வாய்மை – விமர்சனம்

“மரண தண்டனை கூடாது” என்ற கருத்தை வலியுறுத்துவதற்காக, ’12 ஆஙகிரிமென்’ என்ற ஆங்கிலப்படத்தை உல்டா செய்து, பட்டி டிங்கரி பார்த்து எடுக்கப்பட்டிருக்கும் படம் ‘வாய்மை’.

கணவனை இளம்வயதிலேயே பறி கொடுத்த பூர்ணிமா பாக்யராஜ், தன் மகன் பிரித்வியை மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்குகிறார். பிரித்வி அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் கார்பெண்டராக வேலை செய்கிறார்.

அந்த அடுக்கு மாடி கட்டிடத்துக்கு எதிரே, அன்னாஹசாராவை நினைவூட்டுகிற மாதிரியான ஒரு சமூக சேவகர், ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இது நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சமூக சேவகர் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்படுகிறார்.

பிரித்வி வேலை செய்யும் கட்டிடத்திலிருந்து தான் அவர் சுடப்பட்டிருக்கிறார் என்பதை அறியும் போலீசார், அங்கு பிரிதிவி மட்டுமே இருப்பதால், அவரை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். அவருக்கும் கொலைக்கும் சம்பந்தமில்லை என்றபோதிலும், அவர்தான் குற்றவாளி என்று நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு, தூக்கிலிடப்பட்டு விடுகிறார்.

மகனை இழந்த சோகத்தில் இருக்கும் பூர்ணிமா பாக்யராஜையும் இந்த கொலைக்கு உடந்தை என போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் நிறுத்துகிறார்கள். நீதிபதி மற்றும் வக்கீல்கள் கேட்கும் எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் மௌனமாக இருக்கும் அவரை “தூக்கில் போட வேண்டும்” என்று ஒரு சாராரும், “கூடாது” என்று இன்னொரு சாராரும் கூறிவருகிறார்கள்.

சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை இந்தியாவில் ஒரு பெண்கூட தூக்கிலிடப்பட்டது கிடையாது என்பதால் குழப்பமடையும் நீதிபதி, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 12 பேரை நியமித்து, அவர்களிடம் பூர்ணிமாவுக்கு தூக்குத் தண்டனை வழங்கலாமா? கூடாதா? என முடிவெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறார்.

அதன்படி சாந்தனு பாக்யராஜ், தியாகராஜன், கவுண்டமணி, ராம்கி, முக்தா பானு, ஊர்வசி, மனோஜ் கே.பாரதி, பிரசாத், நமோ நாராயணா, வெங்கட், ரோஸ், அங்கிதா ஆகிய 12 பேர் கூடி விசாரிக்கிறார்கள்; விவாதிக்கிறார்கள். அவர்கள் என்ன முடிவுக்கு வருகிறார்கள் என்பது க்ளைமாக்ஸ்.

ஆரம்பத்தில் படம் காட்சிகளாக விரிந்தாலும், ஒருகட்டத்தில் விசாரணை என்ற பெயரில் ஒரே அறைக்குள் வந்து முடங்கிவிடுகிறது.. இருப்பினும், விசாரணை காட்சிகளும், தூக்குத் தண்டனை குறித்து ஒவ்வொருவரும் வைக்கும் முரணான கருத்துகளும் படத்தை சலிப்பு தட்டாமல் கொண்டு செல்கிறது.

படத்தின் நாயகனான சாந்தனு பாக்யராஜ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கவுண்டமணியின் கவுண்ட்டர் வசனங்கள் பெரிதாக இல்லாவிட்டாலும், இவரின் அறிமுகமே ரசிகர்களிடம் பெரிய கைதட்டலை பெற்றுவிடுகிறது. படத்தில் வரும் ஏனையோரும் பாத்திரம் உணர்ந்து அளவாக நடித்திருக்கிறார்கள்.

படத்தின் மொத்த நீளமே ஒன்றரை மணி நேரம்தான். இந்த கதைக்கு இந்த நேரம் போதுமானது என்பதை புரிந்து படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் செந்தில்குமார். பாராட்டுக்கள்.

‘வாய்மை’ – படம் சொல்லும் கருத்துக்காக பார்க்கலாம்!

Read previous post:
0a1i
விஜய் சேதுபதியின் “ஆண்டவன் கட்டளை’ – டீஸர்

Close