பிரியாவிடை பெற்றார் நா.முத்துக்குமார்: எரிவாயு மயானத்தில் உடல் தகனம்

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் உடல் தகனம் இன்று இரவு 8 மணியளவில் நடைபெற்றது. அவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு, கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தி, பிரியாவிடை கொடுத்தார்கள்.

மஞ்சள் காமாலை மற்றும் மாரடைப்பு காரணமாக பாடலாசிரியர் நா.முத்துக்குமார் இன்று காலை சென்னையில் மரணமடைந்தார். 41 வயது முத்துக்குமாரின் திடீர் மரணத்தால் திரையுலகினர் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

முத்துக்குமாரின் உடல் அவரது அண்ணா நகர் இல்லத்தில் வைக்கப்பட்டது. அங்கு திரையுலகினர், அரசியல் கட்சியினர், பலதுறை பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 6 மணிக்கு தொடங்கியது. அவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நியூ ஆவடி சாலையில் உள்ள வேலங்காடு எரிவாயு மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு இரவு 7 மணியளவில் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன. இறுதியாக இரவு 8 மணியளவில் நா.முத்துகுமாரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

மறைந்த நா.முத்துக்குமாருக்கு தீபலட்சுமி என்ற மனைவியும், ஆதவன் என்ற 9 வயது மகனும், யோகலட்சுமி என்ற 8 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

0a5w