சசிகலாவுக்கு எதிராக அ.தி.மு.க. பெண்கள் போயஸ் கார்டனில் சாலை மறியல்!

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியை சேர்ந்த பெண்கள், ஜெயலலிதாவின் இல்லம் உள்ள போயஸ் கார்டன் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதிமுகவுக்கு தலைமை ஏற்று கட்சியை வழிநடத்துமாறு அதிமுக மூத்த நிர்வாகிகள் சசிகலாவை இன்று (சனிக்கிழமை) போயஸ் தோட்ட இல்லத்தில் நேரில் சந்தித்து வலியுறுத்தினர். இந்த தகவல் வெளியானதும், இதனை எதிர்த்து போயஸ் தோட்ட இல்லம் அருகே பின்னி சாலையில் அதிமுகவை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட சுமார் 300 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

“கட்சிக்காக உழைத்த மூத்த தலைவர்களே அதிமுகவை வழிநடத்த தகுதியானவர்கள். சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆகக் கூடாது. சசிகலாவுக்கு அந்த தகுதி இல்லை. சசிகலா போயஸ் இல்லத்திலிருந்து வெளியேற வேண்டும்” என்று அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

“போயஸ் இல்லத்தைப் பொதுமக்கள் பார்வையிட வந்தால் கடுமையாக நடந்துகொள்வதோடு, அனுமதி மறுக்கப்படுகிறது. தொண்டர்கள், மக்கள் எல்லோரையும் போயஸ் இல்லத்தைப் பார்வையிட அனுமதிக்க வேண்டும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் இல்லத்தை நினைவிடமாக்க வேண்டும்” என்ற கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.