நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து மதிமுக தொண்டர் தீக்குளிப்பு: வைகோ கண்ணீர்!

தேனி மாவட்டம், போடி அருகே உள்ள பொட்டிபுரம் மலைப்பகுதியில் இயற்கைச் சூழலையும், சுற்றுச்சூழலையும் நாசமாக்கக் கூடிய நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க இந்திய ஒன்றிய மோடி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மக்களுக்கு இத்திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை பழங்காநத்தத்தில் இன்று நடைபயணம் தொடங்கினார். அவரது பயணத்தை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பழங்காநத்தத்தில் இருந்து நடைபயணம் தொடங்கியபோது, அங்கிருந்த சிவகாசியைச் சேர்ந்த மதிமுக தொண்டர் ரவி என்பவர் திடீரென தீக்குளித்தார்.

இதைப் பார்த்த மதிமுக தொண்டர்களும், மல்லை சத்யா உள்ளிட்டோரும் விரைந்து வந்து தீயை அணைத்தனர். வைகோ கண்முன்னே தீக்குளிப்பு சம்பவம் நடந்தது. இதைப் பார்த்து வைகோ கொதித்துப்போனார். “ஏன் இப்படி உயிரை மாய்த்துக் கொள்கிறீர்கள்? நாம் போராட வேண்டும். இப்படிச் செய்யலாமா?” என கண்கலங்க கேட்டார்.

“காவல் துறைக்கு ஒரு வேண்டுகோள். அந்தப் பையனை அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள்” என்று கூறி கண் கலங்கினார். “எப்போதும் சிரித்த முகத்துடன் வலம் வருவான் அந்தத் தம்பி. இயற்கை தாயே, அந்த தம்பியை காப்பாற்று” என்று கண்ணீர் வடித்தார். “நான் எவ்வளவோ முறை கேட்டுக்கொண்டிருக்கிறேன். இவ்வாறு தீக்குளிக்காதீர்கள். உங்களை மன்றாடி கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். ரவி இதுபோன்று செய்தது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறினார்.

மதிமுக தொண்டர்கள் உடனடியாக ரவியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.