“தமிழ் வெப் சீரிஸ்களில் ‘ஆட்டோ சங்கர்’ முக்கியமான தொடக்கமாக இருக்கும்!”

ஆட்டோ சங்கர் வெப் சீரிஸ் முழுவதையும் பார்த்து முடித்தேன். சுவாரஸ்யமாய், ஒரே நாளில் பார்க்க முடிந்தது. சங்கராக நடித்தவர்(sarath appani) அட்டகாசப்படுத்தியிருக்கிறார். அதற்கு முக்கிய காரணம் அவருக்குக் பின்னணிக் குரல் கொடுத்த பவல் என நான் நினைக்கிறேன். கொடூர குற்றங்கள் புரிந்த ரவுடிகள் பார்க்க கொஞ்சம் குள்ளமாய், ஒல்லியாய் இருப்பார்கள் எனச் சொல்வார்கள். அப்படியொரு உடல்வாகு அவருக்கு. அவரை நடிக்க வைத்ததிலே பாதி வெற்றிப் பெற்றுவிட்டார்கள். அவரைத் தாண்டி நடிப்பில் ஈர்ப்பது சுடலையாக வந்தவரும் எஸ்.ஐ. கதிரவனும்.

முதல் சில அத்தியாயங்கள் எந்த கனெக்ட்டும் இல்லாமல், குற்றங்களைச் சுவாரஸ்யமாய் காட்டுவதிலே போனது. கொஞ்சம் கொஞ்சமாய் வேகமெடுத்து, பின் பார்க்க வைத்துவிட்டது.

புதுப்பேட்டை, வடசென்னை எனப் பல சென்னை ரவுடிகளின் கதைகளைப் பார்த்திருக்கிறோம். கிட்டத்தட்ட அதேதான் என்றாலும் இதன் திரைக்கதை நன்றாகவே வொர்க் அவுட் ஆகியிருக்கிறது.

காலத்தைக் காட்டுவதற்கு வழக்கமாக சினிமா போஸ்டர்களைப் பயன்படுத்துபவார்கள். இதிலும் தளபதி படத்தை அப்படி பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் என்னை ஈர்த்தது இன்னொரிடம். ஒரு ஃப்ளாஷ்பேக் காட்சியில் எம்.ஜி.ஆர் பெயரை கறுப்பு-சிவப்பு வண்ணத்தில் ஒரு ரிக்‌ஷாவில் எழுதியிருக்கிறார்கள். அதாவது அதிமுக உருவாகும் முன்பு நடந்தது அது.

யுட்யூப் வீடியோக்களில் கிரியேட்டிவிட்டி கூட ஒகே. ஆனால், டெக்னிக்கலாகச் சொதப்பும். இதில் தரம். ஒளிப்பதிவைவிட ஒலிப்பதிவின் துல்லியம் என்னைக் கவர்ந்தது. அரோல் கரோலியின் பின்னணி இசை பல இடங்களில் சினிமா போன்று அட்டகாசமாகவும், சில இடங்களில் டி.வி சீரியல் போன்றும் இருக்கிறது.

கெட்ட வார்த்தைகள் பிரச்னை இல்லையென்ற காலக்கட்டத்துக்கு வந்துவிட்டோம்தான். ஆனால், அதற்கென இப்படி எல்லோரையும், எல்லா சூழ்நிலைகளிலும் பேச வைப்பது நெருடுகிறது.அது இயல்பாகவும் இல்லை. பல இடங்களில் ஒட்டாமல்தான் இருக்கிறது. இந்தியில் எல்லாம் எப்படி எடுக்கிறார்கள் தெரியுமா எனக் கேட்காதீர்கள். இந்தியில் உறவு கொள்ளும் காட்சிகளில் இந்த சீரிஸில் இருப்பது போல் உடைகளைக் களையாமல் இருக்க மாட்டார்கள்.

அதிகாரவர்க்கம் அப்பாவிகளைப் பயன்படுத்திக்கொள்ளும்தான். அதற்காக, ஆட்டோ சங்கர் ஏதோ பலியாடு என்பது போல காட்டப்படும் க்ளைமேக்ஸ் மட்டும் எனக்கு உடன்பாடில்லை. மரணதண்டனைக்கு எதிரானவன் நான். அதைப் பற்றி சொல்லவில்லை. முடிவில் பார்வையாளருக்கு ஆட்டோ சங்கர் மீது இரக்கம் வரவைக்க முயலும் காட்சிகள் எனக்குப் பிடிக்கவில்லை.

தமிழ் வெப் சீரிஸ்களில் ஆட்டோ சங்கர் முக்கியமான தொடக்கமாக இருக்கும். ஒட்டுமொத்தக் குழுவுக்கும் பாராட்டுகள்.
_________

இனி வெப் சீரிஸ்கள் பற்றி…

ஒவ்வொரு வாரம் ஓர் அத்தியாயம் என வெளியாகும்போது தனித்தனி அத்தியாயமாக விடுவது சரி. ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக வெளியிடும்போது ஏன் 10 அத்தியாயங்கள்? அரை மணி நேரத்துக்கு ஒரு முறை டைட்டில் கார்டு பார்க்க போரடிக்கிறது. அடுத்த லிங்கைத் தேடி க்ளிக் செய்தால், இடைவேளை போல இடையூறாகவும் இருக்கிறது.

அத்தியாயங்களுக்குப் பேர் வைப்பது கூடுதல் சுவாரஸ்யம்தான். ஆனால், அதை ஏன் ஆங்கிலத்தில் வைக்கிறார்கள்? வரிவிலக்கு போல தூயத்தமிழில் மட்டுமே வைக்க சொல்லவில்லை.

மொத்தம் 5 மணி நேரத்துக்கு மேல். அப்படியென்றால் 2 தமிழ்ப்படங்கள் பார்க்கும் நேரம். அவ்வளவு நேரத்தைக் கேட்கும்போது, அத்தனை காட்சிகள் வேண்டுமில்லையா? ஆட்டோ சங்கர் அப்படியில்லை. இதையே இரண்டரை மணி நேரப்படமாக எடிட் செய்யலாம். அவ்வளவுதான் காட்சிகள். சீன்களின் நீளத்தை அதிகரிப்பது வெப் சீரிஸ் ஆகாது. ஒரு படத்துக்கு 100-120 சீன்கள் என்றால் இதில் 250 சீன்களாவது வேண்டும்.

KARKI BAVA