பெட்ரோமாக்ஸ் – விமர்சனம்

சென்னையில் பிறந்து வளர்ந்து மலேசியாவில் செட்டில் ஆனவர் பிரேம். இவரது தாய், தந்தை சுற்றுலா சென்றபோது கேரள வெள்ளத்தில் சிக்கி இறந்துவிடுகிறார்கள். இதையடுத்து சென்னையில் உள்ள அவர்களுக்கு சொந்தமான வீட்டை விற்க முயற்சிக்கிறார் பிரேம். ஆனால் அங்கே வசிக்கும் தமன்னா உள்ளிட்ட 4 பேய்கள் வீட்டை விற்க விடாமல் தடுக்கின்றன. வீடு வாங்க வருபவர்களை பயமுறுத்தி அனுப்பவே வீட்டை விற்கும் முயற்சி தடைபடுகிறது.

இந்த சூழலில் பார் ஒன்றில் வேலை பார்க்கும் முனீஸ்காந்த் வீட்டில் பேய் இல்லை என்று நிரூபித்து விற்று தருவதாக உறுதி தருகிறார். அவசர பண தேவை உள்ள காளி வெங்கட், சத்யன், திருச்சி சரவணகுமார் மூவரையும் இந்த பணிக்கு சேர்த்துக்கொள்கிறார். இவர்கள் நால்வரும் பேய் வீட்டில் சில நாட்கள் தங்குகின்றனர். இதன்பின் நால்வருக்கும் என்ன ஆனது? அந்த 4 பேய்களும் யார்? பிரேமின் பெற்றோர் என்ன ஆனார்கள்? என்ற கேள்விகளுக்கு படம் பதில் தருகிறது.

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பேயை வைத்து நிறைய காமெடி செய்துவிட்டார்கள். பேய் படம் என்றாலே வழக்கமான கதை என்று ஆகிவிட்டது. பெட்ரோமாக்ஸ் படத்தின் கதையும் வழக்கமான கதை தான். ஆனால் முழுக்க முழுக்க சிரிக்க வைக்கும் திரைக்கதை, வசனத்தால் படம் கலகலப்பான குடும்ப பொழுதுபோக்கு படமாக மாறி இருக்கிறது. இயக்குனர் ரோகின் வெங்கடேசனுக்கும் எழுத்தாளர் ஜி.ஆர்.சுரேந்திரநாத்துக்கும் பாராட்டுகள்.

தமன்னா படத்தின் நாயகி என்றாலும் துணை கதாபாத்திரம் தான். மற்ற கதாபாத்திரங்களுக்கு தான் அதிக முக்கியத்துவம். இருந்தாலும் பிற கதாபாத்திரங்கள் சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பதால் அது பெரிய குறையாக தெரியவில்லை. ஆனால் காட்சிகளில் மிகவும் அழகாக தெரிகிறார் தமன்னா.

படத்தின் கதாநாயகனே முனீஸ்காந்த் தான். நெஞ்சு வலி காரணமாக பயம் வரும்போது அவர் சிரிக்கும் காட்சிகள் சிரிப்பூட்டுகின்றன. அவருடன் சேர்ந்து காளி வெங்கட், திருச்சி சரவணகுமார், சத்யன் மூவரும் வயிறு குலுங்க வைக்கிறார்கள். முதல் பாதியை விட இரண்டாம் பாதி வயிறை அதிகம் பதம் பார்க்கிறது. பேய்களை நால்வரும் வெறுப்பேற்றும் காட்சிகளில் சிறுவர்களாகவே மாறி விடுகிறோம்.

யோகி பாபு, மைனா நந்தினி வரும் காட்சிகளும் சிரிக்க வைக்கின்றன. கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் தனது குணச்சித்திர கதாபாத்திரத்தால் தனித்து தெரிகிறார். பிரேம், மைம் கோபி, பேபி மோனிகா, பேய் கிருஷ்ணன் ஆகியோரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

டேனி ரேமண்டின் ஒளிப்பதிவில் காட்சிகள் அழகாக இருக்கின்றன. ஜிப்ரானின் இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது. லியோ ஜன பலைன் படத்தொகுப்பும் கச்சிதம். தெலுங்கில் வெளியான படத்தின் ரீமேக் தான் என்றாலும் தமிழ் ரசிகர்ளுக்கு ஏற்றவாறு ரோகினும் சுரேந்திரநாத்தும் திரைக்கதையை மாற்றி இருக்கிறார்கள்.

வசனங்களும் நன்றாக சிரிக்க வைக்கின்றன. வழக்கமாக பேய் படத்தில் இருக்கும் லாஜிக் மீறல்களும் பிளாஷ்பேக் காட்சியும் மட்டும் தான் சின்ன சின்ன குறைகள். நீண்ட நாள் கழித்து 2 மணி நேரம் வயிறு குலுங்க சிரிக்க வைத்து ஒரு நல்ல கருத்தையும் சொல்லி அனுப்புகிறது இந்த பெட்ரோமாக்ஸ்.

மொத்தத்தில் “பெட்ரோமாக்ஸ்” சிரிப்பு விருந்து.