“எல்லோருக்கும் இலவச வீடு’ என்பது மோடியின் இன்னொரு டுபாக்கூர் வாக்குறுதி!”

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நரேந்திர மோடி, “வரும் 2022ஆம் ஆண்டு நாட்டின் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. அதற்குள் அனைத்து இந்தியர்களுக்கும் வீடுகள் கட்டிக்கொடுக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்காக ஏழைகளுக்கான ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ வீட்டு வசதி திட்டத்தை தொடங்கியுள்ளோம். இத்திட்டத்தில் விவசாயிகள் முதல் பழங்குடியினர் வரை அனைவருக்கும் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்” என்றார்.

இது குறித்து Gnanabarathi Chinnasamy பதிவு:-

“வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டும் கனவோடு பல ஆண்டுகளாக வாயைக் கட்டி வயிறைக் கட்டி சிறுகச் சிறுக குருவி போல சேர்த்து வைத்த பணத்தை, ‘கறுப்புப் பணம்’ என்ற பெயரில் பறிக்க நடவடிக்கை எடுத்துள்ள மோடி, “2022ல் எல்லோருக்கும் இலவச வீடு தருவேன்” என்று பீற்றுவது, வரும் சட்டமன்றத் தேர்தல்களில் வாக்குகளைப் பெறுவதற்காக விரிக்கப்படும் நயவஞ்சக வலை என்பதை எல்லோரும் அறிவார்கள்.

ரூ.15 லட்சம் வங்கியில் போடும் வாக்குறுதியை, “தேர்தல் நேர ஜீம்லா” என்று அமீத் ஷாவை விட்டு சொல்ல வைத்ததைப் போல, இந்த டுபாக்கூர் பிராமிசையும் பின்னால் அதே அமீத் ஷாவை விட்டு, “தேர்தல் நேர ஜீம்லா என்று சொல்லி விடு” என்றால் அமீத் ஷா என்ன மறுத்து விடவா போகிறார்?

இன்னும் ஒரு வருடத்திற்கு நடுத்தர வர்க்கம் வீடு கட்டுவதைப் பற்றி கனவுகூட காண முடியாத நிலையை தனது கோமாளித்தனத்தினால் ஏற்படுத்தி விட்டார் மோடி.

அதுபோகவும், கடந்த பத்து வருட காலத்தில் வீடு கட்டியவர்கள் பற்றி பீராயப் போவது தனது அடுத்த அதிரடி நடவடிக்கை என்று பகிரங்கமாகவே அச்சுறுத்தி இருக்கும் மோடி, நடுத்தர வர்க்கத்தினரின் ரத்தத்தால் கட்டப்பட்ட எத்தனை வீடுகளை பிடுங்க இருக்கிறாரோ என்ற பயத்தில், குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்தும் மக்கள் தவித்துப் போய், சஞ்சலப் பேயின் பிடியில் சிக்கி மருகி நிற்கிறார்கள்.

இந்த லட்சணத்தில் 2022ல் இலவச வீடு என்றொரு வெட்கம்கெட்ட ஜீம்லா…!”