“ஜல்லிக்கட்டு சாதிக்கட்டு அல்ல! வறட்டுவாதிகளுக்காக வரலாறு நிற்பதில்லை!”

காலையிலிருந்து மெரினாவில் இளைஞர்களோடு உரையாடவும், முழக்கமிடவும் முடிந்தது. அவர்கள் முற்போக்கு கோரிக்கைகளையோ, அரசியல் கோரிக்கைகளையோ மறுக்கவில்லை. மாறாக, அப்படியான முழக்கங்களுக்கும் குரல் கொடுக்கிறார்கள்.

புதுக்கோட்டையிலிருந்து சில இளைஞர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் பீட்டாவை எதிர்ப்பது பத்தாது, சிறப்பு யுனெஸ்கோ ஆவணத்தின்படி சல்லிகட்டை பாதுகாக்கும் சாசனங்களை முன்வைத்து அரசிற்கு நெருக்கடி கொடுப்போம் என்றார்கள்.

வேறு சில இளைஞர்கள் ஒரு 50-60 பேர், பீட்டாவின் பின்னால் இருக்கும் விலங்குநல வாரியத்தின் தலைவர் சின்னி கிருஷ்ணா குறித்து பேசினார்கள். அங்கு சென்று எதிர்ப்பு தெரிவித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமென்றார்கள்.

மற்றொருவர், பால் உற்பத்திக்கு பின்னால் இருக்கும் கார்ப்பரேட் லாபங்களை, சந்தைப் பொருளாதாரத்தை பற்றி பேசுங்கள் என்றார்.

இன்னும் ஒரு இளைஞர், காவேரி உரிமையை பேசி முழக்கமிட்டபோது, உற்சாகத்தோடு முழக்கம் உயர்ந்தது. தமிழர்களாக ஒன்றிணைவோம் என்பதும், மத்திய அரசினை எதிர்த்தும் முழக்கங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன.

காலையில் திமுகவின் திரு.ஸ்டாலின் வந்தபொழுது அவரை அனுமதிக்க மறுத்தார்கள். அரசியல் ஓட்டு கேட்டு வர வேண்டாமென்றார்கள். வேறொரு அரசியல் கட்சியின் கொடியோடு வந்தவரை செல்லமாக தட்டி அனுப்பினார்கள்.

மதியம் 2 மணியளவில் எம்.ஜி.ஆர் சமாதியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த அதிமுகவின் வாகனங்கள் மீது தங்கள் கையில் வைத்திருந்த தண்ணீர் பாக்கெட்., காகித பொட்டலங்களை வீசி எறிந்து எதிர்ப்பினை தெரிவித்தார்கள்.

போராடக் கூடிய இளைஞர்கள் சாதி, மதம், கட்சி கடந்து வந்திருந்தார்கள். இந்தப் போராட்டம் முழுக்க அரசியல்படுத்தப்படுதலை நோக்கி நகர வேண்டுமென்கிற விருப்பமுண்டு.

அரசியல் கோரிக்கைகளை மறுக்காமல் ஏற்கிற இளைஞர்களை புறக்கணித்து அரசியல் வியாக்கியானம் பேசுவது எளிது. சல்லிகட்டு ’பிற்போக்கு’ என்று டெஸ்க்டாப் இண்டெலெக்ச்சுவலிசம் பேசுவதும் எளிது. சல்லிக்கட்டு சாதிக்கட்டு என்றால் சாதிக் குழுக்கள் மட்டுமே களத்தில் நின்றிருக்கும், சாதிக்குழுக்களால் கட்டுப்படுத்தப்படும் மாணவர்கள் மட்டுமே முன்னுக்கு நின்றிருப்பார்கள்.

அப்படியாக சாதிய உணர்வுடன் வந்த கும்பல்களை கடந்த வாரமே மாணவர்கள் விரட்டியதை காண முடிந்திருக்கிறது.  சாதி மட்டுமல்ல, கட்சியும் விரட்டியடிக்கப்பட்டது .   சாதிய உணர்வுடன் இயங்குபவர்களை இயல்பாக கடந்து ஒரு போராட்டமாக முன்னகர்ந்திருக்கிறது.

வறட்டுவாதிகளுக்காக வரலாறு நிற்பதில்லை. அவர்களது குறைபுரிதலைப் போலவே  நாங்களும் செயல்படாமல் நின்றிருந்தால், இன்று இந்துத்துவ கும்பல்களும், சாதியக் கும்பல்களுமே இப்போராட்டத்தினை ஆக்கிரமித்திருக்கும்.

அக்கும்பல்களை எதிர்த்தோம். மிரட்டலுக்கு அடிபணியாது தோழர்கள் முன்னகர்ந்தார்கள். இன்றும் இதையெல்லாம் எதிர்த்து நிற்கிறோம். நாற்காலி அறிவுசீவிகள், விசைப்பலகை போராளிகளைக் கடந்து மக்களோடு உரையாடி, அரசியல்படுத்தி, முழக்கத்தினை விளக்கி, கரம் கோர்க்கும்பொழுது அவர்கள் வெகு இயல்புட்ன் முற்போக்கு அரசியலை ஏற்றுக்கொள்ள தயாராகிறார்கள்.

இப்போராட்டம் பலவிடயங்களை உடைத்திருக்கிறது. இப்போராட்டம் தோல்வியடையலாம், வெற்றியடையலாம் ஆனால் இது சாதிய கும்பல்களிடமும், இந்துத்துவ கும்பல்களிடமும்  சிக்கிக்கொள்ளாமல் கோரிக்கை தனித்து நிற்கிறது என்பது தான் இதன் வெற்றி.

ஒரு நியாய உணர்வுடன் அடக்குமுறைக்கு எதிராக திரளும் மனமுடையவர்களிடம் இருக்கும் குறைபாடுகளை விலக்கி, களைந்து, திரளாக்கி முன்னகரும் அவசியம் நமக்குண்டு. காலையில் இருந்து மெரினாவில் நிற்கிறோம். போராடும் இளைஞர்கள் உற்சாகம் அளிக்கவே செய்கிறார்கள்.

மேலோட்டமான அரசியல் புரிதலோடு இயங்கும் மக்கள் திரளோடு எப்படி நாம் சேர்ந்து நிற்கப் போகிறோம், எப்படி அரசியல்படுத்தப் போகிறோம் என்பதை புரியாமல், அவர்களை கொச்சைப்படுத்துவது மிகத் தவறானது. இந்த இளைஞர்களுக்கு இந்த தடைக்குப் பின்னால் இயங்கும் இந்துத்துவ – கார்பப்ரேட் – ஆர்.எஸ்.எஸ் கும்பல்களை அம்பலப்படுத்துவத்ற்கு அனைவரும் முன்வர வேண்டும்.

தமிழகத்தின் பல  பகுதிகளில் தன்னெழுச்சியாக திரளும் மக்களோடு இணைந்து நிற்பது தான் போராடத்தினை கூர்மைப்படுத்த உதவும்.

இயன்ற அளவில் போராட்டத்தினை வலிமை கொள்ளச் செய்யுங்கள்.

திருமுருகன் காந்தி

மே 17 இயக்கம்

 

Read previous post:
0a1c
அலங்காநல்லூர் கைது எதிரொலி: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரம்!

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரியும், பீட்டாவுக்கு தடை விதிக்கக் கோரியும், மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்டோரை விடுவிக்கக் கோரியும் சென்னை

Close