இன்ஷா அல்லாஹ் – விமர்சனம்

நடிப்பு: மோகன், மேக்னா, கவிஞர் விக்கிரமாதித்தன், பகவதி அம்மாள், அப்துல்சலாம், நரேன் பாலாஜி

இயக்கம்: சீர்காட்சி பக்கிள் பாண்டியன் பாஸ்கரன்

தயாரிப்பு: சாகுல் ஹமீது (நேசம் எண்டர்டெயின்மென்ட்)

‘இன்ஷா அல்லாஹ்’ என்கிற இரு சொற்கள் இஸ்லாமியர்களின் வாழ்க்கையுடன் பின்னணிப் பிணைந்தவை. ‘இறைவன் விரும்பினால்’ என்று பொருள்படும் இச்சொற்களையே தலைப்பாகச் சூட்டி, ‘இஸ்லாமிய வாழ்க்கை முறையை’ பேசும் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள்.

அமரர் தோப்பில் முகம்மது மீரான் எழுதிய ‘அன்பிற்கு முதுமையில்லை’ என்கிற சிறுகதையையும், எழுத்தாளர் பிர்தவுஸ் ராஜகுமாரன் எழுதிய ‘ரணம்’ என்கிற சிறுகதையும் இணைத்து இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு இஸ்லாமியரும் ஐந்து கடமைகளைத் தன் வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க வேண்டும். அப்படிப்பட்ட ஐந்து கடமைகளைச் செய்யத் தவறிய ஒருவருடைய இறப்பையும், கடமைகளை முழுமையாக நிறைவேற்றிய ஒருவருடைய இறப்பையும் ஒப்பிட்டுக் காட்டுகிறது கதை. இதற்குள் பல நிலைகளில் பல வயது கதாபாத்திரங்கள் திரைக்கதையைக் கட்டியெழுப்பியிருக்கின்றன.

ஆதரவற்று பிச்சை எடுத்துத் திரியும் முதிய தம்பதி, இந்து மதத்தை சேர்ந்த பணக்கார பெண்ணை காதலித்து மணந்த இஸ்லாம் வாலிபன் என்று கிளைக்கதை தொடர்கிறது.  காட்சிகள் எதுவும்  நேரடி வசனங்களால்  சொல்லப்படாமல் புரிதல் மூலமாக உணரும் வ்கையில் சீன்களை அமைத்திருக்கிறார்கள்.

விதவை பெண்களுக்கும். கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கும் புதிய சமுதாய அறக்கட்டளை  வீடுகள் கட்டி தருவது,  ஜீவ சாந்தி அமைப்பு ஆதரவற்ற பிணங்களை வேனில் சுமந்து சென்று அடக்கம் செய்வது அந்த பணி இந்து மதத்தினருக்கும் செய்வதை காட்சிகள் விளக்குகின்றன.இந்த சமூக பணிகளை சமுதாயத்துக்கு வெளிச்சம்போட்டு காட்டியிருக்கிறார் இயக்குனர் சீர்காட்சி பக்கிள் பாண்டியன் பாஸ்கரன்.

படத்தில் நாயகன் மோகன், அமரர் ஊர்தி ஓட்டுநராக வருகிறார். கவிஞர் விக்கிரமாதித்யன், தனது துணைவியார் பகவதி அம்மாளுடன் எளிய இஸ்லாமியத் தம்பதியாக நடித்துள்ளார்.

படத்தில் நாயகன் மோகன், அமரர் ஊர்தி ஓட்டுநராக வருகிறார். கவிஞர் விக்கிரமாதித்யன், தனது துணைவியார் பகவதி அம்மாளுடன் எளிய இஸ்லாமியத் தம்பதியாக நடித்துள்ளார்.

ஒவ்வொரு இஸ்லாமியருக்கும் ஹஜ் புனிதப் பயணம் செல்வது வாழ்நாள் லட்சியம். அப்படிப்பட்ட லட்சியத்துக்காகச் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த தன்னுடைய வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் ஓர் எளிய இஸ்லாமியப் பெண்ணின் திருமணச் செலவுக்காகத் தந்து உதவுகிறார் ஒரு இஸ்லாமியப் பெரியவர். அந்தக் கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசனின் மைத்துனர் அப்துல் சலாம் (சிவாஜியின் துணைவி கமலாவின் சகோதரர்)  நடித்திருக்கிறார் .

ஆனால், திரைப்படமாகப் பார்த்தால், இப்படக்குழுவுக்கு திரைமொழி வசப்படவில்லை என்றே தெரிகிறது. பட உருவாக்கத்தில் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்திருந்தால் மேலும் கூடுதலான பார்வையாளர்களை இப்படம் சென்றடைந்திருக்கும்.

‘இன்ஷா அல்லாஹ்’ – இஸ்லாமியரும், இஸ்லாமியரல்லாதாரும் பார்க்கத் தக்க படம்!