தில்லுக்கு துட்டு – விமர்சனம்

நகைச்சுவையும், திகிலும் கலந்த பேய்ப்பட வரிசையில், சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் இந்த பேய்ப்படம் தனித்தன்மை வாய்ந்தது. கொலைவெறி கொண்டு அலையும் பேய்களுக்கும், பேய்கள் போல் மேக்கப் மற்றும் உடை அணிந்து பயமுறுத்தும் வில்லனின் ஆட்களுக்கும் இடையில் சிக்கிச் சீரழியும் கதாபாத்திரங்களைக் கொண்டு விலா நோக சிரிக்க வைக்கும் வெற்றிப்படமாக இதை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராம்பாலா.

உயர்ந்தோங்கிய மலை மீது மர்ம பங்களா ஒன்று இருக்கிறது. அதில் பேய்கள் இருப்பதால் அந்த ஊர் மக்கள் யாரும் அந்த பங்களாவுக்குள் போகவே பயப்படுகிறார்கள்.

தொலைவில் சென்னையில், பெற்றோர் மற்றும் மாமா கருணாசுடன் வாழ்ந்து வருகிறார் சந்தானம். கருணாஸ் வைத்திருக்கும் லோடு வேனுக்கு தவணை கட்டாததால் கடன் கொடுத்த சேட்டு, அந்த வேனை எடுத்துச் சென்றுவிடுகிறார். இது பற்றி கருணாஸ் சந்தானத்திடம் முறையிட, சந்தானம் பதிலுக்கு சேட்டுவின் காரை தூக்குவதற்காக சேட்டு வீட்டுக்கு கருணாசுடன் செல்கிறார். அப்போது, சேட்டு மகளான நாயகி சனாயா இவர்களை போலீசிடம் மாட்டி விடுகிறார்.

இதனால் கடுப்பான சந்தானம் நாயகியை எப்படியாவது பழிவாங்க வேண்டுமென்று துடிக்கிறார். அதற்குள் நாயகி சனாயா, சந்தானத்தை தேடி அவரது வீட்டுக்கே வருகிறாள். அப்போதுதான் இருவரும் சிறுவயதில் ஒன்றாக படித்தவர்கள் என்பதும், இருவரும் ஒருவருக்கொருவர் நேசித்தவர்கள் என்பதும் தெரிகிறது. இதன்பிறகு, இருவரும் காதலிக்கிறார்கள்.

இந்த விஷயம் நாயகியின் அப்பாவுக்கு தெரிய வருகிறது. சந்தானம் வசதியானவர் என்று நினைத்து இவர்களை சேர்த்து வைக்க நினைக்கிறார். பின்னர், சந்தானம் வசதியானவர் இல்லை என்று தெரியவந்ததும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதன்பிறகு, நாயகிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார். அப்போது சந்தானம் உள்ளே புகுந்து அதை கலைத்துவிடுகிறார்.

சந்தானத்தை நேரடியாக எதிர்க்க முடியாத சேட்டு, ரவுடியான நான் கடவுள் ராஜேந்திரனின் உதவியை நாடுகிறார். சந்தானத்தை தீர்த்துக் கட்டுவதற்காக ராஜேந்திரன் திட்டம் ஒன்றை தீட்டுகிறார்.  சந்தானத்திற்கு சனாயாவை திருமணம் செய்து கொடுப்பதாக நம்ப வைத்து,  மலை மேலிருக்கும் பங்களாவுக்கு அழைத்துச் சென்று அவரை கொலை செய்வது என்பது தான் அந்த திட்டம்.

அதன்படி, நாயகியின் அப்பா, சந்தானத்தை அந்த பங்களாவுக்கு குடும்பத்தோடு அழைத்து செல்கிறார். ஏற்கெனவே, பேய் இருக்கும் அந்த பங்களாவில் ராஜேந்திரனின் திட்டம் நிறைவேறியதா? அல்லது அங்கிருந்த பேய்கள் இவர்களை ஆட்டுவித்தனவா? என்பது மீதிக்கதை.

தோற்றம், உடை, உடல் மொழி, நடன அசைவுகள், ஆக்‌ஷன் அதிரடி என ஹீரோவுக்கான அத்தனை அம்சங்களையும் சந்தானம் நிறைவாக செய்திருக்கிறார். படத்துக்கு படம் சக கதாபாத்திரங்களை கலாய்த்து காமெடி பண்ணும் சந்தானம், இதில் பேய்களையே மரண கலாய் கலாய்த்திருப்பது சரவெடி. உதாரணமாக பேயைப் பார்த்து, ”கீரை சாதம் சாப்பிட்டுட்டு வாய் கொப்பளிக்கலையா? பல்லு கறை கறையா இருக்கு”, ”12 மணிக்கு பேய் வரும்னா, அதை சொல்ல 11.45க்கு நீ வருவியா”, ”பேயால நிறைய பேர் செத்திருக்காங்கன்னா, செத்தவங்க எல்லாம் ஆவியாகி அந்தப் பேயை பழிவாங்கலையா?” என்று சந்தானம் பேசும் வசனங்களுக்கு வெடித்துச் சிரிக்கிறது திரையரங்கம்.

பணக்கார சேட் மகளாக வரும் நாயகி சனையா ஓ.கே. ரகம். வழக்கமான கதாநாயகிக்கான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

“ஒரு சீரியஸான டயலாக்கூட பேச விடமாட்டேங்குறாங்க” என நிஜமாகவே அலுத்துக்கொள்ளும் ஆனந்தராஜ், “மாசம் பொறந்து 20 நாள் ஆச்சு. ஒரு கொலைகூட பண்ணலையே. மாச டார்க்கெட் முக்கியம்” என அசைன்மென்ட் கொடுக்கும் நான் கடவுள் ராஜேந்திரன், ‘மசாலா பால்’ கேட்டே ரிப்பீட் அடிக்கும் கார்த்திக், “முட்டாள்… முட்டாள்…” எனச் சொல்லியே வில்லத்தனம் செய்யும் சௌரப் சுக்லா, நிறைய பேசி சோதிக்கும் கருணாஸ் ஆகியோர் பொருத்தமான தேர்வு.

தமனின் இசையும், கார்த்திக் ராஜாவின் பின்னணி இசையும் படத்துக்குப் பெரிய பலம். தீபக் குமார் பாடியின் ஒளிப்பதிவில் இரண்டாம் பாதி முழுக்க பேய் வாசம். பேய் எஃபெக்ட்டை கலை இயக்குநர் ஏ.ஆர்.மோகன் அப்படியே கொட்டிக் கொடுத்திருக்கிறார். ஹரி தினேஷின் ஆக்‌ஷன் புத்திசாலித்தனம்.

பேய்ப் படங்கள் வழக்கமும், பழக்கமும் ஆனதாய் வரிசை கட்டி நிற்கும்போது, அதில் செட்டப் பேய், நிஜப் பேய் என வெரைட்டி காட்டிய விதத்தில் இயக்குநர் ராம்பாலா கவனிக்க வைக்கிறார்.

மொத்தமாக பேய்ப் படத்துக்கான அடிப்படை, பேயை விரட்டுவதற்கான சித்தரிப்பில் நம்பகத்தன்மையை காட்டிய விதத்திலும், நகைச்சுவையை அள்ளித் தெளித்த விதத்திலும் ‘தில்லுக்கு துட்டு’ வெளுத்துக் கட்டுகிறது.

‘தில்லுக்கு துட்டு’ – தில்லான வெற்றி!