உடன்பிறப்பே – விமர்சனம்

நடிப்பு: ஜோதிகா, சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி, கலையரசன், சிஜா ரோஸ்

இயக்கம்: இரா.சரவணன்

தயாரிப்பு: 2டி எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் ஜோதிகா & சூர்யா

இசை: டி.இமான்

ஒளிப்பதிவு: வேல்ராஜ்

ஓ.டி.டி. தளம்: அமேசான் பிரைம் வீடியோ

0a1f

இன்றைய திரையுலகச் சூழலில் ஒரு நாயக நடிகை ‘அரை சதம்’ அடிப்பது அபூர்வத்திலும் அபூர்வம். அத்தகைய அபூர்வ சாதனையை சாதித்திருக்கும் நடிகை ஜோதிகாவின் 50-வது படமாக வெளிவந்திருக்கிறது ‘உடன்பிறப்பே’

அண்ணன் – தங்கை பாசம் என்பது தமிழ்க்குடும்பங்களை இயக்கும் சக்திகளில் ஒன்றாகத் திகழ்வது போலவே தமிழ் திரையுலகிலும் ’என்றென்றும் பசுமை’யான, வெற்றிகரமான கதைக்கருவாகவும் விளங்கிவருகிறது. ‘பாசமலர்’, ‘என் தங்கை’, ‘தங்கைக்காக’, ‘என் தங்கை கல்யாணி’, ‘கிழக்குச்சீமையிலே’ போன்ற குடும்பப் பாங்கான வெற்றிப்படங்கள் இதற்கு உதாரணம். இந்த பட்டியலில் இப்போது இணைந்திருக்கிறது ‘உடன்பிறப்பே’.

அண்ணன் வைரவனும் (சசிகுமார்), தங்கை மாதங்கியும் (ஜோதிகா) ஒருவர் மீது ஒருவர் அளவில்லா பாசம் கொண்டவர்களாக – பாசக்கார அண்ணன் தங்கையாக இருக்கிறார்கள். மாதங்கி சற்குணத்தை (சமுத்திரக்கனி) திருமணம் செய்துகொண்ட பின்னர் அண்ணன் தங்கை உறவில் பிளவு ஏற்படுகிறது. ஒரே ஊரில் இருந்தபோதிலும் பரஸ்பரம் பார்க்காமல், பேசாமல் விலகி இருக்கிறார்கள். அவர்களது மனத்தாங்கலுக்கு காரணம் என்ன? விலகியிருந்த அண்ணனும் தங்கையும் மீண்டும் சேர்ந்தார்களா? எப்படி? என்பது தான் ‘உடன்பிறப்பே’ படத்தின் கதை.

முதன்மை கதாபாத்திரமான தங்கை மாதங்கியாக வரும்  ஜோதிகா, தன் அனுபவ நடிப்பால் அண்ணன் மீது பாசத்தையும், கணவன் மீது கனிவையும் துல்லியமாக வெளிப்படுத்தி, சிறப்பான முகபாவங்களாலும், ஈரமான வசனங்களாலும் பார்வையாளர்களின் இதயத்தில் இடம் பிடித்துவிடுகிறார்.

அண்ணன் வைரவனாக வரும் சசிகுமார் அநியாயத்துக்கு எதிராக பொங்கி அடிதடியில் இறங்கும் அதிரடி நாயகனாகவும், தங்கை மீதான பாசத்தில் இளகும் மெழுகாகவும் அற்புதமாக நடித்திருக்கிறார்.

நாயகியின் கணவர் சற்குணம் கதாபாத்திரத்தில் வரும் சமுத்திரக்கனி, சட்டத்துக்கு மதிப்பளித்து நீதியை உயர்த்திப் பிடிக்கும் சாதுவான ஆசிரியராக கச்சிதமாக நடித்திருக்கிறார்.

பக்காடி என்ற கதாபாத்திரத்தில் வரும் சூரியின் காமெடி சூப்பர். படம் தொடங்கியதிலிருந்து கடைசி வரைக்கும் கதையோடு சேர்ந்து நகைச்சுவையில் சக்கை போடு போடுகிறார்.

கலையரசன்,  நிவேதிதா சதிஷ், சிஜா ரோஸ், வேல ராமமூர்த்தி, தீபா சங்கர், நமோ  நாராயணா, ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் தங்கள் கதாபாத்திரங்களுக்குத் தேவையான அளவான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

மீத்தேன் எடுப்பதால் விளைநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்பை மையமாகக்கொண்டு ‘கத்துக்குட்டி’ படத்தை இயக்கிய இயக்குனர் இரா.சரவணன், எந்த பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது என்ற கருத்தை அழுத்தமாக எடுத்துரைக்கும் வகையில் இப்படத்தை இயக்கியிருக்கிறார். அண்ணன் – தங்கை பாசத்தை உணர்ச்சிகரமாக உள்ளத்தைத் தொடும் வண்ணம் சொல்லியிருக்கும் அதேவேளை, சாதி பாகுபாடு, விவசாயிகளின் பிரச்சனை, கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற சமூகப் பிரச்சனைகளையும் இதில் சொல்லியதற்காக இயக்குனரைப் பாராட்டலாம்.

டி.இமானின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். காட்சிக்கு மெருகூட்டும் வண்ணம் பின்னணி இசை அமைத்திருக்கிறார்.

வேல்ராஜின் ஒளிப்பதிவு அழகு.

‘உடன்பிறப்பே’ – குடும்பத்துடன் கண்டு களிக்கலாம்!