பன்முக பரிமாணம் கொண்ட அறிஞர் தொ.பரமசிவன்

பேராசிரியர் தொ.பரமசிவனுக்குப் ‘பண்பாட்டு ஆய்வாளர்’ என்னும் ஒரே அடையாளத்தை மட்டும் வழங்கி நிறைவடைந்துவிட முடியாது. அவர் மறைந்து இரண்டு ஆண்டுகள் நிறைவுறும் இச்சமயத்தில், அவரது தேவையை நாம் ஒவ்வொரு நாளும் உணர்ந்தபடி இருக்கிறோம்.

பெரியாரையும் பெரியாழ்வாரையும் பற்றி ஒரே சமயத்தில் ஆழமாகப் பேசக்கூடிய ஓர் அறிஞர். அவர் தன்னைப் ‘பெரியாரியல்வாதி’ என்றே அடையாளப்படுத்திவந்தார். ஆனால், அவரது ஆய்வுமுறை மார்க்சியத்தின் அடிப்படையில் அமைந்தது ஆகும். பொருளியல் அடிப்படைகளின் மீதுதான் பண்பாட்டு அசைவுகள் கட்டப்படுகின்றன என்பது அவரது நிலைப்பாடு.

‘பெரியாரிஸ்ட்டாக இருந்துகொண்டு தெய்வங்களைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறீர்களே?’ என்ற கேள்விக்கு, அவர் இப்படிப் பதிலளித்தார்: “சமூக அதிகாரத்தையும் ஆன்மிக அதிகாரத்தையும் தக்கவைத்துக்கொள்ள பார்ப்பனர்கள் உருவாக்கி வைத்திருந்த பெருந்தெய்வங்களையே பெரியார் குறிவைத்துத் தாக்கினார். அதிகார வலிமையில்லாத நாட்டார் தெய்வங்களைப் பற்றியோ கோயில்களைப் பற்றியோ அவர் கவலைப்படவில்லை.

அதிகாரத்தை எதிர்த்து அடிமைத்தளையை அறுத்தெறியத்தான் அவர் போராடினார். என்னுடைய எழுத்துக்களிலும் அதிகாரத்தை அடையாளம் காட்டுவதே நோக்கமாக இருந்தது. குறிப்பாக சமண, பௌத்தர்களிடமிருந்து வைதீகத்தால் திருடப்பட்ட பெருங்கோயில்கள் பற்றித்தான் எழுதியிருக்கிறேன். நாட்டார் தெய்வங்களைப் பொறுத்தமட்டில் அவற்றின் தோற்றக் காரணங்களையும் வழிபாடுகளையும் மக்கள் திரளின் நம்பிக்கைகள் சார்ந்து எழுதியுள்ளேன். அவை மறைமுகமான நாத்திகம்தான்.”

ஆவணங்களையும் கல்வெட்டுக்களையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மட்டுமே ஆய்வுலகம் கட்டிக்கொண்டிருந்தபோது, அவற்றைப் புறந்தள்ளித் தெருவில் இறங்கிய முதல் அறிஞர் தொ.ப.தான். மக்களுடனான உரையாடல்களை ஆதாரமாகக் கொள்ளும் வழிமுறைக்கு அவர் வித்திட்டார். பேராசிரியர் நா.வானமாமலை தொடங்கி வைத்த நாட்டாரியல் ஆய்வுகளை அடுத்த தளத்துக்கு எடுத்துச் சென்றவர்களாக ஆ.சிவசுப்பிரமணியனும் தொ.பரமசிவனும் நமக்குக் கிடைத்தார்கள்.

அடிக்குறிப்புகளோடும் ஆதார நூற்பட்டியல்களோடும் இல்லாத அவரது கட்டுரைகளை ஏற்க, ஆய்வறிஞர்கள் எனப்பட்ட குழாமுக்கு முடியாது போயிருக்கலாம். ஆனால், வாசகர்களும் சமூகச் செயல்பாட்டாளர்களும் தொ.ப.வின் எழுத்துக்களைக் கொண்டாடித்தீர்த்தனர் என்றுதான் சொல்ல வேண்டும். பேராசிரியர் அ.மார்க்ஸ் குறிப்பிட்டதுபோல, அவரது வாசகர்களே அவரது ரசிகர்களாயினர்.

தெருவிலே நிற்கும் ஒரு கல்லுக்கு முன்னால் நின்று வரலாற்றையும் பண்பாட்டையும் பேசும் அவரது வார்த்தைகளில் சொக்கித்தான் கிடந்தோம். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராக அவர் பணியாற்றிய காலத்தில், நானும் திருநெல்வேலியில் பணியாற்றியதால் அன்றாடம் அவரைச் சந்தித்து உரையாடும் பெருவாய்ப்பைச் சில ஆண்டுகள் பெற்றிருந்தேன். அந்த நாட்களில்தான் அவர் நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் ‘நியாயப் பரிபாலப் பெரும்பள்ளி’யைக் ‘கண்டுபிடித்து’த் திரும்பியிருந்தார்.

பகவதி அம்மன் கோயிலாக இந்துக்கள் வழிபடும் அக்கோயில் ஒரு சமணப் பள்ளி என்பதே அவர் கண்டுவந்தது. அதைப் பற்றியே எங்களிடம் பேசிக்கொண்டிருந்தார். எங்களில் பலரை சிங்கிகுளம் பள்ளிக்கு அழைத்துச் சென்றும் காட்டினார்; அது அவரது வழக்கம். பின்னர் ‘இதுவே சனநாயகம்’ என்கிற கட்டுரையாகவும் அந்தப் பேச்சுக்களை எழுதினார்.

‘பொ.ஆ. 7ஆம் நூற்றாண்டில் மதுரையில் ஆயிரம் சமணர்களைக் கழுவேற்றிச் சம்பந்தர் ‘புண்ணியம்’ தேடிக்கொண்ட பிறகும், தமிழ்நாட்டின் தென்பகுதியில் சமணம் 12ஆம் நூற்றாண்டுவரை உயிரோடிருந்தது. நெல்லை மாவட்டத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காடுகளிலும் வயல்களிலும் சிதறியும் உடைந்தும் கிடக்கும் தீர்த்தங்கரர்களின் திருமேனிகளே இதற்குச் சான்றுகளாகும்.

நெல்லை மாவட்டத்திலிருந்து சமணம் ‘தொலைந்துபோய்’ 700 ஆண்டுகள் ஆன பிறகும், இந்தக் கோயில் மட்டும் உயிரோடு நிற்கிறது. கோயிலைச் சுற்றி ஆராய்ந்தபோது, தீர்த்தங்கரர் இருக்கும் கருவறையைச் சுற்றி வெளிப்புறமாக இருக்கும் கல்வெட்டு நமக்கு வரலாற்று உண்மையைச் சொல்கிறது. அந்த ஒற்றைக் கல்வெட்டிலிருந்து நமக்குக் கிடைத்த செய்தி: இது ஒரு சமணப் பள்ளி (சமணர்கள் கோயில் என்று சொல்ல மாட்டார்கள்).

இம்மலையின் பெயர் ஜினகிரி. முள்ளிநாட்டுத் திடியூரான இராசராச நல்லூரில் உள்ள இந்தப் பள்ளியின் பெயர் ‘நியாய பரிபாலப் பெரும்பள்ளி’. இப்பள்ளி ‘எனக்கு நல்ல, பெருமானான அண்ணன் தமிழப் பல்லவரையன்’ பெயரால் எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்த்தங்கரர்களில் இவர் யார் என்று அறியத் திருமேனியில் தடயங்கள் கிடைக்கவில்லை.

நெல்லை மாவட்டப் பகுதியில் அம்பிகா யட்சி என்ற இசக்கியம்மன் வழிபாடே இன்றும் செல்வாக்குடன் திகழ்கின்றது. அம்பிகாவைப் பணிமகளாகக் கொண்டவர் 23ஆவது தீர்த்தங்கரராகிய நேமிநாதர் என்பவராவார். தீர்த்தங்கரருக்குச் சன்னதி கட்டப்பட்டபோது துணைச் சன்னதியாக இருந்த யட்சியின் சன்னதி, இன்று முதல் சன்னதியாகவும் தீர்த்தங்கரரின் கருவறை துணைச் சன்னதியாகவும் மக்களால் வணங்கப் பெறுகின்றன. இக்கோயிலில் ரத்தப் பலி கிடையாது. கொடியேற்றம், திருவிழா கிடையாது. மக்கள் தாங்கள் விரும்பும் நாளில் பகவதி அம்மனுக்குப் பொங்கல் வைக்கின்றனர்.

தாங்கள் வணங்குகின்ற பகவதியம்மன் ஒரு சமணத் தெய்வம் என்பதும் முனீஸ்வரர் என்ற பெயரால் அறியப்படும் தீர்த்தங்கரர் சமண மதத்தவர் என்பதும் வழிபடுகின்ற ‘இந்து’ மக்களுக்குத் தெரியாது. ஆனபோதும் சமணப் பள்ளி ஒன்று தாய்த் தெய்வக் கோயிலாகக் கருதப்பட்டு, அந்நிலப் பகுதியிலுள்ள எல்லா மக்களாலும் பேணப்படுகின்றது; வழிபடப்படுகின்றது.

ஆதரவற்ற பிள்ளையைத் தன் பிள்ளையாக எடுத்து வளர்த்துக் குடிப்பெருக்கம் செய்வதில் எளிய மக்களுக்கு எந்தத் தடையுமில்லை. அப்படித்தான் சிங்கிகுளம் மக்கள் சமணப் பள்ளியை, பகவதி அம்மன் கோயிலாக்கி வாழ வைத்திருக்கிறார்கள். அடுத்தவர் வழிபாட்டிடத்தை இடிப்பதும் அழிப்பதும், அரசர்களும் அமைச்சர்களும் அதிகாரிகளும் செய்கின்ற வேலை என்பதே அன்றும் இன்றும் வரலாறு. ஜனநாயக உணர்வுள்ள எளிய மக்கள் அதனை ஒருபோதும் செய்ய மாட்டார்கள். சிங்கிகுளம் ‘நியாய பரிபாலப் பெரும்பள்ளி’ நமக்குச் சொல்லும் செய்தி இதுதான். (‘இதுவே சனநாயகம்’ கட்டுரையிலிருந்து…)

தொ.ப. போல இப்படிச் சொல்ல யார் இருக்கிறார்கள் இப்போது? களத்திலிருந்து வரலாற்றுக்கும் அரசியலுக்கும் நம்மை அழைத்துச் சென்ற பேராசான் அவர். வரலாற்றை மேலிருந்து பார்க்காமல் அடித்தள மக்கள் மத்தியில் நின்று, கீழிருந்து வரலாற்றைப் பேசியவர். மதப் பகைமை என்பது மக்களிடம் இல்லை. அது மேலிருந்து கட்டப்படுவது என்பதைத்தான் மேற்கண்ட பகவதி அம்மன் கோயில் வாசலில் நின்று அவர் உரக்கப் பேசுகிறார்.

பண்பாட்டுத் தளத்தில் மோசடிகளும் திரிப்பு வேலைகளும் நடக்கின்ற இந்நாட்களில், பேராசிரியர் தொ.ப. போல, பொட்டில் அடித்தாற்போலப் பேசுகிற ‘உண்மை அறிஞர்கள்’ நம் சமூகத்துக்கு முன்னெப்போதையும்விட இப்போதுதான் தேவைப்படுகிறார்கள்.

கல்விப்புலத்துக்கு உள்ளே இருந்துகொண்டு தெருவைப் பார்த்துப் பேசியவர். தெருவில் நின்றுகொண்டு கல்விச்சாலை ஆய்வகங்களை நோக்கிப் பேசியவர் என்கிற தொ.ப.வின் இரு பரிமாணங்கள் அபூர்வமானவை; அவசியமானவை. வரும் தலைமுறை அறிஞர்களால் வளர்த்தெடுக்கப்பட வேண்டியவை!

(டிசம்பர் 24: தொ.பரமசிவன் நினைவு நாள்)

.தமிழ்ச்செல்வன், எழுத்தாளர் , பண்பாட்டுச் செயல்பாட்டாளர்,

தொடர்புக்கு: tamizh53@gmail.com

To Read in English: Tho. Paramasivan, a multi-faceted researcher

Courtesy: hindutamil.in