‘மனிதர்களின் இயல்பு அன்பே’ என்பது வண்ணதாசனின் அசைக்க முடியாத நம்பிக்கை!

திருநெல்வேலி புத்தகக் காட்சியில் கவிதை வாசிப்பு முடிந்து இறங்கினேன். அன்றுதான் வண்ணதாசன் அவர்களை முதன்முதலாகச் சந்தித்தேன். “உங்களுக்கு எங்களை பிடிக்காதல்லவா?” என மெல்ல நகைத்து கைகுலுக்கினார்.

‘சார்… யாரையும் நேசிக்க, விமர்சனங்கள் ஒரு தடையாயிருப்பதில்லை’ என மனதுக்குள் எண்ணிக் கொண்டேன். ஆனால், குழந்தை போல் பாவம் கொண்ட அவரிடம் எதிர்மறையாக எதுவும் கூற விரும்பவில்லை.

வண்ணதாசன் அதீதமான அழகியலில் நாட்டமுடையவர். அவரறிந்த வாழ்வும், எம்முடையதும் சில அடிப்படையான விசயங்களில் வேறாக இருந்தன.

நிலம், மொழி, இனக்குழு என இடையே சிறிது தூரமிருந்தன. ஆனாலும், அன்னாகரினினாவில், உம்மாச்சுவில், கடலும் கிழவனிலும் இல்லாத தூரமா வண்ணதாசனிடம்…!

அவர்  ஒரு அழகியல் உபன்யாசகர். அவரது மொழி என்னை வசீகரித்தது. அதன் உள்ளடக்கம் நான் காண விரும்பும் கனவு.

இந்த ஆண்டும்  சாஹித்ய அகடமி அதன் உள்வட்டங்களைக் கடந்து, தமிழிடமும் விருதுக்கான பரிந்துரைகளைக் கோரியிருந்தது. அவர் இன்குலாப் மற்றும் வண்ணதாசன் பற்றி சிறிய குறிப்புகளை எழுதி, என்னை ஆங்கிலத்தில் மொழியக் கேட்டார்.

ஏதோ என் உள்ளுணர்வில் தோன்றி மறைந்தது.

சில காலம்முன்பு வண்ணதாசன் எனது எண் கேட்டார். ”அழைக்க மாட்டேன். சேமித்து வைத்திருப்பேன்” என்றார். அது அவர் அன்பின் முறை.

மதுரையில் தமிழிடம், “கரிகாலனைக்  கடத்தி வந்துவிடுவோம்!” என அன்பாகப் பயமுறுத்தினாராம்.

எல்லாவற்றையும் கடந்து அன்பைப்  பிரச்சாரம் செய்தவர். குரோதமும் பகையும் நிரம்பிய உலகில் அன்பைப் பேசுவதும் ஒரு அரசியல் செயல்பாடுதான்.

‘மனிதர்களின் இயல்பு அன்பே’ என்பது வண்ணதாசனின் அசைக்க முடியாத நம்பிக்கை. அதன் ஆதார சுருதியை தனது படைப்பின் வழி மீட்டினார்.

சில நாட்கள் முன்பு தொடர்பு கொண்டேன். “தின்னக் கூடாத கவலைகள் சில’” என்றார்.

“விரைவில் சரியாகும் சார்” என்றேன்.

அவரது தந்தை, துணைவியர் இந்தத் தருணத்தைப் பகிர இன்றில்லை.

ஆனாலும், ஆயிரக்கணக்கான தமிழுறவுகள், அவருக்கு கிடைத்த கௌரவத்திற்காக இன்று மகிழ்கின்றனர்.

‘வண்ணதாசன் சார்… இன்று மொட்டை மாடியில் ஏறி நின்று, சிறிது நேரம் வானத்தை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தேன். உங்களது வெற்றிக்கு நான் செலுத்திய மரியாதை அது!’

இன்னும் மறந்ததை, விட்டதை நீங்கள் எழுதவேண்டும் சார்!

கரிகாலன்

(சாஹித்ய அகடமி விருதுக்கு வண்ணதாசன் தேர்வு செய்யப்பட்டிருப்பதை ஒட்டி, கரிகாலன் எழுதியுள்ள பதிவு)