இருமுகன் – விமர்சனம்

மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகம். 70 வயது மதிக்கத்தக்க சீன முதியவர் ஒருவர், கையில் பாஸ்போர்ட்டுடன் தளர்ந்த நடையில் வருகிறார். உள்ளே வந்ததும், பாஸ்போர்ட்டை கீழே நழுவ விடுகிறார். ஆஸ்துமா நோயாளிகள் மூச்சுத் திணறும்போது பயன்படுத்துவார்களே… அது போன்ற இன்ஹேலரை எடுத்து, திறந்த வாய்முன் வைத்து அழுத்துகிறார். அவர் ஸ்பிரே செய்த ஊக்கமருந்து தொண்டை வழியே உடலுக்குள் பரவ, அடுத்த வினாடியே புதுபலம் பெற்று சிலை போல் விறைத்து நிற்கிறார். பெரியவருக்கு என்ன ஆச்சு என்ற கேள்வியுடன் அருகே வரும் காவல்துறையினரையும், ஏனையோரையும் முதியவர் அரக்க பலத்துடன் தாக்கி, தூக்கி வீசி, மளமளவென கொன்று குவிக்கிறார். எல்லாம் 5 நிமிடங்கள் தான். அதன்பின் நோவு வந்த கோழி போல மயங்கி சுருண்டு விழுந்துவிடுகிறார்.

கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருக்கும் இந்த காட்சியை, இந்தியாவிலுள்ள ‘ரா’ உளவுத்துறை தலைமையகத்தில், மாலிக் (நாசர்) தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்கிறார்கள். முதியவரின் பின்கழுத்தில் டாட்டூவாக வரையப்பட்டிருக்கும் காதல் சின்னம் காட்டிக்கொடுக்கிறது. இது லவ் (வில்லன் விக்ரம்) என்ற ஊக்கமருந்து மாஃபியாவின் வேலை தான் என்ற முடிவுக்கு வரும் ‘ரா’ தலைமை அதிகாரி மாலிக், அகிலனை அழைத்து வரச் சொல்லுகிறார்.

நீண்ட தாடியும் விரக்தியான கண்களுமாய் வருகிறான் முன்னாள் ‘ரா’ அதிகாரி அகிலன் (நாயகன் விக்ரம்). நான்கு ஆண்டுகளுக்குமுன் அவனது காதல் மனைவியும், சக ‘ரா’ அதிகாரியுமான மீராவை (நயன்தாராவை) லவ் கொலை செய்துவிட, வெகுண்டெழும் அகிலன், லவ்வையும், லவ்வின் நிழலுலக சாம்ராஜ்ஜியத்தையும் அழித்தொழித்துவிட்டு, ‘ரா’ அமைப்பிலிருந்து விலகி போய்விட்டான். ஆனால், அவன் அழித்துவிட்டதாக நினைத்த்துக்கொண்டிருக்கும் லவ் இன்னும் உயிரோடு இருப்பது அவனுக்கு இப்போது தெரியவருகிறது.

லவ்வையும், லவ்வின் நிழலுலகத்தையும் அழித்து நிர்மூலமாக்கும் பொறுப்பை, அகிலன் மற்றும் ‘ரா’ ஜூனியர் அதிகாரி ஆயுஷி (நித்யா மேனன்) ஆகியோரிடம் ஒப்படைக்கிறார் ‘ரா’ தலைமை அதிகாரி மாலிக். லவ்வை தேடி கண்டுபிடிப்பதற்காக அகிலனும், ஆயுஷியும் மலேசியா வந்து இறங்குகிறார்கள். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதை த்ரில்லாகவும், திடீர் திருப்பங்களுடனும், ஹைடெக் தகவல்களுடன் விறுவிறுப்பாக சொல்லிச் செல்கிறது மீதிக்கதை.

முதன்முதலாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் விக்ரம்,  நாயகனாக அகிலன், வில்லனாக லவ் என இரண்டு கதாபாத்திரங்களில் வருகிறார். ‘ரா’ உளவுத்துறை அதிகாரி அகிலனாக கம்பீரம் காட்டுவது, நுண்ணறிவுடன் முடிவெடுப்பது, அதிரடி ஆக்ஷனில் சுறுசுறுப்பாய் இயங்குவது, காதலில் மயங்குவது என காட்சிக்கு காட்சி வெளுத்துக் கட்டியிருக்கிறார் விக்ரம். நீண்ட தாடியுடன் கூடிய கெட்டப் அவரை படுஸ்மார்ட்டாக காட்டுகிறது.

லவ் கதாபாத்திரத்தில் பெண்மை கலந்த ஆணாக, திருநங்கையாக வரும் விக்ரம், பார்வையாலும், நடை, உடை, பாவனையாலும், வசன உச்சரிப்பாலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார். பிரமாதமான மருத்துவ அறிவும், அதேநேரத்தில் கொடிய தீய எண்ணங்களும் கொண்ட இந்த பாத்திரத்தின் வடிவமைப்பு, மனதை கொள்ளை கொள்கிறது.

கொஞ்சம் கிளாமர், கொஞ்சம் நடிப்பு என கலவையாக வரும் நயன்தாராவின் கதாபாத்திரம், திருப்பங்களுடன் கதையை நகர்த்திச் செல்ல சிறப்பாக உதவியிருக்கிறது. அதிலும், இடைவேளை ட்விஸ்ட் செம. இடைவேளைக்குப் பிறகு வரும் அவரது காட்சிகள் செம செம. ஒரு கட்டத்தில் அதிரடி சண்டைக்கு தயாராகிறார் நயன்தாரா. ஆனால், சண்டைக் காட்சி கட்! ஏனோ…?

ஜூனியர் ‘ரா’ அதிகாரியாக வரும் நித்யா மேனன சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரை லவ் அணுஅணுவாக கொல்லும் காட்சியில் மொத்த அனுதாபத்தையும் அள்ளிக்கொள்கிறார். தம்பி ராமய்யா, நாசர், ரித்விகா, கருணாகரன் உள்ளிட்டோர் தங்கள் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

மேக்கிங்கில் அசத்தியிருக்கிறார் இயக்குனர் ஆனந்த் ஷங்கர். கதாபாத்திரங்களை நேர்த்தியாய் வடிவமைப்பதிலும் மெனக்கெட்டிருக்கிறார். ஆனால் திரைக்கதை அமைப்பதில் தான் சரிந்துவிட்டார். ஒன்றரை லட்சம் ஓட்டைகள்; லாஜிக் மீறல்கள்!“அதிரடி ஆக்ஷன் என்பதே லாஜிக் இல்லாதது தான்; அதில் லாஜிக் இருந்தா என்ன, இல்லாவிட்டால் தான் என்ன” என இயக்குனர் முடிவு செய்துவிட்டாரோ, என்னவோ…!

ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவில் மலேசியா மற்றும் காஷ்மீர் அழகு மெருகேறி தெரிகிறது. சேஸிங் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளில் புகுந்து விளையாடியிருக்கிறார்.

ஹாரிஸ் ஜெயராஜின் பின்னணி இசையும், பாடல்களும் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது. குறிப்பாக ‘ஹெலனா’ பாடல் கேட்க இனிமையாக இருப்பதோடு, அதை அழகாக காட்சிப்படுத்தி இன்னும் கூடுதல் அழகு சேர்த்திருக்கிறார்கள்.

அன்பறிவு-ரவிவர்மா கூட்டணியில் அமைந்த சண்டைக் காட்சிகள் மிரள வைக்கின்றன. சுரேஷ் செல்வராஜின் அரங்குகள் – குறிப்பாக, லவ்வின் ஆய்வுக்கூடம் பிரமாண்டம்!

‘இருமுகன்’ – அதிரடி ஆக்ஷன் விரும்பிகளுக்கு செம விருந்து!

Read previous post:
0a1f
வாய்மை – விமர்சனம்

“மரண தண்டனை கூடாது” என்ற கருத்தை வலியுறுத்துவதற்காக, ’12 ஆஙகிரிமென்’ என்ற ஆங்கிலப்படத்தை உல்டா செய்து, பட்டி டிங்கரி பார்த்து எடுக்கப்பட்டிருக்கும் படம் ‘வாய்மை’. கணவனை இளம்வயதிலேயே

Close