தெரு நாய்கள் – விமர்சனம்

மன்னார்குடியில் மிகவும் செல்வந்தர்களான மதுசூதனன் மற்றும் சேட் ஆகியோர் எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டி போடுகிறார்கள். ஓட்டுப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், மதுசூதனன் வெளிநாட்டு நிறுவனங்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, விவசாய நிலங்களை அக்கிரமிப்பு செய்து எரிவாயு குழாய்களை பதிந்து வருகிறார்.

இதே பகுதியில் இனிப்புக் கடை நடத்தி வருகிறார் இமான் அண்ணாச்சி. இவர் கடையில் அப்புக்குட்டி உள்ளிட்ட நான்கு பேர் வேலை பார்த்து வருகிறார்கள். இந்நிலையில், இமான் அண்ணாச்சியின் இடத்தை மதுசூதனன் அடைய விரும்புகிறார். இதற்கு மறுக்கும் இமான் அண்ணாச்சியை மதுசூதனன் கொலை செய்து விடுகிறார்.

இதனால், ஆத்திரமடையும் அப்புக்குட்டி மற்றும் கடையில் வேலைப்பார்ப்பவர்கள், யாரும் நெருங்க முடியாத மதுசூதனனை கடத்துகிறார்கள். இவர்களிடம் இருந்து மதுசூதனன் தப்பித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

மதுசூதனன், அப்புக்குட்டி, இமான் அண்ணாச்சி, மைம்கோபி உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் படத்தில் நடித்துள்ளார்கள். இத்தனைப் பேர் நடித்தாலும் படத்தை பெரிதாக ரசிக்க முடியவில்லை. கதாபாத்திரங்களை கையாளத்தெரியாமல் விட்டிருக்கிறார் இயக்குனர் ஹரி உத்ரா. விளை நிலங்கள் தற்போது அழிக்கப்பட்டு வருகிறது, அதை பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தை சொல்ல வந்த இயக்குனருக்கு பாராட்டுக்கள். ஆனால், திரைக்கதை இயக்குனருக்கு கைகொடுக்கவில்லை.

படத்தின் தொழில்நுட்ப பணிகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது. குறிப்பாக தளபதி ரத்னத்தின் ஒளிப்பதிவு ரசிக்கும் படி உள்ளது. ஹரிஷ் மற்றும் சதீஷ் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் சுமார் ரகம்.

மொத்தத்தில் ‘தெரு நாய்கள்’ உதார்.