அட்ரா மச்சான் விசிலு – விமர்சனம்

“ஒரு சினிமா நடிகனை சினிமா நடிகனாக மட்டும் பார். அவனை வழிகாட்டியாகவோ, தலைவனாகவோ, கடவுளாகவோ பாவிக்காதே” என்று பெரியார், எம்.ஆர்.ராதா உள்ளிட்ட பல சீர்திருத்தவாதிகள் அறிவுரை கூறியிருக்கிறார்கள். ஆனால், அந்த அறிவுரைக்கு பெரும்பாலான தமிழக மக்கள், குறிப்பாக தமிழக இளைஞர்கள் இன்றும் செவிசாய்க்க மறுப்பதால், அதே அறிவுரையை மீண்டும் வலியுறுத்திச் சொல்ல வந்திருக்கிறது ‘அட்ரா மச்சான் விசிலு’.

தமிழ் திரைப்படங்களில் ஏழைப் பங்காளனாக, இல்லாதவர்களுக்கு உதவுபவராக நடிக்கிறார் பவர் ஸ்டார் சீனிவாசன். இதனால் தமிழ் திரையுலகில் அவர் சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார். தமிழகம் முழுக்க அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள், ரசிகர் மன்றங்கள்.

சிவா, சென்ட்ராயன், அருண் பாலாஜி ஆகிய மூவரும் மதுரையில் வசிப்பவர்கள். பவர் ஸ்டாரை உயிருக்கும் மேலாக மதித்து, “தலைவா…” என தலைக்குமேல் வைத்துக் கொண்டாடும் தீவிர ரசிகர்கள். பவர் ஸ்டார் படம் வெளிவரும் போதெல்லாம் கையில் காசு இல்லாவிட்டாலும் கடன் வாங்கியாவது கட்அவுட் வைப்பது, போஸ்டர் அடிப்பது, பட்டாசு கொளுத்துவது, பாலாபிஷேகம் செய்வது என ஆட்டமாய் ஆடி ஆர்ப்பாட்டம் செய்பவர்கள்.

இதற்கிடையில், நாயகன் சிவாவும் நாயகி நைனா சர்வாரும் பள்ளிப் பருவத்திலிருந்தே காதலித்து வருகிறார்கள். நைனா சர்வார் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகும் தொடரும் இக்காதல் காரணமாக, காதலன் சிவாவுக்கு அவ்வப்போது பண உதவிகளையும் செய்து வருகிறார்.

இந்நிலையில், அப்புக்குட்டி ரசிகர்களுக்கும், பவர் ஸ்டார் ரசிகர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு, விவகாரம் போலீஸ் நிலையம் வரை போகிறது. போலீஸ் அதிகாரியான ராஜ்கபூர் அவ்வப்போது இரு தரப்புக்கும் புத்திமதி சொல்லி அனுப்புகிறார்.

ஒருமுறை ராஜ்கபூர், பவர் ஸ்டார் ரசிகர்களான சிவா மற்றும் அவரது நண்பர்களுக்கு ஒரு யோசனை கூறுகிறார். “உங்களை வைத்து உங்கள் தலைவர் பெரிய நிலைக்கு ஆளாகிவிட்டார். அவரை வைத்து நீங்கள் ஏன் பெரிய நிலைக்கு வரக்கூடாது? அவருடைய படங்களை வாங்கி, மதுரை ஏரியாவில் விநியோகம் செய்து பணம் பண்ணுங்கள்” என்பதுதான் அந்த யோசனை.

ராஜ்கபூரின் யோசனையை ஏற்று, சிவாவும், அவரது நண்பர்களும் மிகவும் சிரமப்பட்டு, கடன்பட்டு, பணத்தைத் திரட்டி, பவர் ஸ்டாரின் மேனேஜரான சிங்கமுத்துவிடம் கொண்டுபோய் கொடுக்கிறார்கள். அவர்களுக்கு பவர் ஸ்டாரின் புதிய படத்தின் மதுரை வினியோக உரிமையை கொடுக்கிறார் சிங்கமுத்து.

ஆனால், படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. போட்ட முதலீட்டை எடுக்க முடியாமல், சிவாவும் நண்பர்களும் பெருத்த நஷ்டம் அடைகிறார்கள். கடன் கொடுத்தவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.

வேறு வழியின்றி, இழந்த பணத்தை ஈடு செய்யுமாறு கேட்பதற்காக அவர்கள் பவர் ஸ்டாரை சந்திக்கிறார்கள். ஆனால் பவர் ஸ்டாரோ, பணத்தை திருப்பி கொடுக்க முடியாது என கூறுவதோடு, அவர்களை அவமானப்படுத்தி திருப்பி அனுப்புகிறார்.

இதனால் மனமுடைந்த நண்பர்கள், தங்கள் பணத்தை பவர் ஸ்டாரிடமிருந்து மீட்டு அவருக்கு புத்தி புகட்ட முடிவு செய்து, அதற்கான திட்டம் தீட்டுகிறார்கள். இதில் அவர்கள் வெற்றி பெற்றார்களா, இல்லையா? பவர் ஸ்டார் பாடம் கற்றாரா, இல்லையா? என்பது மீதிக்கதை.

பவர் ஸ்டார் இந்த படத்தில் முதலில் சூப்பர் ஸ்டாராகவும், பின்னர் வில்லனாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். இவர் பேசும் பஞ்ச் டயலாக்குகளை ரசிகர்களின் விசில் அடித்து வரவேற்பார்கள் என்பது நிச்சயம்.

சிவா எப்போதும்போல தனது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது தனித்துவமான டைமிங் காமெடியால் ரசிக்கவும், சிரிக்கவும் வைக்கிறார்.

சிவாவின் நண்பர்களாக வரும் சென்ட்ராயனும், அருண் பாலாஜியும் தங்கள் பாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

நாயகி நைனா சர்வார் பாத்திரம் அழுத்தமானதாக இல்லை என்றபோதிலும், அழகாகவும், கவர்ச்சியாகவும் திரையில் தோன்றி வசீகரிக்கிறார்.

பவர் ஸ்டாரின் மேனேஜராக வரும் சிங்கமுத்து, தனது வழக்கமான மட்டமான காமெடியாலும், உடல் மொழியாலும், வசன உச்சரிப்பாலும் அலுப்பை ஏற்படுத்துகிறார். எப்போதாவது சிரிக்க வைக்கிறார்.

ரஜினிகாந்தையும், ‘லிங்கா’ படத்துக்கு அவரிடம் இழப்பீடு கேட்ட சில வினியோகஸ்தர்களையும் நினைவூட்டும் வகையில் கதை அமைத்து, முழுக்க முழுக்க காமெடியாக படத்தை நகர்த்திச் செல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் திரைவண்ணன். அதில் அவர் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார். திரைக்கதைக்கு இன்னும் கொஞ்சம் கூடுதலாக ஊட்டச்சத்து கொடுத்திருக்கலாம்.

என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. குறிப்பாக “யாரு யாரு இவ”, “தேவதை தேவதை” ஆகிய பாடல்கள் ரசிப்புக்கு உகந்தவை. பின்னணி இசையும் கதைக்குப் பொருத்தம். காசி விஸ்வா ஒளிப்பதிவு கண்ணுக்கு விருந்து.

’அட்ரா மச்சான் விசிலு’ – நையாண்டி விசிலு…!