திலீபன் மகேந்திரன் மீது கொலைவெறி தாக்குதல்: மருத்துவமனையில் அனுமதி!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஒருதலை காதல் காரணமாக இக்கொலையை செய்ததாக நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

ஆனால், இக்கொலைக்கும் ராம்குமாருக்கும் சம்பந்தம் இல்லை என்றும், இது ஆணவக்கொலை என்றும், சுவாதியின் உறவினர்கள் மற்றும் கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட சில இந்துத்துவவாதிகளுக்கு இக்கொலையில் தொடர்பு இருக்கிறது என்றும் சமூக செயல்பாட்டாளர் திலீபன் மகேந்திரன் தனது முகநூல் பக்கத்தில் எழுதிவந்தார்.

இது குறித்து கருப்பு முருகானந்தம் அளித்த புகாரின் அடிப்படையில் திலீபன் கைது செய்யப்பட்டு, 12 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

ஜாமீனில் வெளியே வந்த திலீபன், சுவாதி கொலையின் குற்றவாளிகள் யார் என்பதை தெரியப்படுத்துவேன் எனவும், இந்த கொலை குறித்த ரகசியங்களை இன்னும் சொல்லுவேன் எனவும் தைரியமாக கூறினார்.

இந்நிலையில் நேற்று திருவாரூர் நீதிமன்றம் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் திலீபன் தாக்கப்பட்டுள்ளார். அவருடன் சேர்ந்து வழக்கறிஞர் ஒருவரும் தாக்கப்பட்டுள்ளார். “சுவாதி கொலை வழக்கு குறித்து நீ பேசக்கூடாது” என்று கூறியபடியே இந்த கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

கடுமையான தாக்குதலுக்கு ஆளாகி மயக்கமடைந்து கிடந்த திலீபனையும், வழக்கறிஞரையும் மீட்ட வழக்கறிஞர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் திலீபன் மகேந்திரன் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.