சகாயம் ஐ.ஏ.எஸ். வழிகாட்டுதலில் மருந்தகம்: ரூ.1500 மருந்து ரூ.150க்கு விற்பனை!

நடுத்தர வயது எனப்படும் 35 வயதை எட்டிவிட்டாலே, எவ்வளவு உணவு சாப்பிடுகிறோமோ அதே அளவுக்கு கை நிறைய மாத்திரைகளை அள்ளி விழுங்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எந்த அளவுக்கு இயற்கைச் சூழலையும், சமூகச் சூழலையும் கெடுத்து வைத்திருக்கிறோமோ, அதே அளவுக்கு நம் உடல்நலத்தையும் நாசப்படுத்தி வைத்திருக்கிறோம்.

நமது இன்றைய வாழ்க்கை முறை காரணமாக சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற பலப் பல நோய்களைச் சுமந்து திரிய வேண்டிய அவலம் ஏற்பட்டிருக்கிறது. மருந்து – மாத்திரை கொடுத்து இந்நோயகளை கட்டுப்படுத்தலாமே தவிர, குணப்படுத்த முடியாது என்ற நிலை இருப்பதால் ஒவ்வொருவரும் மரண பரியந்தம் இந்த நோய்களுடனும், இவற்றை கட்டுப்படுத்தும் மருந்து – மாத்திரைகளுடனும் தான்  வாழ்ந்தாக வேண்டும். இதனால் தனியார் மருத்துவமனைகளும், மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும் செமத்தையாக கல்லா கட்டி வருகின்றன.

மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் மருத்துவர்களை “கவனிக்க” வேண்டிய விதத்தில் கவனித்து, தங்களின் விலை உயர்ந்த மருந்துகளை நோயாளிகளுக்கு பரிந்துரைக்க வைக்கின்றன.

ரூ.100க்கு கிடைக்கும் மருந்து ரூ.1000 விலையிலும் உள்ளது. இந்த மருந்துகளை தயாரித்த நிறுவனம் வெவ்வேறாக இருக்கலாம், மருந்தின் பெயர் வெவ்வேறாக இருக்கலாம், ஆனால், அதனுள் இருக்கும் உட்மருந்து (Drug) என்பது ஒன்றாகத்தான் இருக்கும். ஆனால், மருத்துவர்கள் இந்த உட்மருந்துகளின் பெயரை எழுதாமல், நிறுவனம் வைத்த பெயரை மட்டுமே நோயாளிகளுக்கு பரிந்துரைப்பதால் தான், மருந்துகளுக்கு மாதாமாதம் பல ஆயிரங்களை செலவழிக்க நேரிடுகிறது..

இந்த செலவுகளை குறைப்பதற்காக சகயாம் ஐ.ஏ.எஸ்-ன் வழிகாட்டுதலின்படி இயங்கும் ’மக்கள் பாதை’ என்ற அமைப்பினர் ஒன்றிணைந்து ’மக்கள் மருந்தகம்’ என்ற மருந்து விற்பனை மையத்தை தொடங்கியுள்ளார்கள். இதன் மூலம் தரமான மருந்துகளை குறைவான விலையில் மக்களுக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர்.

சிவகங்கையில் தொடங்கப்பட்டுள்ள இந்த மருந்து விற்பனை மையத்தின் மூலம் மற்ற மருந்து கடைகளை விட மிக மிக குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர். உதாரணமாக, இதய நோயாளி ஒருவர் மாதம் ரூ.1500 க்கு மருந்து வாங்கினால், அதே மருந்தை இவர்கள் ரூ.150 விற்பனை செய்வார்களாம்.

மேலும், தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் இதுபோன்ற ’மக்கள் மருந்தகம்’ மருந்து விற்பனை மையத்தை துவங்க திட்டமிட்டுள்ள இந்த அமைப்பினர், பிறருக்கு விருப்பம் இருந்தால் அவர்களை வரவேற்பதாகவும் கூறியுள்ளனர். அப்படி பிற மாவட்டங்களில் மக்கள் மருந்தகம் துவங்க விருப்பம் உள்ளவர்கள் 9367777700  என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.