுக்கு ஒரு வாரம் விடுமுறை கிடைத்ததால், படப்பிடிப்பில் வந்து பார்ப்பதாக பூர்ணிமா அழைத்து வருவதாகச் சொன்னார். அதன்படி என் மனைவியும் பிள்ளைகள் இரண்டு பேரும் சென்னையிலிருந்து பெங்களூர் ஏர்போர்ட்டில் வந்து இறங்கிய உடனேயே அங்கே கலவரம் ஆரம்பித்து விட்டது .சிட்டி மட்டுமல்ல போகிற இடமெல்லாம் கலாட்டா கல்லெறிதல் என்று தொடர்ந்திருக்கிறது.

தமிழ்நாட்டு பதிவு எண் வாகனங்கள் எல்லாம் தாக்கப்பட்டன .எங்கள் காரையும் தாக்க முயற்சி செய்தார்கள். கற்களும் வீசப்பட்டுக்கொண்டு இருந்தன. சாலை எங்கும்  டயர்களும் தடைகளும் ஆக இருந்தது.மைசூர் எப்படி வருவது என்று தெரியாமல்  டிரைவர் குழம்பி எப்படியோ அங்குமிங்கும் ஓட்டி தட்டுத்தடுமாறி ஒரு ஊருக்குச் சென்றுவிட்டார். அந்த ஊர் பெங்களூரிலிருந்து இருபது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கிராமம்

அங்கே இவர்களைப் பார்த்த ஒரு பெரியவர் இந்த நிலையில் நீங்கள் வெளியே செல்ல வேண்டாம் .இரவு இங்கேயே தங்கிவிட்டுப் பிறகு செல்லலாம் என்று கூறியிருக்கிறார். இவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து யோசித்தபோது அவர் யோசிக்க வேண்டாம் உங்கள் காரை தமிழ்நாட்டு பதிவு எண் தெரியாத அளவுக்கு உள்ளே நிறுத்தி விடுங்கள் வெளியே தெரிந்தால் பிரச்சனை என்று ஒரு காம்பவுண்ட் கேட்டை திறந்து உள்ளே வழிவிட்டு, இங்கே பெண்களும் இருக்கிறார்கள் எங்கள் வீட்டுப் பெண்களோடு நீங்கள் தங்கிக் கொள்ளுங்கள் என்று அங்கே தங்க வைத்திருக்கிறார் .நானும் மைசூரில் பதற்றமாக இருந்தேன். என் மனைவியிடம் பேசியபோது அந்த இடத்தில் பாதுகாப்பாக இருப்பதாகச் சொன்னார். நான் கர்நாடகாவிலுள்ள திரையுலகினரைத் தொடர்பு கொண்டேன் .அம்ப்ரீஷைத் தொடர்பு கொண்டபோது பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்தார். மறுநாள் காலை போலீஸ் பாதுகாப்போடு அவர்களை அழைத்து வந்தார்கள். இதை ஏன் சொல்கிறேன் என்றால் கன்னடர்கள் என்றாலே அப்படி இப்படி என்று நினைக்கிறோம் .எல்லாக் கன்னடர்களும் அப்படியில்லை. அவர்களிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள்  கலவரத்திலும் ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது என்பதற்கு அந்த ராசய்யா ஒரு  சாட்சியாக இருக்கிறார். அவர்கள் ஏதோ ஒரு தமிழ்க் குடும்பம் என்ற வகையில்தான் என் மனைவி குழந்தைகளைக் காப்பாற்றினார்களே தவிர பாக்யராஜ் மனைவி குழந்தைகள் என்று அல்ல. ஏனென்றால் அது பிறகுதான் தெரியும்.

எனவே இங்கு வந்துள்ள கர்நாடகாவைச் சேர்ந்த இந்த தயாரிப்பாளரும் நிறைய படங்கள் தயாரிக்க வேண்டும். இந்தப் படத்தின் பாடல் காட்சி பார்க்கும்போது புதுமுக நாயகன் என்பதால் கொஞ்சம் கூச்சப்பட்டு நடித்திருப்பார் போல் தெரிகிறது இன்னும் காதல் காட்சிகளில் நெருக்கம்  காட்டியிருக்கலாம். ஏனென்றால் நான் ஊரில் இருந்த போதெல்லாம் சினிமாவில் வரும் காதல் காட்சிகளை கிண்டலடித்து கேலி பேசிக் கொண்டிருப்பேன். என்னை முதல் படத்தில் நடிக்க வைக்கும்போது எங்கள் இயக்குநர்  முதலில் எடுத்த காட்சி பாடல் காட்சிதான்.’வான்மேகங்களே’ என்று பாட வேண்டும் . நான் மிகவும் கூச்சப்பட்டு நடித்தேன்.அப்போது என்னை சத்தம் போட்டு நடிக்க வைத்தார். ஆறு ஏழு டேக் வாங்கினேன். இப்படித்தான் நானும் கூச்சப்பட்டேன். போகப் போக சரியாகி விட்டது. போக போக பழகிவிடும்.

இந்தப் படம் வெற்றியடைய வேண்டும். இயக்குநர் ஆனந்த்  பேசும்போது இந்த படத்துக்கு ஆதரவு தரும்படி நான் கெஞ்ச மாட்டேன் .படம் நன்றாக இருந்தால் ஆதரித்து எழுதுங்கள் ஊக்கப்படுத்துங்கள் என்று பேசினார். அந்த நம்பிக்கை எனக்குப் பிடித்திருந்தது. அதுதான் ஒரு இயக்குநருக்கு  இருக்க வேண்டும். அவரை வாழ்த்துகிறேன்.

தயாரிப்பாளர் கில்டுதலைவர் ஜாக்குவார் தங்கம்:

இங்கே கர்நாடகாவிலிருந்து ஒரு தயாரிப்பாளர் வந்திருக்கிறார். இது வந்தாரை வாழ வைக்கும் தமிழகம். உங்களையும் வாழவைக்கும். எத்தனை பேர் வந்தாலும் இங்கே வாழலாம். வாழட்டும் வாழ்த்துகிறோம். தமிழ்நாட்டில் எத்தனையோ பேர் வாழலாம் .ஆனால் தமிழர்களைத் தமிழன்தான் ஆள வேண்டும் என்பது என்னுடைய கருத்து.

உங்கள் கர்நாடகாவிற்கு சொல்லுங்கள் தமிழர்கள் நல்லவர்கள். வந்தவரை வாழ வைப்பவர்கள் என்று. அதேபோல் நீங்களும் தமிழர்களை வாழ்த்த வேண்டும் .தமிழர்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று கேட்டு சொல்லுங்கள்.

நடிகை சஞ்சனா சிங்:

இந்தப் படம் மிகவும் சிரமப்பட்டு எடுத்திருக்கிறார்கள். அனைவரும் நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இங்கே பாக்யராஜ் சார் வந்திருப்பது  எனக்கு  மகிழ்ச்சி. அவருடன் நடித்தபோது நிறைய விஷயங்கள் சொல்லிக் கொடுத்தார்.

நாயகன் மோனிஷ் குமார்: ,

எனக்கு  சொந்த ஊர்  ஊட்டி .இது எனக்கு முதல் படம் அல்ல ‘ என். ஜி .கே ‘ படத்தில் சூர்யா சாருக்கு நண்பனாக கூட ஒரு சின்ன வேடத்தில் நடித்திருக்கிறேன். இது போல  சில படங்களில் நடித்திருக்கிறேன். வேறொரு படத்தின் படப்பிடிப்புக்காக இயக்குநர் ஊட்டி வந்தபோது என்னைச் சந்தித்தார். அப்படித்தான் இந்த படம் உருவானது .அப்பா, அம்மா திட்டுவார்கள் என்று ரொமான்ஸ் காட்சியில் கூட நான் நெருக்கமாக இருப்பதைத்  தவிர்த்தேன். இந்த படம் பல நண்பர்கள் சேர்ந்து உருவாக்கியிருக்கிறார்கள் .இதில் நானும் ஒரு பங்காக இருப்பதில் மகிழ்ச்சி.

இயக்குநர் அருணாச்சலம் ஆனந்த்:

நான் இந்தப் படத்தை காப்பாற்றுங்கள். எனக்கு உதவி செய்யுங்கள் படத்தை பற்றி பெரிதாக தூக்கி நிறுத்தி எழுதுங்கள் என்று  நான் கெஞ்சப் போவதில்லை. ஏனென்றால் படம் நன்றாக இருந்தால் நீங்கள் தாராளமாக நன்றாகத்தான் எழுதுகிறீர்கள். பாராட்டி ஊக்குவிப்பீர்கள். இல்லையென்றால் எழுத மாட்டீர்கள்  என்பது எனக்குத் தெரியும் .இந்த படத்தின் மேல் உள்ள நம்பிக்கையில் சொல்கிறேன் நீங்கள் நன்றாக எழுதுவீர்கள்.

d1