சென்னையில் 45-வது புத்தக கண்காட்சி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமான ‘பபாசி’ சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான புத்தகக் கண்காட்சி வழக்கம்போல் சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த 45-வது கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (06-02-2022) மாலை தொடங்கி வைத்தார்.

இந்த புத்தகக் கண்காட்சி மார்ச் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், 800 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். கொரோனா முன்னெச்சரிக்கையாக 65 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் கர்ப்பிணிகள் ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அடையாள அட்டையுடன் வரும் மாணவர்களுக்கு இலவச நுழைவுச் சீட்டு வழங்கப்படுகிறது. மற்றவர்களுக்கு, 10 ரூபாய் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “ சென்னை, மதுரை, கோவை போல தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் ’பபாசி’ புத்தகக் கண்காட்சியை நடத்த வேண்டும். அதற்கான உதவிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும்.

திராவிட இயக்கம் என்பது அறிவு இயக்கம். ஆண்டாண்டு காலமாக அடிமைப்படுத்தப்பட்டிருந்த தமிழ் சமூகத்திற்கு புத்தகங்கள் மூலம் அறிவை வளர்த்தது திராவி இயக்கம் தான்.

மாநிலத்தின் அனைத்துப் போட்டி தேர்வுகளிலும் கட்டாயம் தமிழ் தகுதித் தேர்வு நடத்தப்படும். அரசு ஊழியர்கள் தமிழ் மொழியில் கையெழுத்திடுவது, கோப்புகளை தமிழில் எழுதுவது போன்றவற்றை அரசு ஊக்குவித்து வருகிறது” என்றார்.