மு.ராஜேந்திரன் எழுதிய “காலா பாணி’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது

2022ஆம் ஆண்டுக்கான தமிழ்மொழிக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு, ‘காலா பாணி: நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை’ என்ற நாவல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நாவலை மதுரை மாவட்டம் வடகரையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மு.ராஜேந்திரன் எழுதியுள்ளார்.

சாகித்ய அகாடமி விருதுக்கான சிறந்த நாவலாக ‘காலா பாணி’யை ஜி.திலகவதி, கலாபிரியா, ஆர்.வெங்கடேஷ் ஆகியோரைக் கொண்ட நடுவர் குழு தேர்வு செய்துள்ளது.

ஆங்கிலேயருக்கு எதிரான இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தொடங்கி வைத்தது தென்தமிழகம். ஆங்கிலேயர்கள் தங்களுடன் மோதுபவர்களுக்கு மிகுந்த அச்சத்தை உருவாக்க, போராளிகளைத் தூக்கிலிட்டார்கள். 1802ஆம் ஆண்டு போராளிகளை முதன்முறையாக நாடு கடத்தினார்கள். இவ்விதம் நாடு கடத்துவதை ‘காலா பாணி’ என்று ஆங்கிலேயர்கள் அழைத்தார்கள்.

தென்தமிழகத்திலிருந்து சிவகங்கை அரசர் வேங்கை பெரிய உடையணத் தேவரும், போராளிகள் 71 பேரும் பினாங்குக்கு நாடு கடத்தப்பட்டார்கள். 73 நாட்கள் நீடித்த கடுமையான கடல் பயணத்திற்குப் பிறகு, இந்த அரசியல் கைதிகள் பினாங்கில் சிறை வைக்கப்பட்டார்கள். பெரிய உடையணத் தேவரை மட்டும் பினாங்கிலிருந்து சுமத்திரா தீவிற்கு மாற்றினார்கள். அங்கு மால்பரோ கோட்டையில் சிறை வைக்கப்பட்ட அவர், நான்கு மாதங்களில் இறந்துபோனார்.

தூத்துக்குடியில் இருந்து போராளிகள் கப்பலில் அழைத்துச் செல்லப்படுவதில் தொடங்கி, மால்பரோ கோட்டையின் சிறையில் சிவகங்கை அரசர் உயிர் விடுவது வரையிலான சம்பவங்களை துயரகாவியமாக ‘காலா பாணி’ நாவலில் எழுதியுள்ளார் மு.ராஜேந்திரன். கப்பல் பயணமும், போராளிகளின் துயரமும் படிப்பவரை கண்ணீர் விட வைக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது.