“என் நீண்டநாள் ஆர்வம் நிறைவேறுகிறது!” – ஜெயம் ரவி

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை வைத்துள்ளார் ஜெயம் ரவி. கடந்த வருடம் இவரது நடிப்பில் ‘ரோமியோ ஜூலியட்’, ‘சகலகலா வல்லவன்’, ‘தனி ஒருவன்’, ‘பூலோகம்’ ஆகிய 4 படங்கள் வெளியாயின. அவற்றில் மூன்று படங்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இந்த வருடம் வெளியான ‘மிருதன்’ படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

ஜெயம் ரவி தற்போது  பிரபு தேவா தயாரிக்கும் ‘போகன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை இயக்கிய லட்சுமணன் இயக்கி வருகிறார். இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஹன்சிகாவும், முக்கிய கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமியும் நடித்து வருகிறார்கள். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது.

இதை அடுத்து இவர் அமலாபால் கணவர் விஜய் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார். விஜய் தற்போது பிரபுதேவா – தமன்னாவை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார். இப்படம் முடியும் தருவாயில் உள்ளது. இதன்பிறகு ஜெயம் ரவியை வைத்து படம் இயக்க இருக்கிறார் விஜய்.

விஜய்  இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ள பெயரிடப்படாத படத்தின் மற்ற நடிகர் – நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள்  தேர்வு  நடைபெற்று இருக்கிறது.

“நீண்டநாட்களாகவே எனக்கு இயக்குனர் விஜய்யுன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது. அதற்கான நேரமும், காலமும் அமையவில்லை என்பதுதான் குறை. அவரது பாணி படங்கள் எனக்கு பொருத்தமாக அமையும் என்பதில் எனக்கு தீவிர நம்பிக்கை. இந்தப் படம் ரசிகர்களுக்கு தேவையான எல்லா அம்சங்களும் பொருந்திய, வணிக ரீதியாக பெரும் வெற்றி பெறக் கூடிய படமாக இருக்கும் என்பதில்  நாங்கள் இருவருமே உறுதியாக இருக்கிறோம்” என்கிறார் ஜெயம் ரவி.