சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’வுக்கு ‘யு’ சான்றிதழ்: படக்குழு மகிழ்ச்சி!

சிவகார்த்திகேயன் – கீர்த்தி சுரேஷ்  நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘ரெமோ’. சிவகார்த்திகேயன் ஆண், பெண் என இருவேறு கெட்டப்களில் தோன்றும் இப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி, சீன் பூட், அனிருத் என மிகப்பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள் கைகோர்த்துள்ள இப்படத்தை 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார்.

இப்படம் வருகிற அக்டோபர் 7ஆம் தேதி உலகெங்கும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் அனைத்து பணிகளையும் முடித்து சான்றிதழ் பெறுவதற்காக தணிக்கை குழுவுக்கு படக்குழுவினர் நேற்று அனுப்பி வைத்தனர். இன்று இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

‘ரெமோ’ படத்திற்கு தணிக்கை குழுவினர் ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லரும், பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், படத்தின் மீதும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.