தலைமறைவான வேந்தர் மூவிஸ்  மதன் சிக்கினார்: திருப்பூரில் கைது!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், வினியோகஸ்தரும், எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தின் நிறுவனர் பச்சமுத்து என்ற பாரிவேந்தரின் வலதுகரமாக செயல்பட்டவருமான ‘வேந்தர் மூவிஸ்’ மதன், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழத்தில் மருத்துவ சீட் வாங்கித் தருவதாக கூறி மாணவர்களிடம் ரூ.80 கோடி வசூலித்து மோசடி செய்துவிட்டதாக புகார் எழுந்தது.

ஆனால் மதனோ, தான் வசூலித்த பணத்தை பாரிவேந்தரிடம் கொடுத்துவிட்டதாகவும், சீட் கொடுக்க வேண்டியது அவருடைய பொறுப்பு என்றும், தனக்கு வாழப் பிடிக்காததால் காசிக்குப் போய் கங்கையில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் கடிதம் எழுதி வைத்துவிட்டு கடந்த மே மாதம் மாயமானார்.

இதனையடுத்து மதன் எங்கே என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. மதனின் தாயார் தங்கமும் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் மதனை கைது செய்ய அடுத்தடுத்து போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்தது.

இந்த நிலையில், தமிழ்நாட்டுக்குள்ளேயே திருப்பூரில் பதுங்கி இருந்த மதனை, சென்னை அம்பத்தூர் துணை ஆணையர் சுதாகர் தலைமையிலான போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இத்தகவலை சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.