நாசகார நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக வைகோ நடைபயணம்: ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

தேனி மாவட்டம், போடி அருகே உள்ள பொட்டிபுரம் மலைப்பகுதியில் இயற்கைச் சூழலையும், சுற்றுச்சூழலையும் நாசமாக்கக் கூடிய நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க இந்திய ஒன்றிய மோடி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மக்களுக்கு இத்திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை பழங்காநத்தத்தில் இன்று நடைபயணம் தொடங்கினார். அவரது பயணத்தை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வைகோ பேசுகையில், ”பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இத்திட்டத்தை எதிர்க்கிறார்கள். நியூட்ரினோ ஆய்வு மையம் ஏற்படுத்தப்பட்டால் தேனி மாவட்டம் சுடுகாடாகி விடும்.

யுனெஸ்கோ அமைப்பு மேற்கு தொடர்ச்சி மலையை புராதனச் சின்னமாக ஏற்கெனவே அறிவித்துள்ளது. தமிழர்கள் ஒன்று சேர்ந்து செயல்பட்டால், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதை தடுத்து நிறுத்தலாம்.

நமக்குள் சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் இதில் ஒன்று சேர்ந்து போராடுவது தமிழர்களின் கடமையாகும். தமிழர்களையும், தமிழ் இனத்தையும் மத்திய மோடி அரசு வஞ்சித்து அழிக்க துடிக்கிறது.

மகாராஷ்டிரா, குஜராத் மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது. இந்த மலைப்பகுதிகளில் நியூட்ரினோ ஆய்வு மையத்தை மோடி செயல்படுத்த வேண்டியது தானே. நாங்கள் தான் அழிய வேண்டுமா?” என வைகோ ஆவேசமாகப் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ்  தலைவர் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின்   மாநில தலைவர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், மற்றும் பழ.நெடுமாறன், சுப.உதயகுமார், வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வைகோவின் நடைபயணத்தில் நூற்றுக்கணக்கானோர் அவருடன் செல்கிறார்கள். பழங்காநத்தத்தில் இருந்து புறப்பட்ட நடைபயணம் மதுரை பை-பாஸ் ரோடு, காள வாசல் சந்திப்பு சென்றடைந்தது. அங்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நடைபயணம் இன்று மாலை தேனி மெயின் ரோடு விராட்டிபத்து வழியாக செக்கானூரணி  சென்றடைகிறது. வைகோ அங்கு பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

நாளை உசிலம்பட்டி, அதை தொடர்ந்து ஆண்டிப்பட்டி, போடி, கூடலூர் செல்லும் வைகோ வருகிற 9ஆம் தேதி தனது 10-வது நடைபயணத்தை கம்பத்தில் நிறைவு செய்கிறார்.

மதுரை, தேனி மாவட்டங்களில் 250 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் செல்லும் வைகோ நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக பொதுமக்களின் ஆதரவை திரட்டும் வகையில் தனது போராட்ட வியூகத்தை அமைத்துள்ளார். நடைபயணத்தின்போது வைகோவுக்கு அந்தந்த பகுதிகளில் விவசாய சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு அளிக்கவும், அவரது நடைபயணத்தில் பங்கேற்கவும் திட்டமிட்டுள்ளனர்.