ராதாமோகன் இயக்கத்தில் அருள்நிதி – விவேக் கூட்டணி!

ராதாமோகன் இயக்கவிருக்கும் புதிய படத்தில் அருள்நிதி நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான படம் ‘சேதுபதி’. இப்படத்தின் மூலமாக வான்சன் மூவிஸ் நிறுவனம் தமிழ் திரையுலகில் படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தது. ‘சேதுபதி’ படத்தைத் தொடர்ந்து, தற்போது 2 படங்களைத் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறது வான்சன் மூவிஸ் நிறுவனம்.

’உப்பு கருவாடு’ படத்தைத் தொடர்ந்து ராதாமோகன் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தை தயாரிக்க இருக்கிறது வான்சன் மூவிஸ். இப்படத்தில் அருள்நிதி மற்றும் விவேக் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்க இருக்கிறார். மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அதனைத் தொடர்ந்து சந்தானத்துடன் பல படங்களில் வசனகர்த்தாவாக பணியாற்றிய மகேந்திரன் ராஜமணி இயக்குநராக அறிமுகமாகும் படத்தையும் வான்சன் மூவிஸ் தயாரிக்க இருக்கிறது. இப்படத்தில் ஜெய் நாயகனாக நடிக்க, கருணாகரன், காளி வெங்கட், நவின், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.

மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் தயாநிதி இசையமைக்க இருக்கிறார். இப்படத்துக்கு நாயகி மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.