தினகரனின் அறிவிப்புகள் ஆளும் அதிமுகவை கட்டுப்படுத்தாது: ஈபிஎஸ் அணி தீர்மானம்!

ஆளும் அதிமுக (அம்மா) கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி. தினகரனின் அறிவிப்புகள் எதுவும் கட்சியைக் கட்டுப்படுத்தாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஈபிஎஸ் அணியின் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த தீர்மானத்தில், ”முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த தீர்மானத்தில் டிடிவி தினகரன் பெயர் இல்லை. கழக சட்ட விதிகளின்படி, டிடிவி தினகரனின் துணைப் பொதுச் செயலாளர் நியமனம் செல்லாது.

5 ஆண்டுகால உறுப்பினர் பதவியை அவர் பூர்த்தி செய்யாததால் துணை பொதுச்செயலாளராக அவரை ஏற்றுக்கொள்ள முடியாது. அவரை மீண்டும் கட்சியில் இணைத்தது சட்ட விரோதமான செயல்.

அவரின் நியமனமே ஏற்றுக்கொள்ளப்படாததால், டிடிவி தினகரனால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளின் நியமனங்களும் செல்லாது. துணை பொதுச்செயலாளர் என்ற பதவியோடு டிடிவி தினகரன் எழுதிய கடிதத்தை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது.

ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளே கட்சியை நடத்தி வருகின்றனர். இதனால் தினகரன் அறிவித்த பொறுப்புகளை புதிய நிர்வாகிகள் நிராகரிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அதிமுக (அம்மா) கட்சி சார்பில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களைத் திரும்பப் பெறுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்களின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது குறித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.