மெரினா இருளில் வீரகாவியம் படைக்கும் இளைஞர்களின் அற்புத போர் பரணி!

ஓ.பி.எஸ் – சசிகலா கும்பலின் ஏவலர்களான போலீசார், சென்னை மெரினா கடற்கரை சாலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை கலைந்து போகச் செயவதற்காக, ரூம் போட்டு யோசித்து, ஒரு ஐடியாவை பிடித்திருக்கிறார்கள். அதன்படி, இன்று இருட்டத் தொடங்கியதும், மெரினாவில் உள்ள அத்தனை மின்விளக்குகளையும் அணைத்து இருளில் மூழ்கடித்தார்கள். ஆனால், போலீசாரின் இந்த வில்லத்தனத்தை, போராட்டக்காரர்கள் காவிய நாயகச் சிறப்புடன் முறியடித்துவிட்டார்கள். கூடியிருக்கும் அத்தனை இளைஞர்களும் தங்கள் செல்போன் டார்ச்சை அடித்து, மின்மினி பூச்சிகளாய் வெளிச்சத்தை பரவச் செய்து, அந்த வெளிச்சத்தில் உறுதியுடன் போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை விவேகானந்தர் இல்லம் எதிரே மெரினா கடற்கரையில்இளைஞர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரியும், பீட்டாவுக்கு தடை கோரியும், மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்டோரை விடுவிக்கக் கோரியும் சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் இன்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டுக்காக அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என்றும், ஜல்லிக்கட்டு இந்த மாதத்துக்குள் நடைபெற வேண்டும் என்றும் இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்..

முகநூல், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் விடுக்கப்பட்ட அழைப்பைத் தொடர்ந்து இந்த போராட்டத்தில் இவர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களுடன் போலீசார் பல முறை பேச்சுவார்த்தை நடத்தினர். தமிழக அரசு குழு ஒன்றை அமைத்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே போராட்டம் வாபஸ் பெறப்படும் என்று போராட்டக்காரர்கள் உறுதியுடன் தெரிவித்து விட்டதால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

இவர்களை கலைந்து போகச் செயவதற்காக, போலீசார், இன்று இருட்டத் தொடங்கியதும், மெரினாவில் உள்ள அத்தனை மின்விளக்குகளையும் அணைத்து இருளில் மூழ்கடித்தார்கள். ஆனால் போலீசாரின் வில்லத்தனத்தை முறியடிக்கும் விதமாக, கூடியிருக்கும் அத்தனை இளைஞர்களும் தங்கள் செல்போன் டார்ச்சை அடித்து,  மின்மினி பூச்சிகளாய் வெளிச்சத்தை பரவச் செய்து, அந்த வெளிச்சத்தில் உறுதியுடன் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள்.