போபாலில் பாஜக-வின் தீபாவளி நரபலி!

மத்திய பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் இருக்கிறது உயர் வகை பாதுகாப்பு வசதி கொண்ட மத்திய சிறை. இங்கிருந்து திங்கள் 31.10.2016 அதிகாலை 3 மணி அளவில் எட்டு சிமி (Students Islamic Movement of India – SIMI) இயக்கத்தினர் தப்பித்தனராம். தப்பிக்கும்போது சிறை காவலர் ராம்சங்கர் யாதவை தட்டுக்கள், ஸ்பூன்கள் உதவியால் கழுத்தறுத்து கொன்றுவிட்டு போர்வைகளின் உதவியால் கயிறு தயாரித்து சுவரேறி சென்றனராம்.

தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தைச் சேர்ந்த அம்சத் ரம்சான் கான், சாகீர் ஹூசைன், ஷேக் மெகபூஃப், முகமத் சாலிக், முஜீப் ஷேக், அகீல் கில்ஜி,  காலித் அகமத், மஜீத் நகோரி ஆகியோர்தான் அந்த எட்டுப் பேர்.

0a1

இவர்கள் மீது இரண்டு போலீசாரைக் கொன்றது, தேசத்துரோகம், சிறை தப்பித்தல், வங்கிக் கொள்ளை ஆகிய குற்றங்கள் சாட்டப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

இவர்கள் தப்பித்ததும் மத்திய பிரதேச அரசு படங்களுடன் பரிசுப் பணத்தை அறிவித்தது. உடன் சிறையிலிருந்து சுமார் 15 கி.மீட்டர் தூரத்தில் அவர்களிருப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனராம். உடன் சென்ற சிறப்பு அதிரடிப்படை அவர்களை சுட்டுக் கொன்றதாம். கொல்லப்பட்டவர்களில் இருவர் ஏற்கனவே காந்த்வா சிறையில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு  தப்பிச் சென்று இந்த ஆண்டு ஒடிசா மாநிலத்தில் பிடிபட்டதாக போலீசு கூறுகிறது.

உடன் செயல்பட்டு பயங்கரவாதிகளைக் கொன்றதற்காக போலீசை மனதாரப் பாராட்டியிருக்கிறார் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான். மேலும் தேசிய புலனாய்வு நிறுவனம் இந்த சம்பவம் குறித்து விசாரிக்கும் என்று கூறியிருக்கிறார். “இது போலிமோதல் கொலை என்று அரசியல் செய்து பாதுகாப்பு படைகளின் தேசபக்தியோடு விளையாட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.” அதாவது இவர் அரசு எழுதிய போபால் தீபாவளி திரைக்கதையில் ஓட்டைகள் இருந்தாலும் ஏதோ பார்த்துப் போட்டு வாழ்த்து தெரிவிக்குமாறு கூறுகிறார் சவுகான்.

ஆனால் முதல்வர் கூறிய வார்த்தைகளின் ஈரம் காய்வதற்குள்ளேயே தப்பியவர்களை போலீசு சுட்டுக் கொல்லும் வீடியோ ஒன்று வெளியாகிவிட்டது. அதில் பிணமாகக் கிடப்பவர்களைச் சுற்றி “அவர்களைச் சுடு” என்ற கத்தல்களோடு போலீசு சுடுவதாக வருகிறது. ஆனால் இந்த சுடுதலின்போது நாம் பார்ப்பது ஏற்கனவே சுடப்பட்டு உயிர் போன பிணங்களைத்தான். திரைக்கதையில் சுதப்பியிருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று. எனினும் இந்த வீடியோவின் நம்பகத்தன்மையை உள்துறை அமைச்சர் பூபேந்திர சிங் கேள்விக்குள்ளாக்கவில்லை. அது பொய் என்று கூறுவதற்கு அமைச்சர் பெருமகனாரிடம் “பிளான் B” கதை இல்லை போலும்!

இதே சிவ்ராஜ் சிங் சவுகான் காலத்தில்தான் வியாபம் ஊழலில் தொடர்புடைய 48 பேர் மர்மமான முறையில் கொல்லப்பட்டனர். இத்தகைய நரியின் காலத்தில் போபால் சிறையில் எட்டு பேர் தப்பித்து போலி மோதலில் கொல்லப்பட்டனர் என்றால் எவர் நம்புவர்?

இது மட்டுமல்ல, இன்னும் முரண்பாடான கூற்றுக்களை மத்தியப் பிரதேச காவல்துறை அதிகாரிகள் பகிரங்கமாக ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். பயங்கரவாதிகள் சிலர் சுட்டதால்தான் திருப்பிச் சுட்டோமென போபால் ஐ.ஜி யோகேஷ் சவுத்ரி உள்ளிட்ட சில அதிகாரிகள் கூறினர்.  சிலரோ, பயங்கரவாதிகள் கற்களை வீசியதாக மட்டும் கூறினர். அதிரடிப்படை தலைவர் சஞ்சீவ் ஷாமி ஊடகங்களிடம் கூறியபோது, பயங்கரவாதிகள் ஆயுதம் ஏதும் வைத்திருக்கவில்லை என்று கூறியிருக்கிறார். போபால் ஐ.ஜியோ, அவர்களிடமிருந்து துப்பாக்கிகளை கைப்பற்றியிருப்பதாகவும், அதிலிருந்து சில சுற்றுக்கள் சுடப்பட்டிருப்பதாகவும், மூன்று கூர்மையான ஆயுதங்களும் அவர்களிடம் இருந்தன என்றும் கூறியிருக்கிறார். உள்துறை அமைச்சர் பூபேந்திர சிங்கும் “பயங்கரவாதிகளிடம்” ஸ்பூன் எனும் ஆயுதங்கள் இருந்ததாக மட்டும் ஒத்துக்கொண்டிருக்கிறார்.

இப்படி முன்னுக்குபின் முரண்பாடாக கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, போலீசு இது குறித்து விசாரிக்கும் என்று ஐ.ஜி பெருமகனார் சமாளித்துவிட்டார். அதன்படி திரைக்கதையில் இருக்கும் ஓட்டைகளை விசாரணை என்ற பெயரில் அடைத்து விடுவார்கள் போல. தப்பிச் சென்றவர்கள் அனைவரும் போலீசால் பிரச்சினையின்றி சுடுவதற்காக போபால் அருகே அச்சார்புரா கிராமத்தின் மலைப் பகுதியில் இருப்பதாக தகவல் வந்ததாம். அதிகாலை மூன்று மணிக்கு தப்பியவர்கள் குறித்த தகவல் முற்பகல் 11 மணிக்கு கிடைத்த உடன் அனைத்து வகை போலீசும் அணிதிரண்டு ‘பயங்கரவாதிகளை’ சுட்டுக் கொன்றுவிட்டனர்.

போலீசின் சுடு படலம் முடிந்த பிறகு கிராம மக்கள் திரண்டு வந்த கையோடு தேசபக்தி உணர்ச்சியுடன், பாரத்மாதாகி ஜெய், வந்தே மாதரம், ஹிந்துஸ்தான் வாழ்க – பாகிஸ்தான் ஒழிக” முழக்கமிட்டிருக்கின்றனர். இப்படி ஜெய் முழக்கத்திற்கெல்லாம் ஒத்திகை பார்த்தவர்கள், சுடுவது குறித்த காரணக் கதையில் கோட்டை விட்டிருக்கின்றனர்.

தீபாவளி விடுமுறை என்பதால் பல சிறைக்காவலர்கள் விடுமுறையில் சென்றிருக்க, அடுத்த மாதம் திருமணத்திற்காக விடுமுறை தவிர்த்து பணியில் இருந்த ஜிதேந்திர சிங் மட்டும் சிமிக்காரர்கள் தப்பிப்பதை பார்த்து தகவல் சொன்னாராம். அப்போதே துப்பாக்கி இருந்தால் அவர்களை சுட்டுக் கொன்றிருப்பேன் என 26 வயசு ஜிதேந்திர சிங் கூறியிருக்கிறார்.

காங்கிரசு மற்றும் இதர எதிர்க்கட்சிகள் இச்சம்பவம் குறித்து நீதி விசாரணை கோரியிருக்கின்றன. மாநில முதல்வரோ தேசிய புலனாய்வு நிறுவனத்தின் விசாரணையை கோரி கொண்டு வந்துவிட்டார். குஜராத் – தில்லி நீதிமன்றங்கள் அனைத்தும் 2002 குஜராத் முசுலீம் மக்கள் இனப்படுகொலையை எந்த இலட்சணத்தில் விசாரித்தன என்பதறிவோம்.

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு நாட்டை விபரீதமான பாதைக்குள் கொண்டு செல்கிறது. வளர்ச்சி திட்டங்கள் பெயரில் நாட்டு மக்களின் சொத்துக்களை முதலாளிகளுக்கு சமர்ப்பிக்கும் அதே வேகம், சிறுபான்மை – தலித் – பழங்குடி மக்களை ஒடுக்குவதிலும் இருக்கிறது. மாட்டுக்கறிக்காக அன்றாடம் நம் மக்கள் எங்காவது தாக்கப்பட்டோ சாகடிக்கப்பட்டோ வருகின்றனர். அதே போன்று முசுலீம் இளைஞர்களும் ஏதோ ஒரு சாக்கில் கொல்லப்படுவதும், கைது செய்யப்படுவதும் அதிகரித்து வருகிறது.

போபால் சிறையில் எட்டு சிமி இயக்கத்தினர் தப்பியதும், தப்பியவர்கள் போலிசால் சுட்டுக் கொல்லப்பட்டதும் சர்வ நிச்சயமாக ஒரு சதித்திட்டத்தின் விளைவுதான். மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜ.க ஆளும் நாட்டில் தப்பிச் சென்று இப்படி நரபலி செய்யப்படுவதை அறியாத முட்டாள்கள் அல்ல சிமி இயக்கத்தினர். ஒரு வேளை அவர்களே அறியாமல் இந்த தப்பித்தல் நாடகம் சதித்தனமாக பா.ஜ.க அரசால் அமல்படுத்தப்பட்டிருந்தால் அதன் காரணம், எப்படியும் நம்மை கொல்லப் போகிறார்கள், அதற்கு முன் இப்படி தப்பித்துத்தான் பார்ப்போமே என்று அவர்கள் யோசித்திருக்க கூடும்.

தீபாவளி காலத்தில் இப்படி பச்சையான ஒரு படுகொலையை நிகழ்த்தி மகிழ்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தினர். இந்துமதவெறிக் கூட்டத்தின் இதற்கு முந்தைய தாக்குதல்களால் உசுப்பி விடப்பட்டு முசுலீம் இளைஞர்கள் குண்டுகள் வெடிக்கச் செய்த விபரீதத்தை மீண்டும் எதிர்பார்க்கலாம். அப்போது அதை சாக்கிட்டும் இங்கே சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் வரும். ஆர்.எஸ்.எஸ் தடை  செய்யப்படாத நாட்டில் சிமி மட்டும் தடை  செய்யப்பட்டு என்ன பலன்? சிமி பயங்கரவாத இயக்கமென்றால் ஆர்.எஸ்.எஸ் காந்திய இயக்கமா, என்ன? இந்துமதவெறியர்கள் கூண்டோடு தடை செய்யப்படும் வரை இந்தியாவில் மதச்சார்பின்மை ஏது? அமைதி ஏது?

Courtesy: vinavu.com