அபிஷேக்கின் பண்புகளை தான் ஒட்டுமொத்தமாக நாம் ’பார்ப்பனியம்’ என்கிறோம்!

அபிஷேக் வெளியேற்றப்பட்டு விட்டார்.

அபிஷேக் செய்ததில் தவறு என்ன?

ஆரம்பம் தொட்டே அவர் manipulate செய்கிறார். பிரியங்காவுடன் உறவு கொண்டாடுகிறார். சின்னப்பொண்ணு தாய் போல எனக் கதறுகிறார். மிக முக்கியமாக கடந்த வாரத்தில் மீம் கண்டெண்ட் ஆகுமளவுக்கு செயல்படுகிறார்.

அதாவது என்றைக்கும் இல்லாத உத்தமராய் எல்லா இடங்களிலும் ஆஜராகி விடுகிறார். எல்லாரின் நலன் பற்றியும் எல்லாரிடமும் பேசுகிறார். ‘உன்னுடைய நல்லதுக்குதான் இதைப் பண்றேன்’ என எல்லாரிடமும் பேசி தான் விரும்பும் காரியத்தை சாதித்துக்கொள்ள முனைகிறார். தொடர்ந்து அனைவரிடமும் பேசிக்கொண்டே இருக்கிறார். ‘இவன்லாம் என்ன செய்யப் போறான்..!’ என்கிற சிந்தனையில் இருக்கும் சிலரும் அவரைப் பற்றி அறியாத சிலரும் நம்பி வாய்க் கொடுக்கின்றனர். ஆனால் அவர்களுக்கே தெரியாமல் அவர்களை ஆழம் பார்த்து, influence செய்து தன்னுடைய இடத்தை தக்க வைக்கும் வேலையை செய்ய முனைகிறார்.

இமான் அண்ணாச்சி தெளிவாக அபிஷேக்கை வரையறுக்கிறார்: “அவன் எல்லாருக்கிட்டயும் பேசறான். எல்லாருக்காகவும் பேசற மாதிரி பேசறான். ஒவ்வொருத்தர பத்தி பேசும்போதும் ஒரு நல்ல விஷயத்தையும் ஒரு கெட்ட விஷயத்தையும் அவங்களப் பத்தி சொல்றான்.”

ராஜ் நேரடியாகவே அபிஷேக் பிறரை influence செய்வதாக சொல்கிறார். தன்னை சரியாக புரிந்துகொண்டதாலேயே ராஜ்ஜிடம் அபிஷேக் தள்ளி நின்றார். அதிகம் பேசவில்லை.

அதிலும் பிக்பாஸ் பார்த்ததில்லை என பேசிவிட்டு, நிகழ்ச்சியில் ‘Strategy, top 5, promoல வரணும்’ என்றெல்லாம் எப்படி அவர் சொன்னார் என கமல் கேட்க, ‘ப்ரொமோ மட்டும் பார்ப்பேன்’, ‘அதுவும் உங்க பேச்சுக்காக இல்ல, உங்க ட்ரெஸ்ஸுக்காக பார்ப்பேன்’ என்றெல்லாம் கதையளந்து கமலுக்கே விபூதி அடிக்க பார்த்ததெல்லாம் oversmartness.

அதிலும் கமலே அதிகம் பேசுவார். அவரையே பேச விடாதளவுக்கு அபிஷேக் அதிகமாக பேசுகிறார்.

ஏன் அபிஷேக் பற்றி இப்படி ஒரு பதிவு என யோசிக்கலாம். அபிஷேக் நம் எல்லார் வாழ்விலும் இருக்கிறார். உங்களைச் சுற்றிப் பாருங்கள். அடுத்தவரின் உழைப்பைத் திருடிக்கொண்டு, எதையும் செய்யாமல், ஆனால் எல்லாவற்றையும் செய்ததாக நடித்துக்கொண்டு, தப்பானவர்களை மட்டும் தன்னுடன் கூட்டு சேர்த்து வளர்த்துக்கொண்டு, நியாயமானவர்களை மறுதலித்து உயர்வுகளுக்கு மட்டுமே அலைந்துகொண்டு பிறரை influence செய்துகொண்டு இருக்கும் பாத்திரங்கள் உங்கள் வாழ்க்கைகளில் அதிகமாகவே இருக்கும்.

நேர்மையாய் இயங்காத, இயங்க முடியாத, இயங்க விரும்பாத இத்தகைய பண்புகளைத்தான் ஒட்டுமொத்தமாக நாம் பார்ப்பனியம் என்கிறோம். இதைத் தம் தன்மைகளாகவே பெருமையுடன் அபிஷேக் போல் வரையறுத்துக்கொண்டு சுற்றுபவர்கள் நம்முடன் ஒரே அலுவலகங்களில், இயக்கங்களில், பொதுவெளிகளில் என எங்கும் இயங்குகின்றனர்.

யதார்த்த உலகில் அபிஷேக் போன்றோரை அம்பலப்படுத்தும் 30க்கும் மேற்பட்ட கேமராக்கள் இல்லை. அவர்களின் மொத்தப் பரிமாணங்களையும் காட்டி அத்தகையோரை எவிக்ட் செய்யும் வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. ஆனாலும் நாம்தான் அவர்களை எவிக்ட் செய்ய வேண்டும் என்பதுதான் வாழ்வின் சூட்சுமம்.

அவர்களை எவிக்ட் செய்வதற்கு நாம் பார்ப்பனியத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். நவதாராளவாத சிந்தையை அறிய வேண்டும். இரண்டும் சேர்கையில் ஒரு மனிதன் எப்படி இயங்குவான் என்பதை அறிய வேண்டும். எது பாசாங்கு, எது அறம், எது நேர்மை என தெரிதல் வேண்டும். ஏன் பாசாங்கு இனிக்கிறது, ஏன் அறமும் நேர்மையும் சுடுகிறது என்பதை ஆராய்ந்தறிய வேண்டும்.

மொத்தத்தில் நாம் அரசியலாக வேண்டும்.

அபிஷேக் போன்றோரை எவிக்ட் செய்வது மிகவும் சுலபம். அவர்களின் செயல்பாடே அவர்களை அம்பலப்படுத்தும். அவர்களின் பாசாங்கான அருகாமையே நமக்கு மயிர்கூச்செரியும் அருவருப்பைத் தரும். ஆனால் அத்தகைய அபிஷேக் அம்பலப்படுகையில் நாம் என்ன செய்ய விரும்புவோம் என்பதே கேள்வி.

RAJASANGEETHAN