கவண் – விமர்சனம்

மகாகவி பாரதி சொன்ன ரௌத்திரம் பழகிய சமூக ஊடக பதிவர்களால், “விபச்சார ஊடகங்கள்” என்று ‘அன்புடன்’ அழைக்கப்படும் கார்ப்பரேட் முதலாளிய ஊடகங்களை – செய்தி மற்றும் பொழுதுபோக்கு சேனல்களை – ‘வச்சு செஞ்சிருக்கிற’ படம் தான் ‘கவண்’

ஊடகக் கல்வி பயிலும் மாணவர்களான நாயகன் விஜய் சேதுபதியும், நாயகி மடோனா செபாஸ்டியனும் படத்தின் ஆரம்பத்திலேயே காதலர்களாக அறிமுகம் ஆகிறார்கள். ஆனால், கல்வியாண்டு முடியும் சமயத்தில் பிணக்கு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விடுகிறார்கள்.

ஊடகத்துறை மீது அளப்பரிய காதல் கொண்ட விஜய் சேதுபதிக்கு, வடநாட்டு சேட்டு அக்‌ஷய் சய்கல் நடத்தி வரும் பிரபல தமிழ் தொலைக்காட்சி சேனலான ‘ஜென் 1’ டிவியில் வேலை கிடைக்கிறது.

விஜய் சேதுபதி முதல் நாள் வேலைக்குச் செல்லும்போதே, அரசியல்வாதியும் தொழிலதிபருமான போஸ் வெங்கட் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் ஏற்படும் பெரிய கலவரத்தை தன் செல்போனில் காட்சிப்படுத்தி, சேனல் அலுவலகத்தில் சமர்ப்பித்து நல்ல பெயர் வாங்குகிறார். ஆனால், அக்கலவரச் செய்தியை, சேனல் முதலாளியின் நயவஞ்சக விருப்பத்துக்கு ஏற்ப முதலில் ஒரு விதமாகவும், பின்னர் அதற்கு நேர்மாறாக இன்னொரு விதமாகவும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள்.

அதே சேனலில் தான் விஜய் சேதுபதியின் முன்னாள் காதலியான மடோனா செபாஸ்டியனும் வேலை செய்து வருகிறார். நிறைய ஊடலுக்குப்பின் சுமூக உறவு ஏற்பட, இருவரும் மீண்டும் காதலர்கள் ஆகிறார்கள்.

இந்நிலையில், அரசியல்வாதியும் தொழிலதிபருமான போஸ் வெங்கட்டுக்கு சொந்தமான தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு நீர், குடிநீர் ஏரியில் கலந்து மாசு ஏற்படுத்துகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முஸ்லிம் இளைஞரான விக்ராந்த் மற்றும் அவரது இந்துமத தோழி ஆகியோர் அங்கம் வகிக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு போராட்டம் நடத்துகிறது.

இதனால் கடுப்பாகும் போஸ் வெங்கட், அந்த போராட்டத்தை  முறியடிப்பதற்காக, தனது ஆட்களை அனுப்பி, விக்ராந்தின் தோழியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்க, அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இந்த தகவல் அப்பெண்ணின் தோழியான மடோனாவிற்கு தெரிய வர, அவர் விஜய் சேதுபதியுடன் மருத்துவ்மனைக்குச் சென்று, உண்மையில் நடந்தது என்ன என்ற அந்த பெண்ணின் பேட்டியை ரகசியமாக வீடியோவில் பதிவு செய்து, தொலைக்காட்சியில் வெளியிடுகிறார்கள்.

இதனால் ஆத்திரப்படும் போஸ் வெங்கட், அந்த சேனல் முதலாளியை சந்தித்து, சில ‘டீல்’ பேசி சமரசம் ஆகிறார். இதனையடுத்து, ‘ஜென் 1’ தொலைக்காட்சியில் போஸ் வெங்கட்டுக்கு ஆதரவாகவும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு எதிராகவும் செய்தி வெளியிடப்படுகிறது.

அடுத்து, ‘முதல்வன்’ பட பாணியில் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி ஒன்று நடக்கிறது. இதில் விஜய் சேதுபதி, போஸ் வெங்கட்டை பேட்டி எடுக்கிறார். அந்த பேட்டியில் அவருக்கு எதிரான கேள்விகளை கேட்கக் கூடாது என்றும், அவரது புகழ் பாடும் பேட்டியாக எடுக்க வேண்டும் என்றும் மேலிடம் உத்தரவு போடுகிறது. இந்நிலையில், அந்த பேட்டியை நேரலையில் பார்க்கும் விக்ராந்தும், அவரது தோழியும் விஜய் சேதுபதியை தொடர்பு கொண்டு கதற, ஏற்கனவே நிர்வாகத்தின் மீது கடுப்பில் இருக்கும் விஜய் சேதுபதி, பிரேக்குக்குப்பின் பேட்டியை தொடருகையில், போஸ் வெங்கட்டை அம்பலப்படுத்தும் விதத்தில் சரமாரியாக கேள்விக்கணைகளை தொடுக்கிறார். இதனால் அதிர்ச்சியடையும் நிர்வாகம் நிகழ்ச்சியை ஒளிபரப்பாமல் நிறுத்தி விடுகிறது.

இதனையடுத்து, தனது வேலையை உதறித் தள்ளும் விஜய் சேதுபதியும், மடோனாவும், எந்த ஒரு பிரச்சனையையும் துணிச்சலுடன் சந்திக்கும் டி.ராஜேந்தர் நடத்தி வரும் ஒரு சிறிய சேனலில் வேலைக்கு சேருகிறார்கள். அந்த சேனல் என்னும் கவண் மூலம் போஸ் வெங்கட் மற்றும் ‘ஜென் 1’ சேனல் முதலாளி ஆகியோரை விஜய் சேதுபதி எப்படி வீழ்த்தினார் என்பது மீதிக்கதை.

செய்தியாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கான கடமை உணர்ந்து செயல்பட்டிருக்கிறார் விஜய் சேதுபதி. காதல் கைகூட தொடர்ந்து முயற்சிப்பது, ஆண்களின் சபலத்தை சொல்வது, உண்மைக்காக கோபப்படுவது, நேர்மைக்காக மிதிப்பது, தூக்கத்திலும் செய்தி குறித்த தீவிரத்தில் உளறுவது, சிறிய விளம்பர இடைவேளைக்குப் பிறகு சந்திப்போம் என சமாளிப்பது என கிடைத்த எல்லா இடங்களில் குறையில்லாமல் ஸ்கோர் செய்கிறார்.

மடோனா செபாஸ்டியன் நிறைவான பங்களிப்பை வழங்கியிருக்கிறார். விஜய் சேதுபதிக்கு ஆலோசனை சொல்லும் இடத்தில் தேர்ந்த நடிப்பைத் தந்திருக்கிறார்.

டி.ராஜேந்தர் சில இடங்களில் எதுகை, மோனையோடு பேசுவது வழக்கமான பாணியாக இருந்தாலும், அதற்குப் பிறகு கதாபாத்திரத்தின் தேவை உணர்ந்து நடித்திருக்கிறார்.

பாண்டியராஜன், ஜெகன், விக்ராந்த், பவர் ஸ்டார் சீனிவாசன், நாசர், போஸ் வெங்கட், தர்ஷனா ராஜேந்திரன், ஃபைவ் ஸ்டார் கிருஷ்ணா ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்புகள்.

ஆகாஷ் தீப் சாய்கல் நடிப்பில் கூடுதல் அக்கறை செலுத்தியிருக்கலாம். வசன உச்சரிப்பு, ஹேர் ஸ்டைல் என எதுவும் அவருக்கு ஒத்துழைக்கவில்லை.

லாப வெறி பிடித்தலையும் கார்ப்பரேட் முதலாளிய மீடியாவின் கோர முகத்தை துணிச்சலாக காட்டியதற்காக இயக்குநர் கே.வி.ஆனந்தை பாராட்டலாம். பிரேக்கிங் நியூஸ், பரபரப்புப் பசி, முந்தித் தரும் பிரத்யேக செய்திகள் என தொலைக்காட்சிகள் அணுகும் விதத்தை இயக்குநர் கே.வி.ஆனந்த் சரியாக சொல்ல முயற்சித்திருக்கிறார்.

ரியாலிட்டி ஷோவில் ஒரு குழுவை வெளியேற்றும்போது பரிதாப உணர்வைத் தூண்ட வைப்பது, அதற்காக அடித்து அழ வைப்பது, வெறுமனே வாய்ப்பந்தலில் வம்பிழுப்பது என ரியாலிட்டி ஷோவில் நடக்கும் டிராமாவை அச்சு பிசகாமல் அள்ளி வந்திருக்கிறார்.

எதிர்பாராத சமயத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் சொல்லும் திறமை மீதான கருத்து, விஜய் சேதுபதியின் டயலாக் டெலிவரியை நக்கல் செய்வது, விளம்பர நிறுவனத்தின் பிரதிநிதியிடம் நிதானம் கடைபிடிக்கும் விஜய் சேதுபதியின் அணுகுமுறை, நாசரின் வருகை, ஜெகன் உள்ளிட்ட குழுவினரின் திடீர் பல்டி ஆகியவை ரசனை அத்தியாயங்கள்.

”சோஷியல் மீடியாவுல உக்காந்துகிட்டு பக்கம் பக்கமா கருத்து சொல்றதால பத்து பைசாவுக்கு பிரயோஜனம் கிடையாது, ரத்தமும் சதையுமா ரோட்டுல இறங்கிப் போராடணும்”, ”நீ எதையாவது மாத்தணும்னு நினைச்சா மாத்த முடிஞ்ச உயரத்துக்கு நீ போகணும்”, ”நம்ம ஜனங்க கொஞ்சம் அதிகமாவே தூங்குவாங்க, ஆனா முழிச்சுக்க வேண்டிய நேரத்துல கரெக்டா முழிச்சிப்பாங்க, அப்படி முழிச்சிக்கிட்டா நீ எல்லாம் காணாமப் போயிடுவ”, ”கக்கூஸ் கப்படிச்சா பாலூத்தியா கழுவுறீங்க, ஆசிட் தேவை தானே”, “அதுக்காக ஆசிட்டை வெச்சு குண்டி கழுவ முடியாது” போன்ற சுபா – கபிலன் வைரமுத்துவின் வசனங்கள் படத்துக்கு வலிமை சேர்க்கின்றன.

அபிநந்தன் ராமானுஜத்தின் கேமரா, தொலைக்காட்சி உலகத்தினை நம் கண்முன் நிறுத்துகிறது. ஹிப் ஹாப் தமிழா இசையில் “கண்ணம்மா ராக்” பாடல் மட்டும் கவன ஈர்ப்பு. மற்ற பாடல்கள் எதுவும் மனதில் பதியவில்லை. ஆண்டனி எடிட்டிங்கில் இன்னும் சில இடங்களில், குறிப்பாக இரண்டாம் பாதியில், கண்டிப்பு காட்டியிருக்கலாம்.

`கவண்’ – துணிச்சலான நெத்தியடி!

 

Read previous post:
0
டோரா – விமர்சனம்

ஹீரோயின் சப்ஜெக்ட்டில், முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்த ‘மாயா’ திகில் படம் வெற்றி பெற்றதால், அவர் நடித்துள்ள ‘டோரா’ திகில் படத்துக்கும் எதிர்பார்ப்பு எகிறியது. இந்த எதிர்பார்ப்பை

Close