“மனைவியின் சொந்தக்கார பெண்ணை ரகசியமாக சந்திக்க வந்தபோது மதனை மடக்கி பிடித்தோம்!” – போலீஸ்

‘வேந்தர் மூவீஸ்’ என்ற நிறுவனத்தை தொடங்கி, அதன்மூலம் திரைப்பட தயாரிப்பு மற்றும் திரைப்பட வினியோகம் செய்து வந்த மதன், காசிக்குப் போய் கங்கையில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, கடந்த மே 27ஆம் தேதி திடீரென மாயமானார்.

மகனை கண்டுபிடித்து தரக் கோரி மதனின் தாயார் தங்கமும், கணவனை கண்டுபிடித்துத் தரக் கோரி மதனின் முதல் மனைவி சிந்து, 2-வது மனைவி சுமலதா ஆகியோரும் போலீஸில் புகார் அளித்தனர்.

அதேநேரத்தில், ரூ.200 கோடி பணத்துடன் மதன் மாயமாகி விட்டதாக பச்சமுத்து என்ற பாரிவேந்தரின் எஸ்ஆர்எம் கல்விக் குழுமமும், எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக கூறி மதன் ஏமாற்றி விட்டதாக 50-க்கும் மேற்பட்ட பெற்றோர் மற்றும் மாணவர்களும் தனித்தனியாக போலீஸில் புகார் அளித்தனர்.

இதனிடையே, மதனின் தாயார் தங்கம், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “எஸ்ஆர்எம் கல்வி குழுமத் தலைவர் பச்சமுத்து என்ற பாரிவேந்தருடன் ஏற்பட்ட பணப் பிரச்சினையால், காசிக்கு சென்று கங்கையில் சமாதி அடைகிறேன் என தனது லெட்டர்பேடில் எழுதி வைத்துவிட்டு என் மகன் சென்றுள்ளார். இதுவரை எனது மகன் எங்கு இருக்கிறார் என தெரியவில்லை. எனவே, எனது மகனை கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக போலீஸார் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தது. அதன்படி, மதன் தொடர்பான வழக்கின் விசாரணை அதிகாரியாக மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.

மதன் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது போலீஸ் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. பல முறை காலஅவகாசம் கேட்டு பெற்ற போலீஸாரை ஒரு கட்டத்துக்கு மேல் நீதிமன்றம் கடுமையாக எச்சரித்தது.

இந்த சமயத்தில் எஸ்ஆர்எம் கல்வி குழுமத் தலைவர் பச்சமுத்துவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது அவர் ஜாமீனில் வெளியில் வந்துள்ளார்.

இந்நிலையில், பல தரப்பு புகார் மற்றும் ஆட்கொணர்வு மனு அடிப்படையில் கடந்த 6 மாதங்களாக தேடப்பட்டு வந்த ‘வேந்தர் மூவிஸ்’ மதனை போலீஸார் நேற்று (ஞாயிறு) இரவு திருப்பூரில் கைது செய்துள்ளனர்.

இது குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: “

மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக மதன் மற்றும் எஸ்ஆர்எம் கல்வி குழுமம் மீது புகார்கள் வந்தன. அதன்பேரில் விசாரணை நடத்தி, மதனுக்கு உடந்தையாக இருந்து செயல்பட்டதாக ஐ.ஜே.கே கட்சியின் மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் பார்கவன் பச்சமுத்து, மதுரை மாவட்ட தலைவர் சண்முகம், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் பாபு மற்றும் புரோக்கர் விஜய்பாண்டி, மதன் அலுவலகத்தில் மேலாளராக இருந்த சுதீர், அக்கவுன்டன்ட்  குணா, மற்றும் எஸ்ஆர்எம் குழுமத் தலைவர் பச்சமுத்து ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மதனை கண்டுபிடிக்க வாரணாசி, ரிஷிகேஷ், ஹரிதுவார், திருவனந்தபுரம், கொச்சி, நாகர்கோவில் ஆகிய இடங்களில் தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். மதன் குறித்த விவரங்களை ரகசியமாக சேகரித்தோம். உத்தரகாண்ட் மாநிலத்தில் மதன், சொத்துகளை வாங்கியிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.

மேலும், மதனுடன் திருப்பூரைச் சேர்ந்த ஒரு பெண் போனில் பேசி வருவதாகவும் எங்களுக்குத் தகவல் வந்தது. அந்த பெண் மூலம் மதனை பொறி வைத்துப் பிடிக்க திட்டமிட்டோம். மேலும் அந்த பெண்ணின் உறவினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

மதன், சொத்துகள் வாங்க உதவி செய்தவர்கள் குறித்த விவரங்களும் சேகரிக்கப்பட்டன. அப்போது மதனின் கூட்டாளிகள் மணிப்பூர் மாநிலம், இம்பாலில் தங்கியிருந்த தகவல் கிடைத்தது. அப்போது மதனின் கூட்டாளிகளின் செலவுக்கு பணம் அனுப்பிய விவரங்களை சேகரித்தோம். இந்த நிலையில் மணிப்பூரில் தங்கியிருந்த கூட்டாளிகளை, மதன் சில நாட்களுக்கு முன்பு சந்தித்துவிட்டுச் சென்றதாகவும் எங்களுக்கு முக்கியமான தகவல் கிடைத்தது.

மணிப்பூரிலிருந்து தமிழகத்துக்கு வந்த மதன், திருப்பூரில் நேற்று இரவு அந்த பெண்ணை சந்திக்க ரகசியமாக வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், காக்கி யூனிபார்ம் அணியாமல் சில போலீஸ் அதிகாரிகள் அங்கு முகாமிட்டனர். திருப்பூர் அவினாசி ரோட்டில் உள்ள அந்த பெண்ணின் வீட்டிற்கு தாடியுடன் மதன் வந்தபோது அவரை மடக்கிப் பிடித்தோம்.

மதனை பிடிக்க எங்களுக்கு உதவிய பெண்ணின் விவரத்தை வெளியில் சொல்ல வேண்டாம் என்று போலீஸ் உயரதிகாரிகள் வாய்மொழியாக தெரிவித்துள்ளனர். அந்த பெண், மதனின் மனைவியின் சொந்தக்காரப் பெண் என்பதை மட்டும் தான் இப்போது கூற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.