“இறைவி’ பார்த்தேன்!” – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்

‘இறைவி’ பார்த்தேன். வெகுநாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல படம். படத்தில் வேகம் இல்லை… முரண் இருக்கிறது… முழுமை இல்லை… என்று சில விமர்சனங்கள் வந்திருந்தாலும்… நான் திறந்த மனதுடன்தான் பார்த்தேன்.

பெண்ணின் உணர்வுகளை எல்லாக் காலக்கட்டங்களிலும், அனைத்து மதத்தினரும், அனைத்து வகையினரும் மதிக்காமல், பொருட்படுத்தாமல், அவர்களை ஒரு டிஷ்யூ காகிதம் அளவிற்கு சுயநலத்துடன் பாலுணர்வுக்கும், வாரிசு சுமக்கவும் மட்டுமே பயன்படுத்தி வருகிறது இந்த ஆண் வர்க்கம்! இதைத்தான் சில பெண்களையும், ஆண்களையும் வைத்து கதையாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.

நடிப்பில் அத்தனை பேரும் பின்னியிருக்கிறார்கள். ஆனாலும் குறிப்பிட வேண்டியவர்கள் முதலில் எஸ்.ஜே.சூர்யா. இந்த அற்புதமான நடிகர் கொஞ்ச காலம் இயக்கத்தைத் தள்ளி வைத்து நடிக்கலாம். விஜய் சேதுபதி, அஞ்சலி இருவரும் நடிக்கவில்லை. வாழ்ந்திருக்கிறார்கள்.
அஞ்சலி, மற்றும் விஜய் சேதுபதியின் கட்டில் காதலி – இருவரும் பேசும் சில வசனங்கள் சிலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் அந்தப் பாத்திரங்கள் அங்கே மனசிலிருந்து உண்மை பேசுகின்றன…

“நம்ம அந்த மூணெழுத்து வார்த்தைக்காகத் தான் பழகிட்டிருக்கோம். அதை நான் ஒரு பொண்ணு சொன்னா கெட்ட வார்த்தை…”

”உங்க பையன் எங்கிட்ட வர்றதுக்கு முன்னாடி கன்னிப் பையனா? காமெடி பண்ணாதிங்க. நீங்க ரொம்ப பழசா இருக்கிங்க…”

“கல்யாணம் ஆனப்பறம்கூட இதுவரைக்கும் எங்கிட்ட யாரும் ஐ லவ் யூன்னு சொன்னதில்ல. நீதான் முதல் தடவையா சொல்லிருக்கே. யோசிக்கிறேன்.”

”ஆமாம்.. நானும் அவனை லவ் பண்ணேன். ஆனா சொன்னதில்ல.”

“அவன்கூட படுத்தனான்னு கேக்க உனக்கு என்ன யோக்யதை இருக்கு? இந்தக் கேள்விக்கு நான் பதிலே சொல்ல மாட்டேன்.”

“பொறுத்துப் பொறுத்துப் போறதுக்கு நாம் என்ன பொம்பளைங்களா? ஆ..ம்பளை! ஆண்! நெடில்!”

போன்ற வசனங்களில் உயிரோட்டமும், உண்மையும், கம்பீரமும் இருக்கிறது. கிளைமாக்ஸ் வசனத்தில் ஆண்களை அத்தனை சாடினாலும் தியேட்டரில் அந்த ஆண்களிடமிருந்தே கைத்தட்டல் வாங்குகிறார் கார்த்திக் சுப்புராஜ்.

சிலைத் திருட்டை பாபி சிம்ஹாவும், சிற்பி ராதாரவியுமே நியாயப்படுத்துவதும்…. சமூக அக்கறையுடன் படம் எடுத்திருக்கும் ரோஷக்கார தன்மானமிக்க இயக்குனர் எஸ்.ஜே சூர்யா சிலைத் திருட்டை ஆதரித்து அதற்கு உடந்தையாக இருப்பதும்.. பாபி சிம்ஹா இறந்ததும் எங்கோ போய் நன்றாக இரு என்று மகனை அனுப்பிவிட்டு அப்பாவே எஸ்.ஜே சூர்யாவிடம் கொலையைச் சொல்வதும்.. அத்தனை ஆண்களுமே அயோக்கியர்கள் போலவும்.. அத்தனை பெண்களுமே பாவப்பட்டவர்கள் போலவும் பொதுப்படுத்தியிருப்பதும்… திரைக்கதையின் ப்லவீனங்கள்.

 இரண்டு குரூப் மோதல்.. இரண்டு பாடல்கள் ஒட்டாமல் துருத்துகின்றன.

பின்னணி இசை புதிய அனுபவம் தருகிறது. பாடல்களில்விட பின்னணி இசையில் சந்தோஷ் நாராயணன் ஸ்கோர் செய்திருக்கிறார். ஒளிப்பதிவும் அருமை.

பெண்ணிய சிந்தனையாளர்கள் நூற்றாண்டு காலமாய் தங்கள் படைப்புகளின் மூலம் சொல்லிவரும் கருத்துதான் என்றாலும் அதை நவீன காலத்தில் ஒரு முறை வெள்ளித்திரையில் அடிக்கோடிட்டுக் காட்டியிருப்பதற்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

 – பட்டுக்கோட்டை பிரபாகர்

எழுத்தாளர்