ஜெயலலிதா கவலைக்கிடம்? அப்போலோவில் பதட்டம்; போலீஸ் குவிப்பு!

தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் பரவியுள்ளதை அடுத்து, அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு அதிமுக தொண்டர்களும், ஆதரவாளர்களும் கூட்டம் கூட்டமாக திரண்டு வந்து கவலையுடனும், கண்ணீருடனும் காத்திருக்கிறார்கள். இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது.

அங்கு அசம்பாவிதம் எதுவும் நிகழ்ந்துவிடாமல் தடுக்க போலீசார் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். மறுஉத்தரவு வரும் வரை அவர்கள் அப்போலோ வளாகத்தைவிட்டு வெளியேறக் கூடாது என அவர்களுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சர்களும், தமிழக அரசின் உயர்அதிகாரிகளும் விரைந்து வந்து அப்போலோ மருத்துவமனைக்குள் சென்றிருக்கிறார்கள். அப்போலோ மருத்துவமனையின் உள்ளும் புறமும் அசாதாரண சூழல் நிலவுகிறது.

ஜெயலலிதா உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் இன்றிரவு இரண்டே இரண்டு வரிகளில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று மாலை மாரடைப்பு ஏற்பட்டது. அவரது உடல்நிலையை இதயவியல், சுவாசவியல் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்” என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஜெயலலிதாவில் உடல்நிலை சீராக (stableஆக) இருக்கிறது” என்றோ, “மருத்துவ சிகிச்சைக்கு அவரது உடல்நிலை நன்றாக respond பண்ணுகிறது” என்றோ வழக்கமாக இடம் பெறும் ஆறுதலான வாக்கியங்கள் இன்றைய அப்போலோ அறிக்கையில் இடம் பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

0a1a

இதனால், என்ன நடக்குமோ என்று அதிமுகவினர் கவலையுடனும், பதட்டத்துடனும் அப்போலோமுன் கூடி நின்று தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

(விரிவான செய்தி – விரைவில்)