லத்தி – விமர்சனம்

நடிப்பு: விஷால், சுனைனா, ரமணா, பிரபு, மாஸ்டர் லிரிஷ் ராகவ், தலைவாசல் விஜய், முனிஷ்காந்த், வினோத் சாகர் மற்றும் பலர்

இயக்கம்: ஏ.வினோத்குமார்

ஒளிப்பதிவு: பாலசுப்ரமணியெம், பாலகிருஷ்ணா

இசை: யுவன் சங்கர் ராஜா

தயாரிப்பு: ‘ராணா புரொடக்சன்ஸ்’ ரமணா – நந்தா

பத்திரிகை தொடர்பு: ஜான்சன்

பொதுவாக கமர்ஷியல் சினிமாவில், ‘போலீஸ் ஸ்டோரி’ ஜானர் என்றாலே நாயகன் டைரக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ், போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர், உதவி கமிஷனர், சூப்பிரண்டு, துணை சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் போன்ற உயர் அதிகார பதவி வகிப்பவராக வருவது தான் வாடிக்கை. ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக, போலீஸ் துறையின் அடித்தட்டில் இருக்கும் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் நாயகன் வருகிறார் என்பதே ‘லத்தி’ படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிடுகிறது. ஆம், இது ஒரு கான்ஸ்டபிளின் கதை.

உயர் போலீஸ் அதிகாரிகளின் ஆயுதம் துப்பாக்கி என்றால், சாதாரண கான்ஸ்டபிள்களின் ஆயுதம் லத்தி. கும்பலைக் கலைக்கவும், குற்றவாளியை குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்யவும் பயன்படும் இந்த லத்தியை மையமாகக் கொண்டு இக்கதை கட்டமைக்கப்பட்டுள்ளது.

0a1e

சென்னை நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றுகிறார் முருகானந்தம் (விஷால்).  நர்ஸ் வேலை பார்க்கும் அழகான மனைவி (சுனைனா), பள்ளியில் படிக்கும் அருமையான மகன் (மாஸ்டர் லிரிஷ் ராகவ்) சகிதம் அன்பான குடும்பஸ்தனாகவும், பொறுப்புள்ள கான்ஸ்டபிளாகவும் வாழ்ந்துவருகிறார்.

ஒரு நாள் இரவு. ஒரு பெரிய இடத்து இளைஞன் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்துவதாக ஒரு பெண், கான்ஸ்டபிள் முருகானந்தத்திடம் புகார் கொடுக்கிறார். இதனால் அந்த இளைஞனை விசாரித்து எச்சரித்து அனுப்புகிறார் முருகானந்தம். மறுநாள் அந்த பெண் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இது தொடர்பாக, அந்த பெண்ணை காதலிக்குமாறு வற்புறுத்திய இளைஞனை விசாரணை செய்கின்றனர். அந்த இளைஞன் அக்குற்றத்தை நான் செய்யவில்லை என்று மறுக்கவே அவனை முருகானந்தம் அடித்து உதைக்கிறார். இந்த நிலையில் அந்த பெண் மரண வாக்குமூலம் கொடுத்துவிட்டு இறந்து விடுகிறார். ஆனால் அவர் சொன்ன அடையாளங்கள் அந்த இளைஞனுடன் ஒத்து போகாத காரணத்தினால், முருகானந்தம் மீது அந்த இளைஞன் தரப்பினர் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் செய்ய, முருகானந்தம் ஒரு வருடம் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்.

 பணியிடை நீக்கம் காரணமாக 6 மாதங்களாக வீட்டிலிருக்கும் முருகானந்தம், சஸ்பென்ஷனை கேன்சல் செய்து மீண்டும் பணியில் சேர பல உயர் அதிகாரிகளை அணுகுகிறார். பலன் இல்லை. இந்நிலையில், டைரக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸாக இருக்கும் பிரபு மூலம் அவருக்கு உதவி கிடைக்கிறது. மீண்டும் பணிக்குச் செல்கிறார்.

இதற்கிடையில், டி.ஜி.பி. பிரபுவின் மகளிடம், பிரபல தாதா சுறாவின் மகன் வெள்ளை (ரமணா) தகாத முறையில் நடந்துகொள்கிறார். இது குறித்து பிரபுவிடம் மகள் சொல்லியும், அதிகார பலம் பொருந்திய வெள்ளையை பிரபுவால் எதுவும் செய்ய முடியவில்லை.

ஒருநாள் தற்செயலாகப் பிரபுவிடம் சிக்குகிறார் வெள்ளை. அந்த நேரத்தில் பிரபுவுக்குக் கையில் அடிபட்டிருப்பதால், வெள்ளையை அடிக்க முருகானந்தத்தின் உதவியை நாடுகிறார் பிரபு. ‘லத்தி’ ஸ்பெஷலிஸ்டான முருகானந்தம் வந்து, வெள்ளையை அடித்துத் தொங்கவிடுகிறார். அப்போது தான், வெள்ளையின் உடலில் உள்ள ஒரு அடையாளத்தைக் காண்கிறார் முருகானந்தம். முன்பு முருகானந்தத்துக்கு பிரச்சினையைத் தந்த பாலியல் பலாத்கார வழக்கில், வெள்ளை தான் பிரதான குற்றவாளி என்பது தெரிய வருகிறது.

இதற்கிடையில், அடையாளம் தெரியாமல் இருக்க, முகமூடி அணிந்து தன்னை தாக்கிய முருகானந்தத்தை எப்படியோ அடையாளம் கண்டுகொள்கிறார் வெள்ளை. இதன்பின், முருகானந்தத்தை வெள்ளை என்ன செய்தார்? வெள்ளையை முருகானந்தம் என்ன செய்தார்? என்பது ‘லத்தி’ படத்தின் மீதிக்கதை.

0a1d

சாதாரண நடுத்தர வர்க்கக் குடும்பத்தை சேர்ந்த கான்ஸ்டபிள் முருகானந்தமாக வரும் விஷால், அக்கதாபாத்திரத்துக்கு ஏற்ற யதார்த்தமான நடிப்பை துல்லியமாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு குடும்பத் தலைவனாக சென்டிமெண்ட் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். அதிரடி ஆக்சன் காட்டுவது விஷாலுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. இந்த படத்தில் அதை தனித்தன்மையோடு மெய்சிலிர்க்கும் வண்ணம் செய்துகாட்டி பாராட்டுப் பெறுகிறார். விஷாலுக்கு இது பேர் சொல்லும் படமாக இருக்கும் என்பது உறுதி.

சுனைனா தத்ரூபமாக ஒரு கான்ஸ்டபிள் மனைவியாக வாழ்ந்திருக்கிறார். சிறுவன் லிரிஷ் ராகவ் நடிப்பு நிறைவாக இருக்கிறது. முரட்டு வில்லனாக வரும் ரமணா மிரட்டியிருக்கிறார். பிரபு, தலைவாசல் விஜய், முனிஷ்காந்த், வினோத் சாகர் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறார்கள்.

அறிமுக இயக்குனர் வினோத்குமார் விறுவிறுப்பாக திரைக்கதை அமைத்து, கலைஞர்களை நேர்த்தியாக வேலை வாங்கி, சிறப்பான முறையில் படமாக்கியிருக்கிறார். அவருக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்து பணியாற்றியிருக்கிறார் சண்டை பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன். திரையரங்கில் ஆக்சன் காட்சிகளுக்குக் கிடைக்கும் கைதட்டல்கள், இவர்களது உழைப்புக்கும், மெனக்கெடலுக்கும் கிடைக்கும் பரிசு.

பாலசுப்ரமணியெம் மற்றும் பாலகிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், யுவன் சங்கர் ராஜாவின் இசையும் படத்தின் தரத்தை உயர்த்த உதவியுள்ளன.

‘லத்தி’ – அதிரடி ஆக்சன் விருந்து; மீண்டும் மீண்டும் கண்டு களிக்கலாம்!