வெந்து தணிந்தது காடு – விமர்சனம்

நடிப்பு: சிம்பு, சித்தி இத்வானி, ராதிகா சரத்குமார், நீரஜ் மாதவ், அப்புக்குட்டி, ஜாஃபர், பவா செல்லத்துரை மற்றும் பலர்

இயக்கம்: கவுதம் வாசுதேவ் மேனன்

தயாரிப்பு: ‘வேல்ஸ் நிறுவனம்’ சார்பில் ஐசரி கணேஷ்

இசை: ஏ.ஆர்.ரஹ்மான்

ஒளிப்பதிவு: சித்தார்த்

படத்தொகுப்பு: ஆண்டனி

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா & ரேகா

கதையின் நாயகன், இருபது வயது மதிக்கத் தக்க முத்து (சிம்பு) தனது அம்மா (ராதிகா சரத்குமார்), தங்கை ஆகியோருடன் தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான திருநெல்வேலியில் உள்ள கிராமத்தில் வசித்து வருகிறான். அங்கு காட்டை காவல் காக்கும் வேலை செய்து வருகிறான். ஒருநாள் காடு தீப்பிடித்து எரிந்துவிடுகிறது. முத்துவிடம் காட்டின் உரிமையாளர் நஷ்ட ஈடு கேட்க, அவரை கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறான் முத்து. இதை கண்டு முத்துவின் அம்மா அதிர்ச்சி அடைகிறாள். தன் மகன் கொலைகாரன் ஆகிவிடுவான் என்று ஏற்கனவே ஜாதகத்தில் இருப்பதால் அஞ்சும் அவள், அவனை வெளியூருக்கு அனுப்ப முடிவு செய்கிறாள்.

முத்துவை அழைத்து வந்து, அவனது தாய்மாமாவிடம் (பவா செல்லத்துரை) ஒப்படைக்கிறாள். மும்பையில் ‘இசக்கி பரோட்டா கடை’யில் வேலை பார்க்கும் அவர், லீவில் வந்திருக்கிறார். முத்துவை தன்னுடன் மும்பைக்கு அழைத்துச் செல்ல தயாராகும் தாய்மாமா, எதிர்பாராதவிதமாக தற்கொலை செய்துகொள்கிறார்.

தாய்மாமா கொடுத்த கடிதத்துடன் மும்பைக்கு வரும் முத்து, ’இசக்கி பரோட்டா கடை’யில் பணியில் சேர்ந்து, அங்கேயே தங்கி, சமையல் கற்றுக்கொள்கிறான். அப்போது பாவை (சித்தி இத்தானி) என்ற இருபத்தைந்து வயது இளம்பெண்ணை தற்செயலாக சந்தித்து காதல் கொள்கிறான்.

பின்னர், தான் தங்கி பணி செய்யும் ‘இசக்கி பரோட்டா கடை’ வெறும் பரோட்டா கடை மட்டும் அல்ல, அது கூலிக்கு கொலைகள் செய்யும் ’கேங்ஸ்டர் இடம்’ என்பதை தெரிந்துகொள்ளும் முத்து, அங்கிருந்து வெளியேற முயலும்போது, எதிர் கேங்ஸ்டர் அணி கடைக்குள் புகுந்து தாக்குதல் நடத்துகிறது. அவர்களிடமிருந்து தப்பிக்க முத்து துப்பாக்கியை எடுத்து அவர்கள் அனைவரையும் சரமாரியாக சுட்டு வீழ்த்துகிறான். இதனால் அவன் என்னென்ன பின்விளைவுகளைச் சந்திக்கிறான்? அவற்றை எப்படி சமாளிக்கிறான்? என்பது ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் மீதிக்கதை.0a1c

கதையின் நாயகனாக, இருபது வயது முத்துவாக நடித்திருக்கும் சிம்பு, முற்றிலும் வித்தியாசமாக சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அருவருப்பூட்டும் அலட்டல் எதுவுமின்றி இயல்பாக நடித்து அசத்தியிருக்கிறார்.

நாயகியாக, இருபத்தைந்து வயது பாவையாக நடித்திருக்கும் சித்தி இத்தானி தமிழ் திரையுலகுக்கு நல்வரவு. தன் அழகாலும், நடிப்பாலும் பார்வையாளர்களைச் சுண்டி இழுத்துவிட்டார்.

பட்டிக்காட்டு அம்மாவாக வரும் ராதிகா சரத்குமார் தன் அனுபவ நடிப்பால் முத்திரை பதித்துள்ளார்.

நீரஜ் மாதவ், அப்புக்குட்டி, ஜாஃபர் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்கள் அனைவரும் தத்தமது கதாபாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

கதை என்று பார்த்தால், எழுத்தாளர் ஜெயமோகன் ஒன்றும் பெரிதாக வெட்டி முறித்துவிடவில்லை. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’ படத்தைத் தழுவி, அங்கும் இங்கும் ‘மானே’. ‘தேனே’ சேர்த்து கதை விட்டிருக்கிறார். வழக்கம் போல் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் காதல் ட்ராக் காட்சியமைப்பிலும், வசனத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார். திருநெல்வேலி வட்டார மொழிவழக்கை அப்படியே பயன்படுத்துவதில் கண்ணும் கருத்துமாக இருந்திருக்கிறார்கள். படத்தின் ஆரம்பம், இடைவேளை, கிளைமாக்ஸ் காட்சிகளில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் டச் தெரிகிறது.

ஏ.ஆர்.ரஹ்மானின் பாடலிசை ஓ.கே. ரகம். ஆனால், பின்னணி இசை அமைத்தது ரஹ்மான் தானா என சந்தேகிக்கும் அளவுக்கு படுசுமாராக இருக்கிறது. படத்தின் மூன்று மணி நேர நீளம் அயர்ச்சியைத் தருகிறது. ஆண்டனி உள்ளிட்ட படத் தொகுப்பாளர்களே… வாங்குற கூலிக்கு வேலை செய்யுங்கப்பா…! ஒளிப்பதிவாளர் சித்தார்த் அத்தியாவசியமான சில காட்சிகளிலாவது கூடுதலாக சில விளக்குகளைப் பயன்படுத்தியிருக்கலாம்.

‘வெந்து தணிந்தது காடு’ – ஒருமுறை பார்க்கலாம்!